முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவராத்திரி விற்பனை: அமைச்சர் தொடங்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, செப்.28 - நவராத்திரி விற்பனை கண்காட்சியினை அமைச்சர் கே.பி.முனுசாமி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, கிராம அங்காடிகள், கல்லூரி சந்தைகள் மற்றும் மாநில அளவிலான கண்காட்சிகள் மூலமாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி பொருட்களின் விற்பனை வாய்ப்பினை மேம்படுத்திடவும், வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைந்திடவும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வாயிலாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களைச் சார்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்திடும் நோக்கிலும், விற்பனை வாய்ப்பினை மேம்படுத்திடவும் சென்னையில் பல்வேறு சிறப்பு கண்காட்சிகள்  நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் (26.09.2013) சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மகளிர் மேளா-2013 நவராத்திரி விற்பனைக் கண்காட்சியினை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் முதன்மைச்செயலாளர் ச.வி.சங்கர், முன்னிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இக்கண்காட்சி 26.09.2013 முதல் 17.10.2013 வரை, காலை 10.30 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணி வரை நடைபெறும். அனைத்து பண்டிகை விடுமுறை நாட்கள் மற்றும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளிலும் விற்பனை நடைபெறும்.

2013 செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 17 வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில், நவராத்திரி கொலு பொம்மைகள், தரமான வீட்டு உபயோகப் பொருட்கள், வண்ண வண்ண பருத்தி மற்றும் பட்டு ஆடைகள், மங்கையர் மனம் மயக்கும் செற்கை ஆபரணங்கள், காகிதம், சணல், களிமண் ஆகியவற்றினால் செய்யப்பட்ட பொம்மைகள், புளி, தேன், ராகி, சாமை, ரோஸ் குல்கந்து மற்றும் மூலிகைப் பொருட்கள், சுவை மிகுந்த உணவுகள், தேங்காய் நாரினால் தயாரிக்கப்பட்ட மிதியடிகள், லெதர் பொருட்கள், செராமிக் பொருட்கள், மண் பொம்மைகள், மரப் பொருட்கள், மிதியடிகள், பனை ஓலை பொருட்கள், சுடிதார் மெட்டிரியல்ஸ், மூங்கில் பொருட்கள், நறுமணப் பொருட்கள், கொல்லிமலைப் பொருட்கள், கடல் சிற்பி பொருட்கள், குத்து விளக்குகள், பூஜைப் பொருட்கள், வெள்ளை உலோகப் பொருட்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், பத்தமடை பாய் பொருட்கள், மஸ்கோத் அல்வா மற்றும் ஆரோவில் பொருட்கள் விற்பனைச் செய்யப்படுகின்றன.

இக்கண்காட்சிஇயல் பொருட்களை விற்பனை செய்திட 32 மாவட்டங்களில் இருந்தும் மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படும் சுய உதவிக் குழுக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இக்கண்காட்சியில் சென்னை, திருவள்ளூர், சிவகங்கை, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவுக் குழுக்கள் தயாரிக்கும் பாரம்பரிய சுவை மிகுந்த உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் புதுவாழ்வுத் திட்டம், பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி திட்டம் (ஐ.எப்.ஏ.டி) திட்டத்தின் கீழ் செயல்படும் சுய உதவிக் குழுக்களும், மற்றும் திருநங்கையர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரும் இக்கண்காட்சியில் விற்பனை அரங்குகளை அமைத்து தங்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்கின்றனர்.

மேலும் இக்கண்காட்சியில் மதிப்பு கூடுதல் நிகழ்வாக நவராத்திரி கண்காட்சியில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருகை தரும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் விற்பனை மட்டுமின்றி விற்பனை சார்ந்த மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பல தலைப்புகளில் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு நாளும் பங்கேற்பாளர்களுக்கு தலைப்பிற்கு ஏற்ப தேர்வு செய்யப்பட்ட வளபயிற்றுநரின் மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெறவுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்திப் பொருட்களின் மகளிர் மேளா-2013 நவராத்திரி விற்பனைக் கண்காட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பிரத்யேகமாக தயாரித்துள்ள தரமான கொலு பொம்மைகள், கலைப்பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், நேர்த்தியான பட்டு, பருத்தி மற்றும் கைத்தறி ஆடைகள், மங்கையருக்கான ஆபரணங்கள் ஆகியவை மிக நியாயமான விலையில் பொதுமக்கள் வாங்கி பயன்பெறும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் நவராத்திரி கண்காட்சிக்கு வருகை புரிந்து மகளிர் விற்பனை செய்யும் பொருட்களை வாங்கி அவர்களது பொருளாதார நிலை உயர்வதற்கு ஒரு உந்துகோலாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் மைதிலி.க.ராஜேந்திரன், கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony