முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்தது

வெள்ளிக்கிழமை, 13 மே 2011      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்,மே.14 - கேரள மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி குறைந்த மெஜாரிட்டியில் ஆட்சியை பிடித்தது. தமிழகம், புதுவை, கேரளம் ஆகிய 3 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 13-ம் தேதி சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. கடந்த முறை மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இடது கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அமோக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக அச்சுதானந்தன் மீண்டும் பதவி ஏற்றார். அதன் பின்னர் அவருக்கும் பினராய் விஜயனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இடதுசாரி ஜனநாயக கூட்டணிக்கு செல்வாக்கு குறைந்தது.  2009-ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்றது. அதேமாதிரி நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெறும் என்று கூறப்பட்டது. காங்கிரஸ் வெற்றிபெற்றால் யார் முதல்வர் என்ற பிரச்சினை எழுந்தது. அதோடு மட்டுமல்லாது இடதுசாரி கூட்டணி அரசானது நிர்வாகத்தில் ஊழல் குற்றச்சாட்டு இல்லாமல் பார்த்துக்கொண்டது. தேர்தல் பிரசாரத்தின்போது இடதுசாரி ஜனநாயக கூட்டணி கட்சியினர் தங்களுடைய அரசின் சாதனைகளை விளக்கமாக மக்களிடம் எடுத்துக்கூறினர். தமிழகத்தில் ஒரு நாளைக்கு பலமணி நேரம் மின் தட்டுப்பாடு உள்ளது. எங்கள் ஆட்சியில் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் கூட கேரளத்தில் மின்தடை இல்லை என்று இடதுகம்யூனிஸ்ட் தலைவர்கள் மக்களிடம் எடுத்துக்கூறினர். இதனால் கடைசி நேரத்தில் கேரளாவில் கொஞ்சம் நிலை மாறியது. அதனால் இடதுசாரி ஜனநாயக கூட்டணிதான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறப்பட்டது. இடுக்கி போன்ற மாவட்டங்களிலும் இடதுசாரி ஜனநாயக கூட்டணி கட்சியினர் ஆர்வமாக வாக்களித்தனர். ஓட்டு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.  இதில் முதலில் இடதுசாரி ஜனநாயக கூட்டணிதான் முன்னணியில் இருந்தது. பின்னர் ஐக்கிய ஜனநாயக முன்னணி முன்னணிக்கு வந்தது. கடைசியில் இந்த கூட்டணி சொர்ப்ப மெஜாரிட்டியில் ஆட்சியை பிடித்துள்ளது. நேற்று பிற்பகல் வரை மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 129 தொகுதிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஐக்கிய ஜனநாயக முன்னணி 67 தொகுதிகளிலும் இடதுசாரி ஜனநாயக முன்னணி 62 தொகுதிகளிலும் வெற்றிபெற்றிருந்தன. ஐக்கிய ஜனநாயக முன்னணி 5 தொகுதிகளிலும் இடதுசாரி ஜனநாயக முன்னணி 6 தொகுதிகளிலும் முன்னணியில் இருந்தது. மாலை 6 மணிக்கெல்லாம் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இதில் ஐக்கிய ஜனநாயக முன்னணி 72 தொகுதிகளிலும் இடதுசாரி ஜனநாய முன்னணி 68 தொகுதிகளிலும் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அச்சுதானந்தன் மற்றும் அவரது அமைச்சரவையில் இருந்த அமைச்சர்களில் 11 பேரும் வெற்றிபெற்றுள்ளனர். 3 அமைச்சர்கள் மட்டும் தோல்வியை தழுவியுள்ளனர்.  தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்