முக்கிய செய்திகள்

பின்லேடன் பதுங்கியிருந்த விவகாரம் - பாகிஸ்தான் அதிரடி

US-Pak-Flag

 

இஸ்லாமாபாத்,மே.11 - தலிபான் மற்றும் அல்கொய்தா இயக்கங்களுக்கு 1990 லிருந்தே அமெரிக்கா ஆதரவளித்ததை சுட்டிக் காட்டியிருக்கும் பாகிஸ்தான் பின்லேடன் விவகாரத்தில் எங்களை மட்டுமே பொறுப்பாக்க கூடாது என்று கூறியுள்ளது. 

பின்லேடனுக்கு ஆதரவாக ஏதேனும் அமைப்புகள் இருந்தனவா என்பது குறித்து ராணுவ விசாரணைக்கும் பாகிஸ்தான் உத்தரவிட்டிருக்கிறது. பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் பின்லேடன் கொல்லப்பட்டது. அதனால் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி ஆகியவை தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் கிலானி பேசினார். 

அனைவரும் ஒன்று சேர்ந்து வரலாற்று உண்மைகளையும் அதன் பின்விளைவுகளையும் ஏற்று கொள்ள வேண்டும். மற்றவர்களின் தவறான கொள்கைகளால் ஏற்பட்ட விளைவுகளுக்கு பாகிஸ்தானை மட்டுமே பொறுப்பாக்க முடியாது. அல்கொய்தாவின் பிறப்பிடம் பாகிஸ்தான் அல்ல என்றார். மேலும் ரஷ்ய படைகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தானியர்களை ஜிகாத் நடத்துவதற்கு தயார் செய்தது அமெரிக் அதிகாரிகள்தான். அமெரிக்காவின் அந்த கொள்கையால் இன்று வரைக்கும் பாகிஸ்தான் பாதிக்கப்பட்டிருக்கிறது. 

மிகவும் தேடப்பட்டு வந்த பின்லேடன் கொல்லப்பட்டதன் மூலம் உண்மையில் நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது. ஆனால் இது போன்று தன்னிச்சையான நடவடிக்கைகளால் கடுமையான பின் விளைவுகள் ஏற்படும். யாரும் எங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம். திருப்பி தாக்கும் அளவுக்கு எங்களிடம் வலிமை இருக்கிறது என்றார். பின்லேடன் தொடர்பான மிகவும் முக்கியமான உளவு தகவல்களை அமெரிக்காவுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. வழங்கியிருந்ததாகவும் கிலானி குறிப்பிட்டார். 

அபோடாபாத் நகரில் பின்லேடன் பதுங்கியிருந்ததை இதுநாள் வரை கண்டுபிடிக்காமல் விட்டது உலக நாடுகளின் உளவுத் துறை தோல்வி என்று அவர் கூறினார். அபோடாபாத் நகரில் பின்லேடனால் எப்படி பதுங்கியிருக்க முடிந்தது என்பது குறித்து ராணுவ விசாரணை நடத்தப்படும் என்றும் கிலானி அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: