முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவின் முதல் அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      தமிழகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம்,மே.- 18 - ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு இலவச தாலி தங்க திட்டம் உட்பட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற துவங்கியுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  தமிழக முதல்வராக நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அன்று மாலையில் கோட்டைக்கு சென்று முதல் கோப்பில் கையெழுத்திட்டார். இதில் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த பல்வேறு அறிவிப்புகளில் சிலவற்றை அன்றைய தினம் செயலாற்றுவதற்கான கையெழுத்திட்டு அறிவித்தார்.
தமிழகத்தின் 14 வது சட்டசபைக்கான பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 13 ம் தேதி நடந்தது. கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தொடர் மின்வெட்டு, அனைத்து பொருட்களின் விலைகள் உயர்வு என தமிழகத்தின் அனைத்து மக்களும் ஏதாவது ஒரு வகையில் பாதிப்படைந்து வந்தனர். மேலும் வசதி படைத்தவர்கள், மேலும் மேலும் வசதி படைத்தவர்களாகவும், ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகவும் ஆக்கப்பட்டனர். தி.மு.க.வில் ஒரு குறிப்பிட்டவர்களும், மேலிடத்தின் செல்வாக்கை பெற்றவர்களும் கோடி கோடியாக சம்பாதித்து மிகப் பெரிய செல்வந்தர்களாகி விட்டனர்.
இது தவிர தி.மு.க. வின் கொள்கை பரப்பு செயலாளரான ராசா, ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் ரூ. 1.76 லட்சம் கோடி அளவிற்கு ஊழல் செய்தார். இந்த ஊழலுக்கு கூட்டு சதியாக கருணாநிதியின் மகள் கனிமொழியும் அந்த ஊழல் தொடர்பாக கலைஞர் டி.விக்கு ரூ. 200 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனால் ராசா கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய கனிமொழி மற்றும் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமாரிடம் சி.பி.ஐ. போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தவிர தி.மு.க.வினரின் அராஜகங்கள், அத்துமீறல்கள் ஆகியவற்றால் தமிழக மக்கள் மிகவும் கோபமடைந்திருந்தனர். எப்போது தேர்தல் வரும் என்று அவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு ஏப்ரல் 13 அன்று தேர்தல் நடைபெற்றது. அன்றைய தினம் மக்கள் தி.மு.கவுக்கு எதிராக தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். மே 13 அன்று வாக்குகள் எண்ணப்பட்டது.
முடிவுகள் வெளியானதில் இருந்து அ.தி.மு.க. கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்றது. இதை டி.வியில் பார்த்த பெண்களும், வெற்றி செய்தியை அறிந்தவர்ளும், பிரச்சாரத்தின் போது ஜெயலலிதா அறிவித்த இலவச மிக்சி, கிரைண்டர், பேன், தாலிக்கு தங்கம், 20 கிலோ அரிசி கிடைத்து விட்டது போன்று மகிழ்ச்சியடைந்தனர். கிராமத்தில் இருந்தவர்ளோ, ஆடு, மாடுகள் கிடைத்து விடும் என்றும் மாணவர்கள் லேப்டாப் கிடைத்து விடும் என்றும் மகிழ்ந்தனர். இது தவிர தொழிலதிபர்களோ மின்வெட்டுக்கு தீர்வு கிடைத்து விடும். தொழிலை வளர்ச்சியடைய செய்து லாபம் சம்பாதித்து விடலாம் என்றும் கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல்களில் இருந்து விடுபட்டு விட்டோம் என போலீசாரும் மகிழ்ச்சியடைந்தனர். அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அ.தி.மு.க. மட்டும் தனித்து 146 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
