முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குள ஒப்பந்தம்: ரஷ்யா புறப்படும் முன் பிரதமர் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,அக்.21 - தமது ரஷ்ய பயணத்தின்போது கூடங்குளத்தில் 2 மற்றும் 3_வது அணுமின் உற்பத்தி பிரிவு அமைப்பது குறித்து ஒப்பந்தம் செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். 

இந்தியா_ரஷ்ய ஒப்பந்தத்தின்படி கூடங்குளத்தில் அணுசக்தி நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதில் 3 யூனிட்கள் கட்டப்பட வேண்டும். தற்போது ஒரு யூனிட் மட்டும் கட்டப்பட்டு உற்பத்தி தொடங்கியுள்ளது. இதர 2 யூனிட்களை கட்ட வேண்டும். இதற்காக இரண்டு அணுஉலைகளை ரஷ்யா அனுப்ப வேண்டும். இதுதொடர்பாக இந்திய_ரஷ்ய நாடுகளின் கம்பெனிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாக தெரிகிறது. அதனால்தான் நேற்று ரஷ்யா செல்லுமுன்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மன்மோகன் சிங், தமது பயணத்தின்போது இருநாடுகளிடையே கூடங்குளத்தில் இதர யூனிட்கள் கட்டுவது தொடர்பாக ஒப்பந்தம் ஏற்படலாம் என்று நம்பிக்கை தெரிவித்தார். அணுஉலை விபத்து நஷ்ட ஈடு தொடர்பாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும். இதுதொடர்பாக இரண்டு நாடுகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. அதை போக்குவது தொடர்பாக இரண்டு நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் முடிவு எட்டப்படலாம் என்று தெரிகிறது. மேற்குவங்கத்தில் ஹரிபூரில் ரஷ்யாவின் உதவியுடன் அணுமின்சார உற்பத்தி நிலையம் கட்டும் திட்டம் இருந்தது. இதற்கு அந்தப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதனால் ரஷ்யாவுக்கு வேறு ஒரு இடத்தில் இடம் ஒதுக்கப்படும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். இந்தியா_ரஷ்யா இடையே வர்த்தக உறவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுமார் 8.5 பில்லியன் டாலர் அளவுக்கு இருந்த வர்த்தகம் வரும் 2015_ம் ஆண்டில் 15 பில்லியன் அளவுக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தவிர் முதலீடு மற்றும் பொருளாதாரம் தொடர்பாகவும் பல ஒப்பந்தங்கள் ஏற்படலாம் என்றும் தெரிகிறது. இந்தியா_ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி ஒவ்வொரு ஆண்டும் இருநாட்டு தலைவர்களும் வந்துபோக வேண்டும். அதன்படி பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யா சென்றுள்ளார். மாஸ்கோவில் அதிபர் புட்டீன் மற்றும் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இந்த பேச்சுவார்த்தையின்போது இந்திய எல்லையில் நடக்கும் அத்துமீறல் குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இருநாடுகளிடையே எரிசக்தி, ரசாயணம், உயிர்காக்கும் மருந்து பொருட்கள், தொலைதொடர்புத்துறை ஆகிய துறைகளிலும் ஒப்பந்தம் ஏற்படலாம். கடந்த 2010_ம் ஆண்டு ரஷ்ய அதிபர் புட்டீன் இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது அவர் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றும்படி மன்மோகன் சிங் கேட்டுக்கொள்வார் என்றும் தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்