முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி

சனிக்கிழமை, 14 மே 2011      அரசியல்
Image Unavailable

மதுரை,மே.14 - நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 200-க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றிபெற்றது. அ.தி.மு.க. மட்டுமே 150 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கிறது. கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா 3-வது முறையாக தமிழக முதல்வராக பதவிஏற்கவிருக்கிறார். இந்த தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழகம் கேரளம், மேற்குவங்கம், உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இவற்றில் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் ஒரு மெகா கூட்டணியும் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும் போட்டியிட்டன. தேர்தல் பிரசாரம் முடிந்த பிறகு ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தல் மிக விறுவிறுப்பாகவும் அமைதியாகவும் நடைபெற்றது. பொதுவாக தேர்தல் முடிந்ததும் 3-வது நாளே முடிவுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை தேர்தல் முடிவுகள் ஒருமாதம் கழித்து அறிவிக்கப்பட்டது. அதாவது தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்றுதான் எண்ணப்பட்டன. இதையொட்டி தமிழகம் முழுவதும் துணைராணுவ படையினர் உள்பட போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர். வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு திட்டமிட்டபடி துவங்கியது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. பின்னர் 8.30 மணிக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. ஆரம்பத்தில் இருந்தே அ.தி.மு.க. வே பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது. காலை 10 மணிக்கே அ.தி.மு.க. வின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனால் அ.தி.மு.க. வினர் மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளிக்குதித்தனர். இந்த வெற்றியை படடாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. அ.தி.மு.க. தான் போட்டியிட்ட 160 தொகுதிகளில் கிட்டத்தட்ட 150 தொகுதிகளை கைப்பற்றிவிட்டது. இதேபோல் தே.மு.தி.க. போட்டியிட்ட 41 தொகுதிகளில் 27 இடங்கள் வரை கைப்பற்றி உள்ளது. இடதுகம்யூனிஸ்ட்  கட்சி 8 இடங்களையும் வலதுகம்யூனிஸ்ட் கட்சி 6 இடங்களையும் புதிய தமிழகம் 2 இடங்களையும் கைப்பற்றின. இதன் தலைவர் கிருஷ்ணசாமி வெற்றிபெற்றுள்ளார். ச.ம.க. தலைவர் சரத்குமார் தென்காசி தொகுதியில் வெற்றிபெற்றார். இவரது கட்சி 2 இடங்களிலும் வெற்றிபெற்றுவிட்டது. குடியரசு கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, பார்வர்டு பிளாக் தலா ஒரு தொகுதிகளை கைப்பற்றிவிட்டன. அ.தி.மு.க. கூட்டணிக்கு மகத்தான வெற்றிகிடைத்துள்ளது. இதை ஒரு வெற்றி அலை என்றே சொல்லலாம். ஆனால் தி.மு.க. கூட்டணியோ படுதோல்வியை சந்தித்துவிட்டது. கருத்து கணிப்புக்கூட தி.மு.க. 35 இடங்களில் வெற்றிபெறும் என்று கூறியது. ஆனால் அதைவிட மோசமாக தி.மு.க.வெற்றிபெற்றுள்ளது. இந்த கட்சி 120 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் 20 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கோ கேவலமான தோல்வி ஏற்பட்டுள்ளது. இந்த கட்சி 63 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் வெற்றிபெற்றதோ 4 இடங்களில்தான். தங்கபாலுவே மண்ணை கவ்விவிட்டார். திருநாவுக்கரசரும் தோல்வி அடைந்தார். காங்கிரஸ் இந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதேபோல் 30 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க.வுக்கு கிடைத்த இடங்கள் 2 தான்.  விடுதலைசிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. இந்த கட்சியும் மண்ணை கவ்விவிட்டது. தி.மு.க. வில் பல முக்கிய தலைகள் உருண்டுவிட்டன. அன்பழகன், வீரபாண்டி, ஆறுமுகம், பரிதிஇளம்வழுதி, எ.வா.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் போன்ற முக்கிய தலைவர்கள் தோல்வியை தழுவினர். திருவாரூர் தொகுதியில் கருணாநிதி வெற்றிபெற்றுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சுமார் 22 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றுள்ளார். அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெற்றதை அடுத்து இக்கட்சி தனித்தே ஆட்சி அமைக்கிறது. 3-வது முறையாக ஜெயலலிதா முதல்வராகிறார். தமக்கு வாக்களித்த மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதே தமது லட்சியம் என்று கூறினார். ரிஷிவந்தியம் தொகுதியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சுமார் 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். இவரது கட்சி இந்த தேர்தலில் கணிசமான இடங்களை பெற்றுள்ளது. அ.தி.மு.க. வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அனைத்து கட்சிகளுமே வெற்றிக்களிப்பில் மிதக்கின்றன. ஓரிரு நாட்களில் ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்பார் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்