மே 16 அன்று முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்ற பின்னர் எந்த திட்டத்தை அறிவிக்கப் போகிறார் என மக்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் பதவியேற்பு விழா முடிவதற்கு பகல் 2 மணிக்கு மேலாகி விட்டதால் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட கூட்டணி கட்சி தலைவர்கள், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தமிழகத்தில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள், மந்திரிகள் ஆகியோருக்கு மரியாதை செய்யும் வகையில் மதிய உணவு அளிக்க ஜெயலலிதா சென்று விட்டார். அதன் பின்னர் அன்றைய தினம் கோட்டைக்கு சென்று தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 7 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முதலாவதாக ஏழைப் பெண்களின் திருமணத்திற்காக 4 சவரன் தங்கம் இனாமாக அளிக்கும் திட்டத்தில் முதல் கையெழுத்திட்டார். அதனை அடுத்து இளநிலை பட்டம் பெற்ற அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த திருமண உதவித் தொகையான ரூ. 25 ஆயிரத்தை ரூ. 50 ஆயிரமாக உயர்த்தியும், முதியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கணவினால் கைவிடப்பட்ட பெண்களுக்கான மாத உதவித் தொகையை ரூ. 500 லிருந்து ரூ. ஆயிரமாக உயர்த்தியும், பொது விநியோக திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கவும், அந்தியோதயா, அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 35 கிலோ அரிசியை இலவசமாக வழங்கவும், தமிழகத்தின் கடலோர மீன் வளத்தை பாதுகாக்க வேண்டி ஒவ்வொரு ஆண்டும் 45 நாட்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த காலக்கட்டத்தில் வருமானமின்றி தவிக்கும் மீனவர் குடும்பத்திற்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ. ஆயிரம் உதவித் தொகையை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கவும் ஆணை பிறப்பித்து அதற்கான கோப்பிலும் அரசு பணியாற்றும் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை பேணி பாதுகாக்க மகப்பேறு கால சலுகையாக 6 மாத கால மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என்று ஆணை பிறப்பித்து அதற்குரிய கோப்பிலும் அரசினுடைய சிறப்பு திட்டங்களை கவனிப்பதற்காக, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை என்ற ஒரு புதிய துறையை துவக்கி அதற்கான கோப்பிலும் முதல்வர் ஜெயலலிதா கையொப்பமிட்டார்.
இதன் மூலம் தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் தொடக்கத்தை முதல்வர் ஜெயலலிதா ஆரம்பித்து வைத்துள்ளார். தேர்தலில் வெற்றி செய்தி அறிவிக்கப்பட்டவுடன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜெயலலிதா, 18 மாதங்களில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என அவர் அறிவித்தார். அவரது அறிவிப்பின்படி தேர்தல் வாக்குறுதிகள் முதல் கட்டமாக அமுலுக்கு வந்துள்ளது. மற்ற அனைத்து திட்டங்களும் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டது போல் 18 மாதங்களில் நிறைவேற்றப்படும் என்பது உறுதியாகி விட்டது.
ஏற்கனவே 5 ஆண்டு கால தி.மு.க ஆட்சியில் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு சென்று பவுன் ஒன்றுக்கு 18 ஆயிரம் வரை விற்பனையானது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் தங்கத்தை வாங்குவதை தவிர்த்து தங்களது குழுந்தைகளுக்கு தங்கம் என பெயர் வைத்து மகிழ வேண்டிய அவல நிலையில் இருந்தனர். இந்த நிலையில் தேர்தலில் வெற்ற முதல்வர் ஜெயலலிதா, தாலிக்கு இலவச தங்கம் திட்டத்தை அமுல்படுத்தியதன் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது தவிர, இலவச அரிசி உட்பட 5 வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் கையெழுத்திட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழகத்தின் அனைத்து மக்களும் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துள்ளனர். இது குறித்து பெண்கள் சிலர் கூறியதாவது,
ராமேஸ்வரி: டெய்லர், மதுரை:
