முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்., அரசை தூக்கியெறிய வேண்டும்: திருச்சியில் மோடி பேச்சு

வியாழக்கிழமை, 26 செப்டம்பர் 2013      அரசியல்
Image Unavailable

 

திருச்சி, செப். 26 - நமது நாட்டில் எல்லைப் பகுதியிலும் பாதுகாப்பில்லை. ராணுவ வீரர்களுக்கும் பாதுகாப்பில்லை. எந்த மாநிலங்களுக்கும் பாதுகாப்பில்லை. எனவே மத்தியில் இருக்கும் காங்கிரஸ் அரசாங்கத்தை தூக்கியெறிய வேண்டும் என்று திருச்சி மாநாட்டில் நரேந்திர மோடி ஆவேசமாக பேசினார். 

திருச்சியில் நேற்று பா.ஜ.க. இளம் தாமரை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டையொட்டி டெல்லி செங்கோட்டை வடிவில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. மாநாட்டையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த மாநாட்டையொட்டி திருச்சி மாநகரமே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. இந்த மாநாட்டில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சை கேட்க லட்சக்கணக்கான மக்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர். எங்கு பார்த்தாலும் பா.ஜக.. கொடிகள் காணப்பட்டன. இந்த மாநாட்டில் மோடி கலந்து கொண்டு ஆவேசமாக பேசினார். அப்போது அவர் மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசினார். மாநாட்டில் அவர் பேசியதாவது, 

குஜராத் மக்களும், தமிழக மக்களும் பாலில் சர்க்கரை கலந்தது போல் இரண்டற கலந்து வாழ்கிறார்கள். இரண்டு மாநிலங்களும் கடற்கரை மாநிலங்கள். பல்வேறு நாடுகளுடன் இரண்டு மாநிலங்களும் வர்த்தகம் செய்து வருகின்றன. ஆனால் எல்லைப்புற மாநிலங்களான நமக்கு பல பிரச்சினைகளும் உள்ளன. குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் கைது செய்து சிறையில் அடைக்கிறது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் இந்த தைரியம் எப்படி வந்தது. மத்தியிலே இருக்கின்ற அரசுக்கு பலமில்லை. அதனால்தான் இரு மாநில மீனவர்களும் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். மத்திய அரசின் பலவீனமே இதற்கு காரணம். மீனவர்கள் பிரச்சினைக்கு பலமற்ற மத்திய அரசே காரணம். இதனால்தான் இந்தியாவில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று அந்த நாடுகள் நினைக்கின்றன. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மீனவர்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை. பாகிஸ்தான் கைது செய்தாலும் 15 நாளில் விட்டு விடுவார்கள். ஆனால் இப்போது படைகளையே பறித்துக் கொள்கிறார்கள். குஜராத் மாநிலம் பருத்தி உற்பத்தி செய்கிறது. அந்த பருத்தியை அதிகம் வாங்கும் மாநிலம் தமிழகம். இப்படி ஒரு உறவு, பொது அம்சம் நமக்கு உள்ளது. திருச்சி பெல் நிறுவனம் மின் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கிறது. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில்தான் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் படித்தார். மேலும் பல விசேஷங்களும் திருச்சிக்கு உண்டு. தண்டி யாத்திரை இங்கிருந்துதான் துவங்கியது. இந்த மாநாட்டின் ஆரம்பத்தில் நாட்டிலே உயிர்நீத்த ஜவான்களுக்கு அஞ்சலி செலுத்தினோம். ராணுவ வீரர்கள் போரில் பலியானதை விட இப்போது தீவிரவாத தாக்குதலில்தான் அதிகமாக பலியாகிறார்கள். 125 கோடி மக்கள் இங்கு வாழ்கிறார்கள். எல்லை பகுதியில் நமது வீரர்களை பாகிஸ்தான் சுட்டுக் கொல்லும் சம்பவம் நடக்கும் போது அமெரிக்காவில் பாக். பிரதமர் ஷெரீப்புடன் இந்திய பிரதமர் சிக்கன் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நாடு கையாலாகத நாடா? சக்தி இல்லாத நாடா என்று ஒவ்வொரு குடிமகனும் கேட்கிறான். பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த ஏன் இவர்கள் அவசரப்படுகிறார்கள். இதற்கு ஒரே குரலில் பதில் சொல்லுங்கள். (இவ்வாறு அவர் கேட்ட போது, கூடாது, கூடாது என்று மக்கள் குரல் எழுப்பி பதில் அளித்தார்கள்) பிரேசில் நாட்டினை அமெரிக்கா கண்காணித்தது. அந்த உளவு நடவடிக்கைக்கு பிரேசில் கடும் கண்டனம் தெரிவித்தது. நாட்டின் தன்மானத்தை காக்க வேண்டியது மிகவும் அவசியம். அமெரிக்க உளவுத் துறையில் ஸ்நோடன் பணியாற்றினார். அவர் சில ரகசியங்களை வெளியிட்டார். இதற்காக அவரை கைது செய்ய முற்பட்ட போது அவர் தப்பி வந்து ரஷ்யாவில் சரணடைந்தார். உடனே ஒபாமா நீ எப்படி புகழிடம் கொடுக்கலாம் என்று சொல்லி ரஷ்யாவுக்கு செல்ல மறுத்தார். ஒரு சிறிய நாடோ, பெரிய நாடோ, தன்மானத்திற்கு இழுக்கு ஏற்படுமானால் மரியாதையை காப்பாற்ற வீறுகொண்டு எழுந்து நிற்க வேண்டும். நான் பிரதமரை கேட்கிறேன். நீங்கள் எதற்கு முன்னுரிமை கொடுப்பீர்கள். தன்மானத்திற்கா? அல்லது நிர்பந்தத்தின் பெயரால் பாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவதற்கா? எதற்கு முன்னுரிமை தருவீர்கள். இந்த நாட்டில் இப்போது எல்லை பகுதியிலும் பாதுகாப்பில்லை. எந்த மாநிலங்களுக்கும் பாதுகாப்பில்லை. ஏன் ராணுவ வீரர்களுக்கே பாதுகாப்பில்லை. எனவே மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசாங்கத்தை நீங்கள் தூக்கியெறிய வேண்டும். இந்த நாட்டில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து விட்டது. ரூபாய்க்கு மதிப்பே இல்லை. பொருளாதாரம் பலவீனமாகி விட்டது. இந்த காங்கிரஸ் ஆட்சி 5 ஆண்டு நீடித்தால் இளைஞர்களுக்கு வருங்காலத்தில் வேலையில்லாமல் போய் பிச்சையெடுக்கும் நிலை ஏற்படும். இளைஞர்கள் வேலையிழக்க நேரிடும். இவ்வாறு நரேந்திர மோடி ஆவேசமாக பேசினார். அவரது பேச்சை கேட்க திருச்சி மாநகரில் லட்சக்கணக்கான மக்கள் அலைகடலென திரண்டிருந்தனர்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்