முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடது கம்யூ. தலைவராக பிரகாஷ் காரத் நீடிப்பார்

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மே.15 - இடதுகம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக பிரகாஷ் காரத் தொடர்ந்து நீடிப்பார் என்று தெரிகிறது. நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் மேற்குவங்காளத்தில் கடந்த 34 ஆண்டுகளாக எந்தவித இடையூறும் இன்றி ஆட்சி செய்து வந்த இடதுகம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசகுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாது கேரள மாநிலத்திலும் சொர்ப்ப வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. மேற்குவங்காளத்தில் இடதுசாரி கூட்டணிக்கு ஏற்பட்டுள்ள தோல்வியானது அந்த கட்சிக்கு பெரும் இழப்பாகும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று இடதுகம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் ராஜினாமா செய்யப்படலாம், அல்லது அவர் நீக்கப்படலாம் என்று வதந்தி கிளம்பியது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இடதுகம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக பிரகாஷ் காரத் தொடர்ந்து நீடிப்பார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இடது கம்யூனிஸ்ட் கட்சியானது தொண்டர்களை மையமாக வைத்து இயங்கி வருகிறது. கட்சிக்கு நல்ல பெயர் ஏற்படும் போதும் கெட்ட பெயர் ஏற்படும்போதும் கட்சி தொண்டர்களும் தலைவர்களும் அதன் பொறுப்பை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளுவோம். கட்சி தலைமையில் இருந்து பிரகாஷ் காரத்தை நீக்க வேண்டும் என்றோ அல்லது புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றோ கட்சி கருதவில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இடது கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக அவர் பதவிக்காலம் முடியும் வரை நீடிப்பார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இடதுகம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக பிரகாஷ் காரத் கடந்த 2005-ம் ஆண்டு புதுடெல்லியில் நடந்த இடதுகம்யூனிஸ்ட் கட்சியின் 17-வது மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனையடுத்து கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் கோவையில் நடந்த மாநாட்டில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் இன்னும் ஓராண்டு இருக்கிறது. அதுவரை அவர் நீடிப்பார் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony