முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரவிசுப்பிர மணியத்திற்கு நிபந்தனை ஜாமீன்: ஐகோர்ட்

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, டிச.17 - ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கில் ரவி சுப்பிரமணியத்திற்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. சங்கரராமன் கொலை வழக்கு, ராதாகிருஷ்ணன் என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கு ஆகியவற்றில் ஜெயேந்திரருடன் கைது செய்யப்பட்டவர் ரவிசுப்பிரமணியன். தற்போது காஞ்சிபுரம் சப்_ஜெயிலில் விசாரணை கைதியாக உள்ள இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:_

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில், என்னை விஷ்ணு காஞ்சி போலீசார் 26_12_2004 அன்று கைது செய்தார்கள். 

பின்னர், சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரை 2002_ம் ஆண்டு கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், பட்டினம்பாக்கம் போலீசார் என்னை 5_1_2005 அன்று கைது செய்தனர். இந்த 2 வழக்குகளிலும் போலீசாரால் நான் அப்ரூவராக ஆக்கப்பட்டேன்.

இந்த நிலையில் சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்த புதுச்சேரி மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு, குற்றம் சுமத்தப்பட்ட நான் உட்பட அனைவரையும் விடுதலை செய்து 27_11_2013 அன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் என்னை கோர்ட்டு விடுதலை செய்த நிலையில், ராதாகிருஷ்ணனை கொலை முயற்சி வழக்கில், விசாரணை கைதியாக தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளேன்.

சங்கரராமன் கொலை வழக்கு, ராதாகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கு ஆகிய வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்ட அனைவருக்கும் கோர்ட்டில் ஜாமீன் பெற்று வெளியில் சென்று விட்டனர். ஆனால், நான் மட்டும் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் உள்ளேன். 

மேலும், இந்த இரண்டு வழக்குகளிலும், என்னை எப்படி கட்டாயப்படுத்தி அப்ரூவராக மாற்றினார்கள் என்பதை விளக்கமாக கோர்ட்டில் தெரிவித்துள்ளேன்.

இதனால், இரண்டு வழக்குகளிலும் நான் பிறழ் (பல்டி) சாட்சியாக அறிவிக்கப்பட்டேன். 

இந்த வழக்குகளில், என் மீது கூட்டு சதி செய்ததாக மட்டுமே குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது.  ஆனால் கொலை செய்யப்பட்ட சங்கரராமன், கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பகையும் இல்லை.

ஒருவேளையில் தற்போது நிலுவையில் உள்ள ராதாகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கில் நான் குற்றவாளியாக கோர்ட்டு கருதும் பட்சத்தில், எனக்கு வழங்கப்படும் தண்டனையை விட அதிக ஆண்டுகள் ஜெயிலில் இருந்து வருகிறேன். . 

நான் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு, அவ்வப்போது அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று  வருகிறேன்.

இப்போது, சங்கரராமன் கொலை வழக்கில் நான் விடுதலை செய்யப்பட்ட நிலையில், ராதாகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கில் மட்டும் ஜாமீன் கிடைக்காமல் ஜெயில் இருந்து வருகிறேன். எனவே இந்த ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி சி.டி.செல்வம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வக்கீல் வி.புருஷோத்தமன் ஆஜராகி வாதம் செய்தார். இதையடுத்து ரவிசுப்பிரமணியனுக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி நீதிபதி சி.டி.செல்வம் உத்தரவிட்டார்.

அந்த உத்தரவில், "ரவிசுப்பிரமணியன் ரூ.10 ஆயிரம், அதே தொகைக்கு இருநபர் ஜாமீனை சென்னை சைதாப்பேட்டை 23_வது குற்றவியல் கோர்ட்டில் வழங்கி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். அதன்பின்னர், சென்னை முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வரும் (ராதாகிருஷ்ணன்) கொலை முயற்சி வழக்கின் ஒவ்வொரு விசாரணைக்கும் தவறாமல் ஆஜராகவேண்டும்" என்று நீதிபதி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony