முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.44 லட்சம் கேட்டு தொழிலதிபர் மகள் கடத்தல்

புதன்கிழமை, 11 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.11 - சென்னை தாம்பரம் தொழிலதிபர் மகளை ரூ.44 லட்சம் பனைய தொகை கேட்டு கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து பனைய தொகையையும், கடத்தப்பட்ட பெண்ணையும் மீட்டனர். இது பற்றி விபரம் வருமாறு;-

தாம்பரத்தை அடுத்த செம்பாக்கத்தை சேர்ந்த தொழில் அதிபர் அப்பாராவ். இவரது மகள் அனுஷா (24). எம்.பி.ஏ. படித்துள்ளார். நேற்று முன்தினம் காலை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு நிறுவனத்தில் நடந்த நேர்முகத் தேர்வுக்கு புறப்பட்டார். செம்பாக்கம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 2 பேர் அனுஷாவை கத்திமுனையில் கடத்தி சென்றனர். 

பின்னர் அவர்கள் அப்பாராவை செல்போனில் தொடர்பு கொண்டு, உங்கள் மகளை நாங்கள் கடத்தி விட்டோம். ரூ.44 லட்சம் தந்தால் அவளை உங்களிடம் ஒப்படைத்து விடுவோம். இல்லாவிட்டால் அவளை புளூ பிலிம் எடுத்து இண்டர்நெட்டில் பரப்பி கொன்று விடுவோம் என்று மிரட்டினர். இதைக்கேட்டு அப்பாராவ் அதிர்ச்சி அடைந்தார். சேலையூர் போலீஸ் நிலையம் சென்று, எனது மகளை ஒரு கும்பல் கடத்தி விட்டது. அவளை மீட்டுத்தாருங்கள் என்று புகார் கொடுத்தார். 

உடனே புறநகர் கமிஷனர் கரன்சின்ஹா அனுஷாவை மீட்க நடவடிக்கையில் இறங்கினார். போலீசார் 3 தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்கிடையே அப்பாராவ் தன் மகளை போலீசுக்கு தெரியாமல் உயிருடன் மீட்க முடிவு செய்தார். நேற்று முன்தினம் மாலை கடத்தல்காரருடன் போனில் தொடர்பு கொண்டு பேசினார். என்னிடம் ரூ.34 1/2 லட்சம் பணம் இருக்கிறது. அதை தருகிறேன். என் மகளை ஒப்படைத்து விடுங்கள் என்று கெஞ்சினார். இதனால் கடத்தல் கும்பல் இறங்கி வந்தது. சந்தோஷ்புரம் காட்டுப்பகுதியில் தங்கி உள்ளோம். நீங்கள் மட்டும் பணத்துடன் வாருங்கள். அப்போதுதான் உங்கள் மகளை உயிருடன் பார்க்க முடியும் பணத்தை கொடுத்ததும் அனுஷாவை அடைத்து வைத்திருக்கும் வீட்டை காட்டுவோம். nullநீங்கள் அழைத்து செல்லலாம் என்று கூறினார்கள். உடனே அப்பாராவ் போலீசுக்கு தெரியாமல் சந்தோஷ்புரம் காட்டுக்கு தனியாக சென்றார். 

இதற்கிடையே அப்பாராவ் தனியாக பணத்துடன் செல்லும் தகவல் தனிப்படை போலீசுக்கு கிடைத்தது. உடனே 50​க்கும் மேற்பட்ட போலீசார் காட்டுப்பகுதிக்குச் சென்று துப்பாக்கியுடன் பதுங்கி இருந்தனர். அப்பாராவ் பணத்துடன் வருவதைக் கண்டதும் ஒரு வாலிபர் அங்கு வந்தார். அவர் அப்பாராவிடம் பணப்பையை வாங்கினார். அப்போது அங்கு பதுங்கி இருந்த போலீசார் மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று வாலிபரை மடக்கிப் பிடித்தனர். அவனிடம் இருந்த ரூ.34 1/2 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.   

அவனிடம் விசாரணை நடத்தியபோது அவனது பெயர் தணிகைவேல் என்று தெரிய வந்தது. அனுஷாவை தாம்பரம் கேம்ப் ரோடு அருகே உள்ள மகாலட்சுமி நகரில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக அவன் கூறினான். போலீசார் அங்கு விரைந்து சென்று அனுஷாவை மீட்டனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட அவனது பெயர் வினோத்குமார் எம்.பி.ஏ. பட்டதாரி. அவன் போலீசாரிடம் கூறியதாவது:​ எனது சொந்த ஊர் தேனி. நானும் அனுஷாவும் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ. படித்தோம். அவள் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். நானும், தணிகைவேலும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறோம். நாங்கள் குறுக்கு வழியில் சம்பாதிக்க திட்டம் போட்டோம். 

அப்போது என்னுடன் படித்த அனுஷாவின் ஞாபகம் வந்தது. அவளை கடத்தினால் அவளது தந்தையிடம் இருந்து லட்சக்கணக்கில் கறந்து விடலாம் என்று திட்டமிட்டோம். அதன்படி அவளை கடந்த சில நாட்களாக நோட்டமிட்டோம். அவர் செம்பாக்கம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்கு காத்திருந்தபோது ஆட்டோவில் கடத்திச்சென்று வீட்டில் அடைத்து வைத்திருந்தோம். லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என்று கனவு கண்டோம். ஆனால் அதற்குள் போலீசில் வசமாக மாட்டிக் கொண்டோம். இவ்வாறு வினோத்குமார் கூறினார்.

 கடத்தல்காரர்கள் இருவரையும் போலீசார் தாம்பரம் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்துகிறார்கள். கடத்தல் கும்பலை பிடித்த தனிப்படை போலீசாருக்கு புறநகர் கமிஷனர் கரன் சின்ஹா பாராட்டு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்