முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி துவங்கியது

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

ஊட்டி, மே.15 - கோத்தகிரி நேரு பூங்காவில் 4-வது காய்கறி கண்காட்சி நேற்று துவங்கியது. இதில் வைக்கப்பட்டிருந்த காய்கறிகளியினாலான உருவங்களை பார்த்து பார்வையாளர்கள் பரவசமடைந்தனர். நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கோடை விழாவின் முதல் நிகழ்ச்சி 

கடந்த 7,8 தேதிகளில் ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா காட்சியுடன் துவங்கியது. அதனைத்தொடர்ந்து 8 தேதியிலிருந்து தினந்தோறும் மாலை வேளையில் மலைப்பகுதி மேம்பாட்டுத்திட்ட மைதானத்தில் கோடை விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஆண்டுதோறும் கோடை சீசனையொட்டி மே மாதம் கடைசி வாரத்தில் கோத்தகிரி நேரு பூங்காவில் நடத்தப்படும் காய்கறி கண்காட்சி இந்தாண்டு இரண்டாவது வாரமான நேற்று துவங்கியது. இக்கண்காட்சியை நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். அதன்பின்னர் பூங்காவில் தருமபுரி தோட்டக்கலைத்துறை சார்பில் 800 கிலோ எடை கொண்ட பல வண்ண கொடை மிளகாயினால் வடிவமைக்கப்பட்டிருந்த இந்திய வரைபடம், நீலகிரி தோட்டக்கலைத்துறை சார்பில் 800 கிலோ பீட் ரூட்டினால் 12 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டிருந்த ராட்சத பீட்ரூட், சேலம் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர்கோபுரம், கோவை, திருச்சி, திண்டுக்கல், விழுப்புரம், தேனி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறிகளினால் வடிவமைக்கப்பட்டிருந்த வன விலங்குகளின் உருவங்கள், அன்னை தெரசா, மகாத்மா காந்தி, அப்துல்கலாம், பாரதியார், திருவள்ளுவர் போன்ற  தலைவர்களின் உருவங்கள், சேனைக்கிழங்கினால் வடிவமைக்கப்பட்டிருந்த காண்டாமிருக உருவம், திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார் கோவில் உட்பட 15க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த காய்கறிகளை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குப்புசாமி, காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் காசி விஸ்வநாத், தோட்டக்கலை இணை இயக்குநர் ஆல்தொரை, உதவி இயக்குநர்கள் ராஜேந்திரன், ஜெகதீஸ்குமார், ராம்சுந்தர், பிரகாசம், மணி, தருமபுரி உதவி இயக்குநர் முருகன் முருகானந்தன் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இக்காய்கறி கண்காட்சியில் காய்கறிகளினால் வடிவமைக்கப்பட்டிருந்த வன உயிரினங்களின் உருவங்கள், பிரபலமான தலைவர்களின் உருவங்களை ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் கண்டு பரவசமடைந்தனர். இக்கண்காட்சி ஒவ்வொரு அரங்குகளின் முன்புறம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் உள்ள சத்துகளின் அளவு குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. 

காய்கறி கண்காட்சியின் நிறைவு நாள் மற்றும் பரிசளிப்பு விழா இன்று மாலை 3.00 மணிக்கு நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்