முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராயல் சேலன்ஜர்ஸை நொறுக்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி

புதன்கிழமை, 18 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

தர்மசாலா, மே 19 - ஐ.பி.எல். போட்டி ஒன்றில் வலுவான ராயல் சேலன்ஜர்ஸ் அணியை 111 ரன்கள் வித்தியாசத்தில் வென்று பரபரப்பை ஏற்படுத்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 63-வது போட்டி இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ராயல் சேலன்ஜர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் களமிறங்கின. டாசில் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கில்கிறிஸ்ட் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அந்த அணியின் கில்கிறிஸ்ட் மற்றும் பால் வல்தாட்டி ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இவர்கள் துவக்கம் முதலே அடித்து ஆட ஆரம்பித்தனர். அணியின் எண்ணிக்கை 25 ஐ எட்டியபோது அதிரடி வீரரும் இந்த தொடரில் அதிக ரன்களை குவித்துள்ளவருமான வல்தாட்டி 20 ரன்கள் எடுத்த நிலையில் லாங்வெல்த்தின் பந்துவீச்சில் திவாரியால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இதையடுத்து கில்கிறிஸ்ட் உடன் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வாண வேடிக்கைகளை காட்ட ஆரம்பித்தது. அதிலும் கில்கிறிஸ்ட் பந்துகளை பவுண்டரிகளாகவும் சிக்ஸர்களாகவும் மாற்றி ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தினார். இதனால் ராயல் சேலன்ஜர்ஸ் அணியின் பவுலர்கள் செய்வதறியாது திகைத்தனர். கில்கிறிஸ்ட் 25 பந்துகளில் அரை சதம் அடித்தார். மேலும் இவரது அணி 10 ஓவர்களிலேயே 100 ரன்களை குவித்தது. இந்நிலையில் இரண்டாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக கில்கிறிஸ்ட் மற்றும் மார்ஷ் இருவரும் சேர்ந்து 51 பந்துகளில் 100 ரன்களை குவித்தனர். மார்ஷ் 34 பந்துகளில் அரை சதம் கடந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கில்கிறிஸ்ட் 53 பந்துகளில் சதமடித்தார். இந்த சதம் இந்த தொடரில் அடிக்கப்பட்ட  இரண்டாவது அதிவேக சதமாகும். இதே தொடரில் கிறிஸ் கெய்ல் 46 பந்துகளில் சதம் கடந்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இரண்டாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக கில்கிறிஸ்ட், மார்ஷ்  இருவரும் 96 பந்துகளில் 200 ரன்களை சேர்த்தனர். துவக்கம் முதல் சிறப்பாக விளையாடிய கில்கிறிஸ்ட் ஆட்டத்தின் கடைசி ஓவரின் 5 வது பந்தில்தான் அவுட்டானார். 55 பந்துகளில் 106 ரன்களை குவித்திருந்த கில்கிறிஸ்ட், லாங்வெல்த்தின் பந்துவீச்சில் கிறிஸ்கெயிலால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்களை குவித்தது. மார்ஷ் 79 ரன்களுடனும், ஹஸ்ஸி ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.  

இந்த ஐ.பி.எல். தொடரில் இதுவரை  எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அடித்த 232 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒட்டுமொத்தமாக ஐ.பி.எல். தொடரில் இது மூன்றாவது அதிகபட்ச ஸ்கோராகும்.  சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்த 246 மற்றும் 240 ரன்களே ஐ.பி.எல்.லில் முதலிரண்டு அதிகபட்ச ஸ்கோர்களாகும். 

233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை ராயல் சேலன்ஜர்ஸ் அணி சேஸ் செய்தது. அந்த அணியின் அதிரடி துவக்க வீரர் கிறிஸ்கெய்ல் மற்றும் திவாரி ஆகியோர் களமிறங்கினர். இந்நிலையில் இரண்டாவது ஓவரை ஹாரிஸ் வீசினார். அந்த ஓவரின் 3 வது பந்தில் கிறிஸ்கெய்ல் அதிர்ச்சியளிக்கும் வகையில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். இது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.  கடந்த 4 போட்டிகளில் அதிரடி காட்டி வந்த கெய்ல் இந்த போட்டியில் ஏமாற்றினார். அடுத்ததாக தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்ற விராட் ஹோக்ளி களமிறங்கினார். இவரும் 4 வது ஓவரின் முடிவில் ஹாரிஸின் பந்திலேயே கார்த்திக்கால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது ராயல் சேலன்ஜர்ஸ் அணி 4 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 17 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்ததாக டி வில்லியர்ஸ் களமிறங்கினார். அணியின் எண்ணிக்கை 34 ஐ எட்டியபோது ஸ்ரீவஸ்தவா வீசிய பந்தில் ஹஸ்ஸியால் கேட்ச் பிடிக்கப்பட்டு துவக்க வீரர் திவாரி ஆட்டமிழந்தார். இவர் எடுத்த ரன்கள் 6 மட்டுமே. இவரைத் தொடர்ந்து யூசுப் பதான், டி வில்லியர்சுடன் ஜோடி சேர்ந்தார். பதானும் அதிரடியாக ரன் குவிக்க முடியவில்லை. 7 ரன்களை மட்டுமே எடுத்த இவர் பால் வல்தாட்டியின் பந்தில்  ஹஸ்ஸியால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அதிகபட்ச ஸ்கோரை சேஸ் செய்த ராயல் சேலன்ஜர்ஸ் அணி பேட்ஸ்மேன்களின் ஆட்டம் பொறுப்பற்றதாய் இருந்தது. இதனால் அந்த அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தவண்ணம் இருந்தது. அந்த அணியின் டி வில்லியர்ஸ் மட்டுமே ஓரளவு சிறப்பாக விளையாடினார். ஆனால் இவரும் 34 ரன்களில் சாவ்லாவின் பந்தில் கில்கிறிஸ்ட்டால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட் ஆனவுடன் ஓரளவு கெளரவமான ஸ்கோரை எட்டும் ராயல் சேலன்ஜர்ஸ் அணியின் கனவு தகர்ந்தது. இறுதியில் ராயல் சேலன்ஜர்ஸ் அணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ரன்களை மட்டுமே எடுத்தது. அரவிந்த் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் தரப்பில் சாவ்லா 4 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் 3 விக்கெட்டுகளையும்,  ஸ்ரீவஸ்தவா 2 விக்கெட்டுகளையும், வல்தாட்டி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.  

தொடர்ந்து வெற்றிகளைக் குவித்துவந்த ராயல் சேலன்ஜர்ஸ்  111 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இது ஐ.பி.எல். வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய தோல்வியாகும். 2008 ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிராக இதே ராயல் சேலன்ஜர்ஸ் அணி  140 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே  மிகப்பெரிய தோல்வியாகும். 

ஆட்டநாயகன் விருது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் கில்கிறிஸ்ட்டுக்கு கிடைத்தது. விருதுபெற்ற கில்கிறிஸ்ட் கூறுகையில், இந்த வெற்றி எங்களுக்கு மிக முக்கியமான நேரத்தில் கிடைத்த மிகத் தேவையான வெற்றி என்று குறிப்பிட்டார். இந்த போட்டியின் மூலம் எங்கள் புள்ளிகள் உயர்ந்ததுடன் ரன் ரேட்டும் உயர்ந்துள்ளது. பேட்ஸ்மேன்களுக்கு மைதானம் சாதகமாக இருந்தது என்று தெரிவித்தார். இந்த வெற்றியின் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இறுதி போட்டிக்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்