முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலை விபத்துகள் குறித்த திட்டத்துக்கு வைகோ ஆதரவு

புதன்கிழமை, 11 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.11 - இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகரித்துவருகின்ற இந்த சூழலில் ஐ.நா.சபை அறிவித்துள்ள புதிய செயல் திட்டத்திற்கு ம.தி.மு.க. ஆதரவு அளிக்கிறது என வைகோ கூறியுள்ளார். இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உலகம் முழுவதும் சாலை விபத்துகளால் ஏற்படும் இழப்பைப் புரிந்து கொண்ட ஐக்கிய நாடுகள் சபை, சாலை விபத்துகளைக் குறைக்க, 10 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை (ஈடீஷஹக்ஷடீ ச்க் ஹஷசிடுச்டூ க்ச்ஙு தச்ஹக்ஷ நஹக்டீசிநீ 2011​2020) அறிவித்து இருக்கிறது.

இந்தத்திட்டம், மே 11 ஆம் நாள் முதல் தொடங்கப்படுகிறது. இதன் நோக்கத்தை அனைத்து நாட்டு அரசுகளுக்கும், உலக மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பது ஐ.நா.வின் குறிக்கோள்.

நாள்தோறும் செய்தித்தாள்களைப் புரட்டினால், கொத்துக்கொத்தாக மக்கள் சாலை விபத்துகளால் கொல்லப்படுகின்ற செய்திகள், கோரக் காட்சிகள், மனதை மிகவும் வேதனைக்குள்ளாக்குகிறது.

ஜப்பானில் ஒரு அணுகுண்டு வீசப்பட்டபோது, இறந்தவர்கள் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர். ஆனால், கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் சாலை விபத்துகளில் இறந்தவர்கள் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் பேர்.

இது, சுனாமியின் பாதிப்பை விட அதிகம்; nullகம்பங்களில் உயிர் இழப்பவர்களை விட அதிகம். ஆனால், இந்த இழப்பு, ஒவ்வொரு நாளும் பரவலாக ஏற்படுவதால் ஒட்டுமொத்த பாதிப்பு நமக்குப் புரிவது இல்லை. ஒவ்வொரு விபத்திலும் உயிர்களை இழப்பவர்களது குடும்பங்கள், வேதனையில் துடிக்கின்றன. அவர்களது எதிர்கால வாழ்வு இருண்டு போகிறது.

உலகின் வாகன எண்ணிக்கையில் ஒரு சதவீதம் மட்டுமே உள்ள இந்தியாவில், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு 13 சதவீதம்; சாலை விபத்து உயிரிழப்புகளில் உலகிலேயே இந்தியாதான் முதலிடம் என்ற புள்ளி விவரங்கள், இந்தியப் போக்குவரத்துத் துறைக்கு மக்களின் உயிர்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை என்பதையே காட்டுகிறது.

சீனா, அமெரிக்கா, ஜப்பான், தாய்லாந்து போன்ற நாடுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து சாலை விபத்துகளைப் பெருமளவு குறைத்து இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அமெரிக்காவில் 2005​இல் சாலை விபத்துகளில் இறப்பு 43,443 பேர். ஆனால், தீவிர நடவடிக்கைகளுக்குப் பின் 2009​இல் 33,963 பேராகக் குறைத்து இருக்கிறார்கள். ஜப்பானில் 2005​இல் 6,871 பேர். ஆனால், 2008​இல் 5,744 பேர். தாய்லாந்தில் 2003​இல் 14,446 பேர். ஆனால், 2009​இல் 12,069 பேர். 

ஆனால் தமிழகத்தில் 2006​ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் உயிரிழப்பு 11,009 பேர். 2010​ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் உயிரிழப்பு 15,409 பேர். 2007 ஏப்ரல் மாதம் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை 2006​ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, 2013​ஆம் ஆண்டு 20 சதவீதம் உயிர் இழப்பைக் குறைப்போம் என்ற கொள்கை முடிவை எடுத்தது. ஆனால், 2010​லேயே 40 சதவீதம் உயிர் இழப்பு அதிகரித்து இருக்கிறது. 5 வருடங்களாக தமிழ்நாட்டில் மட்டும் சாலை விபத்துகளில் உயிர் இழந்தவர்கள் 59,870 பேர்.

மனித உயிர்கள் பலியாவதைப் பற்றிய கவலையோ, சாலை விபத்துகளைத் தடுக்க உண்மையான தீவிர முயற்சியோ இல்லாமல் தமிழக அரசு செயல்படுகிறது என்பது மனதைப் புண்படுத்துகிறது.

ஐ.நா. மன்றம் எடுக்கின்ற மனிதாபிமான முயற்சிகளுக்குப் பிறகாவது மத்திய ​மாநில அரசுகள், சாலைப் பாதுகாப்பை முதல் முக்கியப் பிரச்சினையாகக் கருதி நடவடிக்கைகளைத் தீவிரப் படுத்த வேண்டும்.

இப்பிரச்சினையை மிகப் பெரிய சவாலாக எடுத்துக் கொண்டு அரசு, அரசியல் இயக்கங்கள்,

பொது நல அமைப்புகள், நீnullதிமன்றங்கள், மருத்துவமனைகள், மாணவர்கள், நிறுவனங்கள் என அனைவரும் இணைந்து மக்களிடையே மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியும்,

சீரிய சட்டதிட்டங்களை ஏற்படுத்தியும், அதை சரியாக அமல்படுத்தியும், சரியான சாலைகளை அமைத்தும் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வோம்; மக்களைக் காப்போம்.

ஐ.நா. அறிவித்து உள்ள திட்டம் மாபெரும் வெற்றி பெற ம.தி.மு.க. முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் தரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு வைகோ அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony