முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மம்தா மந்திரிசபையில் காங்கிரஸ் கட்சி இணையுமா?பிரணாப்முகர்ஜி ஆலோசனை

திங்கட்கிழமை, 16 மே 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மே -16 - மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பேனர்ஜி தலைமையிலான புதிய அரசில் காங்கிரஸ் இணையும் என்று தெரிகிறது. அதற்கான சாதகமான அறிகுறிகள் தற்போது தெரிகின்றன. இதுகுறித்து பிரணாப் முகர்ஜியும் மேற்கு வங்க  மாநில தலைவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்திவருகிறார். நடந்துமுடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் ஜெயலலிதா அமோக வெற்றிபெற்றுள்ளார். தி.மு.க.வை படுகுழிக்கு தள்ளிய அ.தி.மு.க. மொத்தம் 146 இடங்களை கைப்பற்றி உள்ளது. அ.தி.மு.க. கூட்டணிக்கு 203 இடங்கள் கிடைத்தன. இது ஒரு மகத்தான வெற்றியாகும். இதேபோல் மேற்குவங்கத்தில் மம்தா பேனர்ஜி வெற்றி பெற்றுள்ளார். இவரது தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டணி 226 இடங்களில் வெற்றிவாகை சூடியுள்ளது. 34 ஆண்டுகால இ.கம்யூனிஸ்ட் ஆட்சி இம்மாநிலத்தில் முடிவுக்கு வந்துள்ளது. எளிமையாக காணப்படும் மம்தா பேனர்ஜி ஓரிரு நாளில் பதவியேற்க இருக்கிறார். இவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்தோடு வெற்றிபெற்றுள்ளது. அப்படி இருந்தும்கூட அமைச்சரவையில் சேருமாறு காங்கிரசுக்கு மம்தா அழைப்புவிடுத்துள்ளார். தமிழ்நாட்டில் மைனாரிட்டி தி.மு.க. அரசு காங்கிரஸ் தயவில் ஆட்சி நடத்தியது. ஆனால் கடைசிவரை காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்கவே இல்லை. ஆனால் மம்தா பேனர்ஜி அப்படி அல்ல. தன்பலத்தில் வெற்றிபெற்றும்கூட காங்கிரசுக்கு ஆட்சியில் பங்குபெற அழைப்பு விடுத்திருக்கிறார். இதை காங்கிரசும் பரிசீலித்து வருகிறது. அதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் மந்திரி சபையில் சேருவது குறித்து கட்சியின் மாநிலத் தலைவர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் மூத்த காங்கிரஸ் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆலோசனை நடத்தி வருகிறார். எனவே காங்கிரஸ் மந்திரிசபையில் சேருவது ஓரளவுக்கு உறுதியாகிவிட்டது. மம்தா பதவியேற்பு விழாவில் சோனியா கலந்துகொள்வாரா என்று காங்கிரஸ் தலைவர் ஒருவரிடம் கேட்டபோது மம்தா அழைத்தால் அவர் வராமல் இருக்க முடியாது என்று பதிலளித்தார். மேற்கு வங்கத்தில் விரைவில் மம்தாவின் ஆட்சி மலர்கிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்