தி.மு.க ஆட்சியில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு கொடுத்தார்கள். ஆனால் சாப்பாட்டுக்கு குழம்பு வைப்பதற்கு ரூ. 50 தேவைப்பட்டது. அரிசியை மட்டும் ஒரு ரூபாய்க்கு கொடுத்து விட்டு மற்ற பொருட்கள் அனைத்தும் அதிகளவு விலை உயர்ந்து விட்டதால் ஏழை, நடுத்தர மக்கள் குடும்பம் நடத்துவது மிகுந்த கஷ்டமாக இருந்தது. ஒரு வீட்டில் கணவன் மட்டும் வேலைக்கு சென்றால் போதாது என்ற நிலை ஏற்பட்டு மனைவியும் வேலைக்கு செல்ல வேண்டியதிருந்தது. அப்படியிருந்தும் வாரத்திற்கு இரு முறை மட்டுமே காய்கறிகளை சமைக்கும் நிலை ஏற்பட்டது. முன்பெல்லாம் வாரத்திற்கு இருமுறை அசைவம் சாப்பிட்ட நிலை மாறி அந்நிலையில் காய்கறி சாப்பாடு என்ற நிலை உருவாகியது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வந்தனர். தி.மு.க. ஆட்சியில் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான திட்டங்கள் எதுவுமே தீட்டப்படவில்லை. இதனால் என்னைப் போன்ற நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனுபவித்த துன்பங்களுக்கு அளவே இல்லை. எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. எனது கணவர் மற்றும் எனது சம்பளம் எங்களது குடும்ப செலவுக்கே போதுமானதாக இல்லை. இந்நிலையில் எனது மூத்த பெண்ணிற்கு திருமணம் நிச்சயித்துள்ளேன். இந்த வேளையில் ஜெயலலிதா முதல்வராகி தாலிக்கு தங்கம் இலவசமாக தருவதாக அறிவித்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவதாகவும் ஜெயலலிதா அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. அது மட்டுமின்றி, குறிப்பாக விலைவாசிகளை கட்டுப்படுத்துவதாக அறிவித்திருப்பது ஏழை, நடுத்தர மக்களின் வயிற்றில் பாலை வார்த்தது போல் உள்ளது.
சாந்தி: திருநகர்:
கடந்த முறை ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அரசு ஊழியர்களை பழிவாங்கியது போல இந்த முறை போலியாக தேர்தல் வாக்குறுதிகளை அளிப்பார். அதை நிறைவேற்ற மாட்டார் என பலர் கூறி வந்தனர். ஆனால் முதலமைச்சரான பின்னர் கொடுத்த வாக்குறுதிகளில் 6 ஐ நிறைவேற்றியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஜெயலலிதா வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டார் என்று சொல்லியவர்களின் வாயை அடைத்தது போன்று ஜெயலலிதாவின் அறிவிப்புகள் உள்ளன. குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசியை இலவசமாக வழங்குவதாக அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த அரிசியை முன்பு 20 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியதிருந்தது. தற்போது அதுவும் இலவசமாக கிடைக்கிறது. இதுவரை ஏழை, நடுத்தர மக்களிடம் பணப்புழக்கமே இல்லாமல் இருந்து வந்த நிலையில், படித்த ஏழை பெண்களுக்கு திருமணத்திற்காக 4 சவரன் தங்கம், 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுப்பது ஏழை தாய்மார்களின் குடும்ப கஷ்டத்தில் பாதியை குறைத்தது போல் உள்ளது. முன்பெல்லாம் பெண் குழந்தை பிறந்தால் அதற்கு அதிகமாக செலவாகும் என எண்ணி ஒரு சில இடங்களில் கள்ளிப் பால் கொடுத்து கொன்று வந்தனர். அப்போது தொட்டில் குழந்தை திட்டம் என்ற ஒன்றை ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தொடங்கினார். அதனால் பெண் சிசு கொலை முற்றிலும் தவிர்க்கப்பட்டது. தற்போது பெண்களின் சுமையை குறைப்பது போன்று இலவச தங்கம், 50 ஆயிரம் ரூபாய் பணம் அறிவித்திருப்பது சிசுவை மட்டுமின்றி கன்னிப் பெண்களையும் காப்பாற்றி உள்ளார். அடுத்ததாக முதியோர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும் ரூ. ஆயிரம் உதவித் தொகை வழங்க இருப்பதன் மூலம் அவர்களது குடும்பங்களில் ஜெயலலிதா ஒளிவிளக்கை ஏற்றி வைத்துள்ளார். முதல் அறிவிப்பிலேயே ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வு உயர்வதற்கான திட்டங்கள் இடம் பெற்றிருப்பதால் இந்த 5 ஆண்டு கால ஜெயலலிதாவின் ஆட்சியில் ஏழைகளுக்கு பொற்காலமாக அமையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. எம்.ஜி.ஆரின் நல்ல திட்டங்கள் போன்று ஜெயலலிதாவின் திட்டங்களும் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்