முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜயகாந்த் பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஆக. 26 - விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி நந்தனம் ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 15 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சதீஷ் நடத்தி வைத்தார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது 61-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதையொட்டி நேற்று காலை 7 மணி அளவில் கோயம்பேட்டில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபட்டார். அவருடன் மனைவி பிரேமலதா, மகன்கள் சண்முகவேல் பாண்டியன், விஜய்பிரபாகரன் ஆகியோரும் சென்று இருந்தனர்.

பின்னர் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு வந்தார். தொண்டர்கள் திரண்டு வந்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். ஒவ்வொரு வரையும் தனித்தனியாக சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். ஆளுயர மாலை, மலர் கிரீடம் ஆகியவற்றை அணிவித்து தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டெலிபோனில் விஜயகாந்தை தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் மத்திய மந்திரி ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஆரூண் எம்.பி., காங்கிரஸ் செயலாளர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், நடிகர் விஜய் ஆகியோர் போனில் வாழ்த்து தெரிவித்தனர்.

விஜயகாந்தின் மைத்துனரும் இளைஞர் அணி செயலாளருமான எல்.கே.சுதீஷ், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் பார்த்தசாரதி, சந்திரகுமார், பாடி முருகேசன், முத்துக்குமார், அருண் சுப்பிரமணியன், சுபா ரவி, ஆகியோரும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளரிடம் விஜயகாந்த் கூறியதாவது:-

கேள்வி:- உங்கள் பிறந்தநாள் செய்தியாக தொண்டர்களுக்கு என்ன சொல்கிறீர்கள்? 

 பதில்: இல்லாதவர்களுக்கு இயன்றதை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் எனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஏற்கனவே இதுபற்றி நேற்று விரிவாக தெரிவித்து விட்டேன். 

 கே: பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க-காங்கிரஸ் கூட்டணி வரலாம் என்ற பேச்சு அடிபடுகிறதே? 

 ப: முதலில் தேர்தல் வரட்டும். அப்போது கூட்டணி பற்றி முடிவு செய்வோம். 

 இவ்வாறு அவர் கூறினார்.

 சென்னை மாவட்ட செயலாளர்கள் வி.என்.ராஜன், செந்தாமரைக் கண்ணன், ஏ.எம்.காமராஜ், யுவராஜ், வர்த்தக அணி செயலாளர் எஸ்.எஸ்.எஸ்.யூ.சந்திரன், சவுந்திர பாண்டியன், மலர் மன்னன், பி.முகமது ஜான், ராயபுரம் வெ.பாபு, கூடல் ரமேஷ், ஆயிரம் விளக்கு கோவிந்தன், காளிசரன், சி.கே.கோவிந்தன், அன்னல்ஜே, தி.நகர் ஆர்.சுரேஷ், வெங்கடேசன், அம்பத்தூர் ஆறுமுகம், செந்தூர்மணி, அம்பத்தூர் செ.ஆஸ்டின் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்