முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் - எடியூரப்பா எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர்,மே.17 - கர்நாடக சட்டசபையை கலைக்கக்கோரி மத்திய அரசுக்கு கவர்னர் பரத்வாஜ் சிபாரிசு செய்துள்ளதை ஏற்றுக்கொண்டால் மாநிலத்தில் கவர்னருக்கு எதிராக சட்டம் மற்றும் அரசியல் ரீதியாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜ. முதல்வர் எடியூரப்பா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் கவர்னர் பரத்வாஜூக்கும் முதல்வர் எடியூரப்பாவுக்கும் கடந்த ஓராண்டு காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. முதல்வர் எடியூரப்பா மீது நிலப்பேர ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது வழக்குத்தொடர கவர்னர் பரத்வாஜ் அனுமதி கொடுத்தார். இதனால் அவர்களுக்கிடையே மோதல் போக்கு மேலும் அதிகரித்தது. இந்தநிலையில் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய 12 எம்.எல்.ஏ.க்களின் பதவியை மாநில சட்டசபை சபாநாயகர் ரத்து செய்தார். இதை எதிர்த்து அவர்கள் கர்நாடக ஐகோர்ட்டுக்கு சென்றனர். கர்நாடக ஐகோர்ட்டும் சபாநாயகரின் நடவடிக்கை சரிதான் என்று தீர்ப்பு அளித்தது. இதையும் எதிர்த்து அவர்கள் சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்தனர். விசாரணை முடிவில் கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்து சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதனால் முதல்வர் எடியூரப்பாவுக்கு சட்டசபையில் ஆதரவு குறைந்தது. அதேநேரத்தில் அந்த 12 எம்.எல்.ஏ.க்களும் எடியூரப்பாவுக்கு மீண்டும் ஆதரவு கொடுத்துள்ளனர். 

இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என்று கூறி சட்டசபையை கலைத்து விடும்படி மத்திய அரசுக்கு கவர்னர் பரத்வாஜ் அறிக்கை ஒன்றை அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. கவர்னர் அறிக்கையை மத்திய அரசு ஏற்று சட்டசபையை கலைத்தால் அரசியல் மற்றும் சட்ட ரீதியாக எதிர்த்து முழுமூச்சுடன் போராடுவோம் என்று முதல்வர் எடியூரப்பா நேற்று பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். பெங்களூரில் உள்ள முதல்வர் வீட்டில் நேற்று கேபினட் அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த எடியூரப்பா மேற்கண்டவாறு கூறினார். கர்நாடகாவில் என் தலைமையிலான பாரதிய ஜனதா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற கவர்னர் சிபாரிசை மத்திய அரசு ஏற்று நடவடிக்கை எடுக்குமானால் அதை சட்டம் மற்றும் அரசியல் ரீதியாக எதிர்த்து போராட தயாராகிக்கொண்டியிருக்கிறோம் என்றார். கவர்னரின் இந்த மனநிலை கண்டிக்கத்தக்கது. மீண்டும் எம்.எல்.ஏ.க்கள் தகுதி பெற்றுள்ள 10 பேர்களை கவர்னர் சந்திக்க மறுத்து வருகிறார் என்றும் எடியூரப்பா குற்றஞ்சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்