முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதார சிக்கல்: அமெரிக்காவில் அரசு நிறுவனங்கள் மூடல்

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், அக். 2 - பொருளாதார சிக்கல் காரணமாக அமெரிக்காவில்17 ஆண்டுகளுக்கு பிறகு அரசு நிறுவனங்கள் மூடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் அதிபர் ஒபாமா அரசு2 வது முறையாக பொறுப்பு ஏற்றதில் இருந்து நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதற்கிடையே வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அதன் உச்சகட்டமாக பட்ஜெட்டுக்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் நிதி செலவினம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த3 ஆண்டுகளுக்கு முன்பு ஒபாமா புதிய சுகாதார திட்டம் கொண்டு வந்தார். அதன்படி அமெரிக்கர்கள் அனைவருக்கும் தனியார் நிறுவனங்கள் மூலம் சுகாதார இன்சூரன்ஸ் திட்டம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்கு அதிக நிதி ஒதுக்கியதால்தான் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பட்ஜெட்டுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்காததால் ஒபாமா அரசு கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனால் அரசு நிறுவனங்களை மூட ஒபாமா அரசு முடிவு செய்துள்ளது. அதன் முதல் கட்டமாக அரசு ஊழியர்களை சம்பளம் இல்லாத விடுமுறையில் செல்ல உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால்7 லட்சத்து85 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம் உள்ளது. இவர்களுக்கு இந்த மாத சம்பளம் மட்டும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே அத்தியாவசிய தேவையான சுகாதாரம், ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறையினருக்கு மட்டும் இதில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பணியில் தொடர்ந்து நீடிப்பார்கள். அரசு நிறுவனங்கள் மூடப்படுவதால் வாரத்துக்கு100 கோடி டாலர் வரை இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இது போன்ற நிலை கடந்த17 ஆண்டுகளுக்கு முன்பு பில்கிளிண்டன் ஆட்சி காலத்தில் ஏற்பட்டது. அப்போது அரசு நிறுவனங்கள்21 நாட்கள் மூடிக் கிடந்தன. தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியில் அமெரிக்காவில் தேசிய பூங்கா, தேசிய சரணாலயம், இலவச அருங்காட்சியகம் போன்றவைகள் மூடப்படுகின்றன. அதே நேரத்தில் பாஸ்போர்ட் அலுவலகம், சுகாதார அலுவலகம், வெளியுறவு அமைச்சகம், பாதுகாப்பு அலுவலகம், போலீஸ் நிலையங்கள், கோர்ட்டுகள் மற்றும் விமான நிலையங்கள் தொடர்ந்து இயங்கும். பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள இந்த நிலைக்காக எனது பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். இது குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த சம்பவத்துக்காக யாருடனும் பேச்சுவார்த்தைக்கு உடன்பட மாட்டேன் என்றும் கூறியுள்ளார். தற்போது அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி இந்தியா உட்பட உலக நாடுகளையும் பொருளாதார நெருக்கடியில் ஆழ்த்தும்  என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்