முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓணம் பண்டிகை: கவர்னர் - கருணாநிதி வாழ்த்து

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப். 16 - தமிழக கவர்னர் கே.ரோசய்யா வெளியிட்டுள்ள ஓணம் பண்டிக்கை வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- அறுவடை திருவிழாவான ஓணம் பண்டிகை கொண்டாடும் சந்தோஷமான தருணத்தில், தமிழ்நாட்டிலும், நாட்டின் பிறபகுதியிலும் வாழுகின்ற மலையாளிகளுக்கு என் இதயப்பூர்வமான, நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என்று தெரிவித்தார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள ஓணம் திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

கேரள மாநிலத்தின் அறுவடைத் திருநாள் மலையாள மொழி பேசும் மக்களால் ஓணம் திருநாள் என மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது.

இந்த ஓணம் திருநாள், வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒழிக்கப்பட வேண்டும்; ஆணவமும் அகம்பாவமும் அழிக்கப்பட வேண்டும்; அன்பு, ஓற்றுமை, அமைதி, சகிப்புத் தன்மை, சகோதர நேயம், பகிர்ந்துண்ணும் பண்பு முதலிய குணங்கள் பேணி வளர்க்கப்பட வேண்டும் என்பனவற்றை மனித சமுதாயத்திற்கு உணர்த்துகிறது.

ஓணம் திருநாளைத் தமிழகத்தில் வாழும் கேரள மக்கள் அனைவரும் உற்றார் உறவினர் நண்பர்கள் சூழச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ வேண்டும் என்பதற்காக, அவர்கள் நிறைந்து வாழும் தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்குக் கழக அரசு காலத்தில் 2006-ம் ஆண்டிலும்; சென்னை மாநகருக்கு 2007-ம் ஆண்டிலும் அரசு விடுமுறை வழங்கிக் கேரள மாநில மக்களின் உணர்வுகளைப் போற்றிய நிகழ்வுகளை நினைவுகூர்கிறேன்.

திராவிட மொழிக் குடும்பங்கள் எனும் உணர்வுடன் அண்டை மாநில மக்களோடு என்றும் நல்லுறவு பேணுவதையே விரும்பிடும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் ஓணம் திருநாள் வாழ்த்து செய்தி:-

சமுதாயத்தில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் சமூக நல்லிணக்கத்தோடு, சகோதர உணர்வோடு பழகி ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிடும் நோக்கில் கேரள மக்கள் அத்தப்பூ கோலமிட்டு சிறப்பாக கொண்டாடி வருகின்ற திருநாள்தான் ஓணம் பண்டிகை ஆகும்.

கேரளாவை ஆட்சி செய்த மன்னர்களில் சிறந்த மாமன்னன் மாபலி சக்கரவத்தி தன்னுடைய மக்களை சந்திக்க வருகின்ற நாளே திருவோண நாளாக கேரள மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் கேரள மக்கள் அனைவரும் எல்லா நலனும் பெற்று நல்வாழ்வு பெற தேமுதிக சார்பில் எனது இதயமார்ந்த ஓணம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்