முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரபரப்பான சூழ்நிலையில் நாளை அ.தி.மு.க. செயற்குழு

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,டிச.18 - பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு அக்கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில் சென்னையில் நாளை கூடுகிறது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் குறித்தும் மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. 

5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அடுத்தாண்டு பாராளுமன்ற தேர்தலும் வரவிருக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. தனித்தே போட்டியிடும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு திருமண விழாவில் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டார். அ.தி.மு.க.வின் முன்னணி தலைவர்களும் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை வெற்றிபெற வைத்து முதல்வர் ஜெயலலிதாவை பிரதமராக்குவோம் என்று கூறி வருகிறார்கள். ஆக அ.தி.மு.க. தனித்து போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. சென்னையில் சில தினங்களுக்கு முன்பு நடந்த தி.மு.க. பொதுக்குழுக்கூட்டத்தில் கூட்டணி பற்றி விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கட்சி தலைவர் கருணாநிதி, காங்கிரசுடன் இனி கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். அதுமட்டுமன்றி காங்கிரஸ் துரோகம் செய்த கட்சி, நன்றி கெட்ட கட்சி என்றெல்லாம் கருணாநிதி வசைபாடியுள்ளார். இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாரதிய ஜனதாவுடனும் கூட்டணி இல்லை என்று கருணாநிதி தெரிவித்தாலும் அக்கட்சியுடன் கூட்டுசேர தி.மு.க. விரும்புவதாகவே கூறப்படுகிறது. காரணம், நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் 3 மாநிலங்களை பாரதிய ஜனதா கைப்பற்றி உள்ளது. அதனால்தானோ என்னவோ, பா.ஜ.க.வுடன் கருணாநிதி கூட்டு சேரலாம் என்று பரவலாக பேசப்படுகிறது. தே.மு.தி.க.வை பொருத்தவரையில் சமீபத்தில் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அக்கட்சி தலைவர் விஜயகாந்த், தனது தலைமையை ஏற்க விரும்பும் கட்சிகளுடன்தான் கூட்டணி என்று தனது நிலையை தெரிவித்துவிட்டார். ஆனால் இவரது தலைமையை யார் ஏற்பார்கள் என்பதுதான் புரியவில்லை. எனவே தே.மு.தி.க.வும் தனித்தே போட்டியிடலாம் அல்லது காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து போட்டியிடலாம். இப்படி ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி கணக்கு போட்டுக்கொண்டியிருக்கும் சூழ்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுக்கூட்டம் சென்னையில் நாளை கூடவிருக்கிறது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் சில தினங்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருந்த விபரம் வருமாறு:_

அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுக்கூட்டம் 19_ம் தேதி (வியாழக்கிழமை) அன்று பிற்பகல் 3 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அவைத்தலைவர் மசூதனன் தலைமையில் நடைபெறும். எனவே அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக்கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியிருந்தார். அதன்படி நாளை சென்னையில் அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு நாளை கூடுகிறது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் முக்கிய முடிவுகளும் எடுக்கப்படும். பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்த செயற்குழு வழங்கும் என்று தெரிகிறது. மேலும் கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடையும் வகையில் சில முக்கிய அறிவுப்புகளையும் ஜெயலலிதா வெளியிடுவார் என்று அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பல முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பரபரப்பான சூழலில் இந்த செயற்குழுக்கூடுவதால் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்