முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலந்தாய்வு நடத்த வைகோ வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 9 மே 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, மே.10 - தொழில் படிப்புகளான என்ஜினீயரிங், மருத்துவம் போன்ற உயர்நிலை படிப்புகளுக்கான கலந்தாய்வை திருச்சி, மதுரை, கோவை நகரங்களிலும் நடத்த வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார். இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மேனிலைத் (பிளஸ்2) தேர்வில் வெற்றி பெற்று நிறைந்த நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கியுள்ள மாணவக் கண்மணிகளுக்கு ம.தி.மு.க. சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்த மாணவர்கள், அதன்பொருட்டு கவலைகொண்டு தங்கள் எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்ளாமல், தன்னம்பிக்கையுடன் இதனை எதிர்கொள்ள வேண்டும். தோல்வியை, வெற்றிக்கான படிக்கட்டுகள் ஆக்கிக் கொண்டு, வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உறுதி ஏற்க வேண்டும். அதன்மூலம், தங்கள் பெற்றோருக்கும், பிறந்த பொன்னாட்டுக்கும் பெருமை தேடித் தர வேண்டும்.

தமிழக அரசின் உயர்கல்வித்துறை நடத்துகின்ற கலந்தாய்வு, தற்போது சென்னையில் மட்டுமே நடைபெறுகிறது. 

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட மாணவர்கள் மட்டும் அன்றி, அவர்களுடன் பெற்றோர் அல்லது உறவினர்களும் சென்னைக்கு வந்து தங்கி, உயர்நிலை கல்விச் சேர்க்கைக் கலந்தாய்வில் பங்கு ஏற்பது, வீண் அலைச்சலையும், கால விரயத்தையும், பேருந்துக் கட்டணம், விடுதிக் கட்டணம் என மிகுந்த பொருட் செலவையும் ஏற்படுத்துகிறது. அறை எடுத்துத் தங்க வசதி இல்லாதவர்கள், காலையில் சென்னைக்கு வந்து இறங்கி, அங்கும் இங்கும் அலைந்து, மாலையிலேயே ஊர் திரும்புகின்றனர்.  

இதனால், ஏழை எளிய, நடுத்தர மாணவர்கள் பெரும் இன்னலுக்கு

ஆளாகின்றனர். தகவல் தொழில்நுட்பம் வெகுவாக வளர்ந்து இருக்கின்ற இந்தக் காலக்கட்டத்தில், சென்னையில் மட்டுமே கலந்தாய்வை நடத்த வேண்டும் என்பது தேவை இல்லை. பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் ஏற்படுகின்ற வீண் அலைச்சல், கால விரயத்தைத்

தவிர்க்கின்ற வகையில், உயர்நிலை தொழில்நுட்பக் கல்வி மற்றும் மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கான கலந்தாய்வை, சென்னை மட்டுமின்றி திருச்சி, மதுரை, கோவை போன்ற நகரங்களிலும் நடத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம.தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்