முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் ஓணம் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

மதுரை, செப். 17 - தமிழகத்தில் நேற்று ஓணம் பண்டிகை வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இங்குள்ள மலையாள மக்கள் தங்கள் வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு புத்தாடை அணிந்து நடனமாடி அறுசுவை உணவை பகிர்ந்தளித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஆலயங்களில் சிறப்பு பூஜைகளும் அன்னதானமும் நடைபெற்றன. 

கேரளாவில் மிக பிரசித்தி பெற்ற பண்டிகை ஓணம் பண்டிகை. தமிழக மக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுவார்கள். பட்டாசு வெடித்து புத்தாடை அணிந்து மகிழ்வார்கள். இதே போல் கேரளாவில் அம்மாநில மக்கள் ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுகிறார்கள். கேரளத்தை ஆண்ட மன்னர் மகாபலி சக்ரவர்த்தி. இவரிடம் மூன்றடி மண் கேட்ட வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு விண்ணை ஒரு அடியாகவும், மண்ணை ஒரு அடியாகவும் அளந்து மீதமுள்ள ஒரு அடி எங்கே என்று கேட்ட போது தன் தலையை காட்டினார் மகாபலி சக்ரவர்த்தி. அவரது தலையில் தன் காலை வைத்து அழுத்தி மகாபலிக்கு முடிவு கட்டியதாக வரலாறு. 

அப்போது மகாபலி சக்ரவர்த்தி ஒரு வரம் கேட்டார். தான் மறைந்த அதே நாளில் ஒவ்வொரு ஆண்டும் திருவோணம் நட்சத்திரத்தில் நான் எழுந்தருளி மக்களை காண வேண்டும் என்று வரம் கேட்டார். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் கேரள மக்களை அவர் சந்திப்பதாக ஐதீகம். இந்த நாள்தான் ஓணம் பண்டிகையாக மிகுந்த உற்சாகத்துடன் அம்மாநில மக்களால் கொண்டாடப்படுகிறது. 

இந்த நாளில் மக்கள் தங்கள் வீட்டு வாசலில் அத்தப்பூ கோலமிட்டு விளக்கேற்றி கொண்டாடுவது வழக்கம். புத்தாடை அணிந்து அறுசுவை உணவை மற்றவர்களுக்கும் அவர்கள் பகிர்ந்து அளிப்பார்கள். கேரளாவிலும் தமிழகத்திலும் நேற்று இருமாநில மக்களும் புத்தாடை அணிந்து அத்தப்பூ கோலமிட்டு நடனமாடி இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். குறிப்பாக கேரளத்து பெண்கள் தங்கள் பாணியில் நடனமாடியது நாட்டு மக்களை மிகவும் கவர்ந்தது. ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சென்னையில் உள்ள சில கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சென்னையில் உள்ள ஐயப்பன் ஆலயத்தில் அன்னதானம் நடைபெற்றது. இந்த பண்டிகை குறித்து சில பெண்கள் கூறுகையில், எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.அதற்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என்று கூறினார்கள். வீடுகளில் கோலமிட்டு இனிப்பு வழங்கி பாயாசம் அருந்தி வெகு உற்சாகத்துடன் மக்கள்இந்த பண்டிகையை கொண்டாடினார்கள். திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் இந்த பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்