முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெர்மனி பிரதமராக 3-வது முறையாக ஏஞ்சலா தேர்வு

புதன்கிழமை, 18 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

பெர்லின், டிச.19 - ஜெர்மனியின் பிரதமராக ஏஞ்சலா மெர்கெல் ( 59 ) ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி, கடந்த செப்டம்பர் 22 - ம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் நான்காவது முறையாக தனிப் பெரும்பான்மை பெற்றிருந்தாலும், ஆட்சி அமைப்பதற்குரிய அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிருக்கவில்லை. அதனைத் தொடர்ந்து, கன்சர்வேடிவ் கட்சியை எதிர்த்துப் போட்டியிட்ட    "சோஷியல் டெமோக்ராட்ஸ்" கட்சியுடன் நடத்திய மிக நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின் ஒரு மகா கூட்டணி ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம், கன்சர்வேடிவ் கட்சி தலைமையிலான கிறிஸ்டியன் டெமோக்ராட்ஸ் யூனியன் மற்றும் சோஷியல் டெமோக் ராட்ஸ் இணைந்த கூட்டணி ஜெர்மனி நாடாளுமன்றத்தின் கீழவையான பண்டஸ்டாக் அவையில் மொத்தமுள்ள 631 இடங்களில் 504 இடங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், மெர்கெலுக்கு ஆதரவாக 462 வாக்குகளும், எதிராக 150 வாக்குகளும் பதிவாகின. 9 பேர் நாடாளுமன்றத்துக்கு வரவில்லை. இந்தத் தகவலை அறிந்ததும், ஏஞ்சலா மெர்கெல் கூறுகையில், தேர்தல் முடிவை முழு மனதுடன் ஏற்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி என்று கூறினார். ஜெர்மன் வரலாற்றில் மிகவும் அரிதான வகையில் பிரதமர் பதவிக்கு மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஏஞ்சலா மெர்கெல், ஜெர்மனியின் முதல் பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony