முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கே.பாலசந்தருடன் இணைந்து நடிக்க வேண்டும்: கமல்

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2013      சினிமா
Image Unavailable

சென்னை, செப்.15 - ''நானும், கே.பாலசந்தரும் இணைந்து நடிக்க வேண்டும். பாலசந்தரின் அனுமதிக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்'' என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். 34 வருடங்களுக்கு முன் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணைந்து நடித்து, கே.பாலசந்தர் டைரக்டு செய்த படம், 'நினைத்தாலே இனிக்கும்.' இந்த படம் நவீன தொழில்நுட்பங்களுடன் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திரைக்கு வர இருக்கிறது. இதன் 'டிரைலர்' வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது.

விழாவில் கமல்ஹாசன் கலந்துகொண்டு 'டிரைலரை' வெளியிட, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர் கேயார் பெற்றுக்கொண்டார்.

விழாவில், கமல்ஹாசன் பேசியதாவது:-

''சகோதரர் ரஜினிகாந்த் சார்பில் நான் இங்கு வந்து இருக்கிறேன். அவர் இந்த விழாவுக்கு வர இயலவில்லை. நான் வரவில்லை என்றால் என் சார்பில் அவர் வருவார். எங்கள் இருவருக்கும் இடையே அந்த அளவுக்கு நெருங்கிய நட்பு இருந்து வருகிறது.

34 வருடங்களுக்கு முன்பு இந்த படத்தில் நடித்தபோதுதான் நாங்கள் இருவரும் இனிமேல் இணைந்து நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தோம். இனிமேல் நாம் இருவரும் ஒரே சம்பளத்தை பங்கு போட்டுக் கொள்ள வேண்டாம். தனித்தனியாக படங்களில் நடிக்கலாம் என்று நான் சொன்னேன். அதை ரஜினியும் ஏற்றுக்கொண்டார்.

கே.பாலசந்தரை பார்த்துதான் எனக்கு டைரக்ஷன் ஆசை வந்தது. இந்தியாவிலேயே சிறந்த டைரக்டர் என்று என்னை இங்கே குறிப்பிட்டார்கள். அதற்கு காரணம், கே.பாலசந்தரிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட பால பாடம்தான்.

என் இளமை ரகசியம் பற்றி கேட்டார்கள். அதை சொல்ல வேண்டாம் என்று ரசிகர்கள் பக்கம் இருந்து குரல் வந்தது. இந்த இளைஞர்களுடன் நான் பழகும் வாய்ப்பு ஏற்பட்டதுதான் என் இளமைக்கு காரணம்.

ஆரம்ப காலத்தில், நான் நடிகன் ஆவேன் என்று நினைக்கவில்லை. டைரக்டர் ஆகவேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். 'சொல்லத்தான் நினைக்கிறேன்' படத்தில் நடித்தபோது ஒருநாள் கே.பாலசந்தர் என்னை அழைத்தார். இனிமேல் என்ன செய்யப்போறே? என்று கேட்டார். டைரக்டர் ஆகப்போகிறேன் என்றேன். அந்த பாதையில் போனால், நீ பஸ்சில்தான் வரவேண்டியிருக்கும். உன்னிடம் நடிப்பு திறமை இருக்கிறது என்று வழிகாட்டியவர், கே.பாலசந்தர்.

'நினைத்தாலே இனிக்கும்' படம் வெற்றி பெற்றதால் அவர் ஜெயித்து விட்டதாக இங்கே கூறினார். என்றைக்குமே நீங்க (கே.பாலசந்தர்)தான் ஜெயிப்பீங்க. நீங்க ஜெயித்தால், நான் ஜெயித்த மாதிரி.

எனக்கு வேகத்தடை போட வேண்டும் என்று ஒருமுறை அவர் சொன்னார். அந்த வேகத்தை நான் கற்றுக்கொண்டதே அவரிடம் இருந்துதான்.

இணைந்து நடிக்க வேண்டும்

அவர் டைரக்ஷனில் 36 படங்களில் நான் நடித்து இருக்கிறேன். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். கே.பாலசந்தர் ஒரு சிறந்த நடிகர். நன்றாக நடித்துக் காட்டுவார். நல்லவேளை, அவர் நடிக்க வரவில்லை. அவருடைய அந்த திறமையை பயன்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறேன். அவரும், நானும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும். இதற்காக அவருடைய அனுமதிக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.''

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

கே.பாலசந்தர்

விழாவில் டைரக்டர் கே.பாலசந்தர், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர் கேயார், செயலாளர் டி.சிவா, பொருளாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் அமீர், டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார், பேராசிரியர் ஞானசம்பந்தம், பட அதிபர்கள் கே.முரளிதரன், புஷ்பா கந்தசாமி, கே.ராஜன், ஏ.எல்.அழகப்பன், பிரமிட் நடராஜன், பிலிம்சேம்பர் துணைத்தலைவர் தேவராஜன், பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன், நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோரும் பேசினார்கள்.

பட அதிபர் சித்ரா லட்சுமணன் வரவேற்று பேசினார். ராஜ் டி.வி. ராஜேந்திரன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்