முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செம்மொழி மாநாட்டில் ஊழல்: விசாரணைக்கு உத்தரவு

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2013      ஊழல்
Image Unavailable

சென்னை, செப்.17- கருணாநிதி நடத்திய செம்மொழி மாநாட்டில் நடந்ததாக கூறப்படும் 200 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியின்போது 2010-ம் ஆண்டு கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் செலவு செய்ததில் 200 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகவும் அதன் மீது விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வழக்கறிஞர் ரமேஷ் பாபு என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

செம்மொழி மாநாட்டிற்கு 350 கோடிரூபாய் செலவு செய்யப்பட்டதாக அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சட்டசபையில் தெரிவித்திருந்தார். உடனே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டோம். அதற்கு செம்மொழி மாநாட்டிற்கு 150 கோடி ரூபாய் செலவானது என்று தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் 2010, 2011-ம் ஆண்டுக்கான செலவு குறித்த தலைமை தணிக்கைத்துறை அதிகாரியின் அறிக்கையில் செம்மொழி மாநாட்டிற்கு 160 கோடி ரூபாய் செலவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட விளக்கமும் தணிக்கை துறை அதிகாரியின் விளக்கமும் மாறுபட்ட நிலையில் உள்ளது. அந்த செம்மொழி மாநாட்டில் 200 கோடிரூபாய் வரை ஊழல் நடந்து இருப்பதாக தெரிய வருகிறது. இது குறித்து அப்போதைய முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், பேராசிரியர் அன்பழகன், கனிமொழி ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசில் கடந்த ஏப்ரல் மாதம் புகார் அளித்தோம். ஆனால் அந்த புகார் மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எனது புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி மாலா தனது உத்தரவில், மனுதாரரின் புகாரில் கூறப் பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருந்தால் அதன் மீது சட்டப்படிவழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிடுகிறேன் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்