முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா 41,848 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி

சனிக்கிழமை, 14 மே 2011      அரசியல்
Image Unavailable

ஸ்ரீரங்கம்,மே.14 - திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிலாத 41 ஆயிரத்து 848 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று அமோக வெற்றிபெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஆனந்தன் படுதோல்வி அடைந்தார். 

தமிழக சட்டசபை தேர்தலில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் உள்ள அ.தி.மு.க. தொண்டர்களும் நிர்வாகிகளும் தங்களுடைய தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை கேட்டுக்கொண்டனர். ஒருவர் ஒரு தொகுதியிலோ அல்லது இரண்டு தொகுதியிலோதான் போட்டியிட முடியும். அதனால் தமிழகத்தின் மையப்பகுதியில் இருக்கும் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டார். தேர்தல் பிரசாரத்தின்போது அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்ரீரங்கத்தில் இருந்துதான் பிரசாரத்தை தொடங்கினார். ஸ்ரீரங்கம் தொகுதி மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஜெயலலிதா சென்று அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு தீவிர பிரசாரம் செய்தார். ஜெயலலிதா சென்ற இடமெல்லாம் அலைகடலென மக்கள் கூட்டம் அலைமோதியது. அப்போதே அ.தி.மு.க. கூட்டணி வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. மேலும் தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இது அ.தி.மு.க. வெற்றியை மேலும் உறுதி செய்தது. ஜெயலலிதாவும் அவர் தலைமையில் உள்ள அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களும் வெற்றிபெற வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள பெரிய வைணவன கோயில்கள், சைவ கோயில்களில் பிரார்த்தனை மற்றும் வழிபாடு செய்யப்பட்டு ஜெயலலிதாவுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. மேலும் பழனி முருகன் கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அ.தி.மு.க. தொண்டர்களும் நிர்வாகிகளும் ஜெயலலிதா வெற்றிபெற்று மீண்டும் முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என்று நேர்த்திகடனாக தங்கத்தேர் இழுத்தனர். அதன்படி தமிழக தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெற்றுள்ளது. 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிகிடைத்துள்ளது. மேலும் அ.தி.மு.க. வு மட்டும் 152 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெருபான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா அமோக வெற்றிபெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஆனந்தனை விட 41 ஆயிரத்து 848 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றுள்ளார். ஸ்ரீரங்கம் தொகுதியில் மொத்த ஓட்டுக்கள் 2 லட்சத்து 20 ஆயிரத்து 962 ஓட்டுக்களாகும். இதில் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 808 ஓட்டுக்கள் பதிவாகின. ஜெயலலிதாவுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 328 ஓட்டுக்கள் கிடைத்தன. அதற்கு அடுத்தபடியாக தி.மு.க. வேட்பாளர் ஆனந்தனுக்கு 63 ஆயிரத்து 480 ஓட்டுக்கள் கிடைத்தன. இறுதியில் ஜெயலலிதா 41 ஆயிரத்து 848 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றார். இந்த தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ. க. வேட்பாளர் கே.எஸ். அறிவழகன் உள்பட 21 பேர் டெபாசிட் இழந்தனர். வெற்றிபெற்றதற்கான சான்றிதழை ஜெயலலிதா நேரடியாக வர முடியாததால் அவருக்கு பதிலாக திருச்சி மாவட்ட பொருளாளர் செல்வராஜ் பெற்றுக்கொண்டார். உடன் திருச்சி எம்.பி., குமார், முன்னாள் அமைச்சர் கே.கே.பாலசுப்பிரமணியன் ஸ்ரீரங்கம் முன்னாள் எம்.எல்.ஏ.பரஞ்ஜோதி ஆகியோர் உடன் இருந்தனர். ஸ்ரீரங்கம் தொகுதியில் தொடர்ந்து 8-வது முறையாக அ.தி.மு.க. வெற்றிபெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்