முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தமிழர் படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை

வியாழக்கிழமை, 26 செப்டம்பர் 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, செப். 26 - இலங்கை தமிழர் படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை என்றும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஐக்கிய நாடுகள் மன்றம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து, உலக நாடுகளில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், மூண்ட யுத்தங்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகளில் கடமை ஆற்றி இருக்கிறது. ஆனால், பல வேளைகளில், வல்லரசு நாடுகள் ஐ.நா. வின் ஆணைகளை உதாசீனப்படுத்தி விட்டு, பிற நாடுகள் மீது இராணுவத் தாக்குதல்களை நடத்தியும் உள்ளன.

இலங்கைத் தீவில், சிங்களப் பேரினவாத அரசு, லட்சக்கணக்கான ்ழத்தமிழர்களை, ஈவு இரக்கம் இன்றி, மிகக் கொடூரமாகக் கொன்று குவித்தபோது, அக்கோரக் கொலைகளைத் தடுக்கும் கடமையில் ஐ.நா. மன்றம் திட்டமிட்டே தவறியது என்பதை, ஐ.நா. வின் பொதுச்செயலாளர் பான்கிமூன், ஐ.நா.வின் இலங்கை நடவடிக்கை குறித்த உள்ளக ஆய்வு குறித்த, ஒப்புதல் வாக்குமூலமாகத் தந்து உள்ளார்.

யுத்தத்தை நிறுத்தவோ மனித உரிமைகளைக் காக்கவோ, தக்க நடவடிக்கைளை ஐ.நா. எடுக்கவில்லை; அதில் தோற்றுப் போனது; அதற்கு, ஐ.நா. மன்றத்தின் உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாததே காரணம் என்று கூறி இருக்கிறார்.

அண்மையில் இலங்கை சென்று திரும்பிய மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் நவநீதம் பிள்ளை, கவுன் சிலில் வாய்மொழியாகத் தந்து உள்ள அறிக்கையில், பல்லாயிரக் கணக்கான ஈழத்தமிழர்கள், காணாமல் போனவர்கள் பற்றிய எந்தத் தகவலும் தெரியவில்லை என்றும், தமிழர் பகுதிகளில் ராணுவமும், போலீசும் குவிக்கப்பட்டு இருப்பதையும், நீதித்துறை முடமாக்கப்பட்டு, ஜனநாயக உரிமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதையும் சுட்டிக் காட்டி உள்ளார்.

மனித உரிமைகள் கோட்பாடு ஐ.நா. மன்றத்தில் இனியும் இருக்குமானால், ஈழத்தமிழர் படுகொலை நடத்திய சிங்கள அரசு மீது, சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணை நடத்து வதற்கு ஐ.நா. மன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித உரிமைகளில் அக்கறை உள்ள உலக நாடுகள், இந்தக் கடமையைச் செய்ய முன்வர வேண்டும்.

உலகெங்கும் உள்ள தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும், ்ழத்தமிழர் படுகொலை குறித்த நீதி விசாரணைக்கு, ஓங்கிக் குரல் எழுப்ப வேண்டும்; அனைத்தையும் செய்வதற்கு தியாக தீபம் திலீபனின் 26 ஆவது நினைவுநாளாகிய இந்த நாளில் சூளுரை மேற்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony