முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் அறிவுப் புரட்சியை ஏற்படுத்தி தந்தவர் முதல்வர்

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

மதுரை, செப் 29 - தமிழ்நாட்டில் அண்ணா  விரும்பிய அறிவுப் புரட்சியை        ஏற்படுத்தி தந்தவர்  தழிழக முதல்வர்  ஜெயலலிதா  என்று  தமிழ்நாடு டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன்  மதுரை புறநகர் மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.

அ.தி.மு.க  பொதுச்செயலாளர் ,தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதாவின்ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மாவட்டம் உசிலம்பட்டி நகர் அ.தி.மு.க  சார்பாக பேரறிஞர் அண்ணா அவர்களின் 105-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு உசிலம்பட்டி நகர் கழக செயலாளர்  கே. ஆர். ராஜா தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில்  தழிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன் சிறப்புரையாற்றினார் மற்றும் இக்கூட்டத்தில்   தலைமை கழக பேச்சாளர்பட்டணம் (எ) நைனா முகமது, மாவட்ட கழகச் செயலாளர் ம. முத்துராமலிங்கம்,எம்.எல்.ஏ முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் க. தவசி,மகேந்திரன்,பாண்டியம்மாள்,தொகுதி கழகச்செயலாளர் நீதிபதி,ஒன்றியக்கழக செயலாளர் கே.சி. மாயன்,மாவட்ட கழக நிர்வாகிகள் பஞ்சவர்ணம்,பி. அய்யப்பன்,யு.பி.ஆர்.பஞ்சம்மாள்,மாவட்ட அணி நிர்வாகிகள் வேலுச்சாமி,போத்திராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் எஸ்.டி.கே.ஜக்கையன் பேசியதாவது,

பேரறிஞர் பெருந்தகை அண்ணாஅவர்களின் 105-வது பிறந்த நாள் விழா பட்டி தொட்டி எங்கும் அவரின் புகழை பறை சாற்றும் வண்ணம்  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க கொண்டாடப்பட்டு வருகின்றது. பேரறிஞர் அண்ணாஅவர்கள் சிறந்த பேச்சாளராகவும், சிறந்த எழுத்தாளராகவும், மனிதநேய பண்பாளராகவும், இது போன்ற பன்முக பரிமாணம் கொண்ட தலைவராக விளங்கியவர்.தமிழ்நாடும் தமிழ் மக்களும் தமிழ் மொழியும் பாதிப்புக்குள்ளான சமயத்தில் தமிழ்நாட்டையும் தமிழ்மக்களையும் விழிப்படையச் செய்து தமிழ் மக்களுக்கு உரிய உயர்வையும் தமிழ்மொழிக்கு வரவிருந்த ஆபத்திலிருந்து காப்பாற்றியதுடன் தமிழ்மொழியின் புகழை உலகம் முழுவதும் பரவும் வகை செய்து அயராது பாடுபட்டவர் நம் அண்ணா அவர்கள்.

காங்கிரஸ் இயக்கம் தமிழகத்தில் ஆண்டபோது மிட்டாமிராசு தான் ஆட்சி பொறுப்பில் வரும் சூழ்நிலை இருந்தது. அதையெல்லாம் மாற்றி ஏழை எளிய சாமானியர்கள் எல்லாம் கோட்டை கொத்தளத்தில் அமர வைத்து அழகு பார்த்தவர் தான் பேரறிஞர் அண்ணா அவர்கள். அதேபோல் அரசியல் இயக்கத்தை ஒரு குடும்ப உறவாக அதாவது தலைவர், தொண்டன் என்ற நிலையை மாற்றி அண்ணன் தம்பி என்ற உறவை நிலை நாட்டினார். அண்ணா அவர்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின் சட்டமன்றத்தில் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்து வரலாற்றுத் தீர்மானத்தை நிறைவேற்றினார்.

இப்படிப்பட்ட இயக்கத்தை குறுக்கு வழியில் வந்து தன் சுயநலத்திற்காக கருணாநிதி சீரழித்து அண்ணா புகழை அழித்து வந்ததை கண்டு புரட்சித்தலைவர் அவர்கள் அண்ணாவின் கொள்கைகளை காப்பாற்ற அண்ணா பெயரில் கட்சியை ஆரம்பித்து அண்ணாவின் புகழை பரப்பினார்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசியதை கண்டு அப்போத பாரதப்பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு அப்படியே மெய் சிலிர்த்து அண்ணாவை பாராட்டினார். அதேபோல் அம்மா அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராகி பேரறிஞர் அண்ணா அமர்ந்த அதே இருக்கையில் அமர்ந்து தன்னுடைய கன்னிப்பேச்சால் அவையில் இருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். அப்போது பாரதப்பிரதமராக இருந்த இந்திராகாந்தி அவர்கள் இந்த பேச்சை போல் நான் எங்கும் கேட்டதில்லை என்று அம்மாவை பாராட்டினார். இப்படி நாடாளுமன்றத்தில் அறிஞர் அண்ணாவும், புரட்சித்தலைவி அம்மாவும் தங்களின் பேச்சுதிறமையால் தமிழகத்திற்கு புகழை சேர்த்தனர். ஆனால் இன்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சராக இருந்து எந்த கேள்விக்கும் பதில் பேச தெரியாமல் வாய்மூடி மவுனியாக இருந்து மற்றவர்கள் எள்ளி நகையாடும் வகையில் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய களங்கத்தை தந்தவர் தான் கருணாநிதி மகன் அழகிரி.அண்ணா அவர்களின் குடும்பம் வறுமையில் வாடுவதை கண்டு அம்மா அவர்கள் அண்ணாவின் துணைவியார் ராணி அம்மாள் அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியது மட்டுமல்லாமல்  அண்ணாவின் நூல்களை நாட்டுடைமையாக்கி அதன்மூலம் கிடைத்த 75 இலட்சம் ரூபாயை அண்ணாவின் துணைவியாரிடம்  வழங்கினார். ஆனால் கருணாநிதியோ தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு கூட அண்ணாவின் பெயரை வைத்தது கிடையாது. மேலும் அண்ணாவின் பெயரை சொல்லியே அதன்மூலம் புத்தகம் போட்டு அந்த வருமானத்தை தன் குடும்ப கஜானாவில் சேர்த்தவர் தான் கருணாநிதி. பேரறிஞர் அண்ணா அவர்கள் கொள்கைப்படி சாமானிய மக்கள் பொருளதாரத்தில் உயரும் வண்ணம் பல்வேறு திட்டங்களை கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றி சாமானிய மக்களை இன்று அம்மா அவர்கள் பொருளாதாரத்தில் உயர்த்தி உள்ளார்கள். தமிழ்நாட்டில் அம்மா அவர்கள் கொண்டு வந்த திட்டங்களை கண்டு மற்ற மாநில முதலமைச்சர்களும் தங்கள் மாநிலங்களுக்கு இதை வழங்க அங்கிருக்கும் அரசு உயரதிகாரிகளை தமிழகத்திற்கு அனுப்பி ஆலோசனைகளை பெற்று செல்கின்றார்கள்.பள்ளிக்கல்வித்துறைக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் உயர்கல்வித்துறைக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் என கல்வித்துறைக்காக மட்டும் 21 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளார். 1 முதல் 12 ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம்இ காலணிஇ சீருடை உட்பட 14 வகையான பொருட்களை வழங்கியுள்ளார்கள். இரண்டு ஆண்டுகளில் 52 அரசு கல்லூரிகளை அம்மா அவர்கள் துவங்கியுள்ளார்கள். மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கியதின் மூலம் இந்த ஆண்டில் கூடுதலாக 1 இலட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்;ந்துள்ளனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் அண்ணா அவர்கள் விரும்பிய அறிவுப் புரட்சியை  ஏற்படுத்தி தந்தவர் நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் .

      அண்ணா அவர்கள் படி அரிசி திட்டத்தை கோவையிலும், சென்னையிலும் கொண்டு வந்தார். ஆனால் நிதிப்பற்றாக்குறையால் அதை அவரால் செயல்படுத்த முடியவில்லை. ஆனால் இன்று அண்ணாவின் கனவை நனவாக்கும் வகையில் 1 கோடியே 85 லட்சம் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசியை அம்மா அவர்கள் வழங்கி வருகிறார்கள். இந்தியாவில் உள்ளமாநிலங்களில்தமிழகத்தில் தான் முழு உணவு பாதுகாப்பு உள்ளது. இது மட்டுமல்லாது பேரறிஞர் அண்ணா வகுத்த மத்தியில் கூட்டாட்சி மாநில சுயாட்சி என்ற கொள்கைக்கு எதிராக மத்திய காங்கிரஸ் அரசு திகழ்ந்து வருகிறது. தமிழகத்திற்கு நியாயமான முறையில் வழங்க வேண்டிய நிதி, மண்ணெண்ணெய் அளவு, மின்சாரம் போன்றவற்றை தர மறுப்பதுடன் தமிழகத்தின் ஜீவதார உரிமைகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இதையெல்லாம் அம்மா அவர்கள் சட்டத்தின் மூலம் கடுமையாக போராடி மீட்டு வருகிறார். பேரறிஞர் அண்ணா வகுத்த மாநில சுயாட்சி கொள்கைகளை பறித்து வரும் மத்திய காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் கருணாநிதிக்கு வரும் தேர்தலில் நிச்சயம் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். மற்றும் தமிழ்நாட்டிற்கு வழங்கும் திட்டங்களை கண்டு ஒட்டுமொத்த இந்தியாவில் வாழும் மக்கள் இத்திட்டம் தங்கள் மாநிலத்திற்கு வர வேண்டும் என்றால் அம்மா அவர்கள் பாரத பிரதமராக வர வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் கழகம் 40 இடங்களில் அமோக வெற்றி பெற்று  அம்மா அவர்கள் பாரத பிரதமராகி இந்திய தேசத்தை உலக அரங்கில் வல்லரசாக உருவாக்கி காட்டுவார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

------------------------------------------------------------------------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony