முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்., பிரதமராக விருப்பம்: சிறுமி மலாலாவின் ஆசை

சனிக்கிழமை, 12 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், அக். 13 - நாடு முழுவதும் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க செய்ய பிரதமராக விரும்புகிறேன் என பாகிஸ்தான் சிறுமி மலாலா தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானை சேர்ந்த சிறுமி மலாலா கடந்த ஆண்டு தலிபான் பயங்கரவாத அமைப்பால் தாக்கப்பட்டார். அதில் இருந்து மீண்டு அனைவருக்கும் கல்வி கிடைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கும், மலாலாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு மலாலா அளித்த பேட்டியில், 

பாகிஸ்தானின் மறைந்த பெண் பிரதமர் பெனாசிர் பூட்டோ என்னை மிகவும் கவர்ந்தவர். அவரை போல் நானும் பிரதமராகி நாட்டுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். அப்போதுதான் நாடு முழுவதும் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்க செய்து அவர்களை பள்ளிக்கு அனுப்பும் வாய்ப்பு கிடைக்கும். பட்ஜெட்டில் கல்விக்கும் அதிக நிதி ஒதுக்க முடியும். அதே சமயம் நாட்டின் வெளியுறவு கொள்கைகளிலும் கவனம் செலுத்துவேன். 

தலிபான் அமைப்பினரால் என் உடலைத்தான் சுட முடிந்ததே தவிர, என் கனவுகளை சுட முடியாது. அவர்கள் மிகப் பெரிய தவறு செய்து விட்டார்கள். முன்பு எனக்கு இறப்பு குறித்து பயம் இருந்தது. ஆனால் இப்போது அது குறித்து சிறுதுளி பயம் கூட இல்லை. கறுப்போ, வெள்ளையோ, கிறிஸ்தவரோ, முஸ்லீமோ அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு செல்லும் நிலையை ஏற்படுத்த வேண்டும். 

எனக்கு சிறிய வயதுதான் ஆகிறது. கல்விக்காக இன்னும் ஏராளமான பணிகள் உள்ளன. வருங்காலத்தில் ஒரு பள்ளியை தொடங்கி அதில் பல குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற நம்பிக்கையும் தைரியமும் எனக்கு உள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு பெறும் தகுதி அனைவருக்கும் உள்ளது. அது குறித்து பள்ளிப் பாடப் புத்தகங்களில் படித்திருக்கிறேன். எனினும் எனக்கு இந்த விருதை வழங்கினால் அதில் கிடைக்கும் பரிசு தொகையை பெண் குழந்தை கல்வி விழிப்புணர்வுக்காக பயன்படுத்துவேன். எல்லா குழந்தைகளும் பள்ளிக்கு செல்வதை காண வேண்டும் என்பதே என் ஒரே குறிக்கோள். அதையேதான் அமைதிக்கும், கல்விக்கும் நல்லிணக்கத்துக்கும் கிடைக்க கூடிய மிகப் பெரிய விருதாக கருதுகிறேன். 

சமீபத்தில் மலாலா எழுதி வெளியிட்ட ஐ ஆம் மலாலா என்ற புத்தகத்தை விற்பனை செய்ய கூடாது என பாகிஸ்தானின் தெஹ்ரிக் இ தலிபான் பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஷகீத்துல்லா ஷாகீத், பாகிஸ்தானின் டான் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறும் போது, இஸ்லாம் மதத்துக்கு எதிராக மலாலா தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மலாலாவை கொல்வதற்கான சந்தர்ப்பத்தை நாங்கள் இழக்கவில்லை. அதே போல் மலாலா எழுதிய புத்தகத்தை விற்பனை செய்வோரையும் நாங்கள் தாக்குவோம் என்று தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்