முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் 5 நாள் பயணமாக ரஷ்யா - சீனாவுக்கு பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,அக்.21 - பிரதமர் மன்மோகன் சிங் 5 நாள் பயணமாக நேற்று ரஷ்யா, சீனாவுக்கு அதிகாரப்பூர்வமாக புறப்பட்டு சென்றார். அவரது பயணத்தில் சீனாவுடனான எல்லைப்பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. 

கடந்த வாரம் புருனே மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு 4 நாள் பயணமாக சென்றுவந்தார். புருனேயில் நடைபெற்ற 11_வது இந்திய_ஏசியான் மற்றும் கிழக்காசியா உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். புருனேவுடன் வர்த்தகம், பொருளாதாரம் போன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். அதனையடுத்து இந்தோனேஷியாவுக்கு சென்று அந்த நாட்டு தலைவரை சந்தித்து பேசிவிட்டு புதுடெல்லி திரும்பினார். அதனையடுத்து நேற்று 5 நாள் பயணமாக ரஷ்யா, சீனாவுக்கு புறப்பட்டு சென்றார். ரஷ்யாவுடன் ராணுவம், தொழில்நுட்பம், வர்த்தகம், மற்றும் அணுசக்தி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்று தெரிகிறது. அவரது ரஷ்ய பயண நிகழ்ச்சியில் கூடங்குளம் அணுசக்தி மின்சார நிலையம் விவகாரம் இடம் பெறவில்லை. அப்படியிருந்தபோதிலும் கூடங்குளத்தில் 2 மற்றும் 3_வது அணுசக்தி நிலையம் அமைப்பது அதற்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் இதர உபகரணங்கள் பொருத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்று தெரிகிறது. ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு சீனாவுக்கு மன்மோகன் சிங் செல்கிறார். சீனாவுடன் நமக்கு எல்லைப்பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது. அருணாசலப்பிரதேசத்தில் பல பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்திருப்பதோடு மாநிலம் முழுவதையும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. மேலும் லடாக் பகுதியில் அடிக்கடி சீனா ராணுவம் ஊடுருவலில் ஈடுபடுகிறது. அதனால் எல்லைப்பகுதியில் சுமூகமான சூழ்நிலை நிலவ வேண்டியது குறித்து சீன பிரதமர் மற்றும் அதிபருடன் பிரதமர் மன்மோகன் சிங் விரிவான முறையில் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று மன்மோகன் சிங் வெளிநாடு புறப்பட்டு செல்வதற்கு முன்பு அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகத்தில் பெருமளவு ஏற்றத்தாழ்வு உள்ளது. இருநாடுகளுக்கிடையே வர்த்தக இடைவெளி சுமார் 50 ஆயிரம் கோடி அளவுக்கு இருக்கலாம் என்று தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்