முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.ஏ.சி.யில் பிளவை ஏற்படுத்த முயற்சி - ஜோஷி குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 12 மே 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி,மே.12 - பொதுக் கணக்குகுழுவில் கட்சி ரீதியாக பிளவை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல்ஆதாயம் தேட காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முயற்சிக்கிறது என்று அக்குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி குற்றம் சாட்டியுள்ளார். பொதுக் கணக்கு குழுவை தங்களது கைப்பாவையாக மாற்ற வேண்டும் என்பதில் காங்கிரசும், மத்திய அரசும் தீவிரமாக உள்ளன என்றும் அவர் கூறினார். 

பொதுக்கணக்கு குழுவில் உள்ள காங்கிரஸ் உறுப்பினர்களும், அதன் கூட்டணி கட்சி உறுப்பினர்களும் சுயமாக சிந்தித்து செயல்படவில்லை. அவர்களை மத்திய அமைச்சர்கள் சிலர்தான் ஆட்டுவிக்கின்றனர். கடந்த ஏப்ரல் 28 ம் தேதி நாடாளுமன்றத்தில் பொதுக் கணக்கு குழுவின் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அன்றைய தினம் மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், பவன்குமார் பன்சால், கபில்சிபல், நாராயணசாமி ஆகிய நால்வரும் நாடாளுமன்ற அலுவலகத்தில் இருந்தனர். இவர்கள் பொதுக் கணக்கு குழுவில் இடம் பெற்றுள்ள தங்களது கட்சி உறுப்பினர்களுக்கு இதை செய்யுங்கள், இதை செய்யாதீர்கள் என தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்தனர். இவர்களின் இத்தகைய செயல்பாடு நாடாளுமன்ற நடவடிக்கையையே அவமதிப்பதாகரும். பொதுக் கணக்கு குழு  எப்படி செயல்படுகிறது என்பதை கண்காணிப்பது மக்களவை தலைவரின் வேலை. அமைச்சர்களின் வேலையல்ல. பொதுக் கணக்கு குழுவில் அமைச்சர்கள் தலையீடு இருக்கும் வரை சுதந்திரமாக செயல்பட முடியாது. ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் முடியாது. ஊழலை தடுக்க அனைத்து வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் கூறும் அதே வேளையில் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்கள் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை முடக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். 

மத்திய அரசின் கட்டளைக்கு இணங்கவே சி.பி.ஐ. செயல்படுவதாக குற்றம் சுமத்திய ஜோஷி, அரசின் கட்டுப்பாட்டில் இருந்து சி.பி.ஐ. யை விடுவிக்க தனிப்பட்ட சட்டத்தை இயற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதற்கு பொதுக் கணக்கு குழு பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்