முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்வர் போட்டியிட கோரி மனு

வியாழக்கிழமை, 19 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.20- 40 நாடாளுமன்றத்  தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் மனுக்களை வாங்கிச் சென்றனர்.நேற்று முதல்நாளில்  நூற்றுக்கணக்கில் மனுக்கள் குவிந்தன.

முதல்வர் ஜெயலலிதாவுக்காக பிரமுகர்கள்   விருப்ப மனு தாக்கல் செய்தனர். 

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து நேற்று முதல் மனுக்கள் பெறப்படுகின்றது. .

தமிழகம் முழுவதிலும் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதி மற்றும் புதுச்சேரி தொகுதிக்காக அதிமுக நிர்வாகிகளும், முன்னணியினரும் நேற்று போட்டி போட்டு மனுக்களை வாங்கிச் சென்றனர். 

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்காக அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நேற்று  விருப்ப மனு தாக்கல் செய்தனர்.

பாராளுமன்ற தேர்தல் மே மாதத்துக்குள் 7 கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க கட்சிகள் தயாராகி வருகின்றன. அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு_புதுவையில் 40 தொகுதிக்கும் போட்டியிட விரும்புபவர்கள் தலைமை கழகத்தில் நேற்று முதல் விருப்ப மனுதாக்கல் செய்யலாம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதல்_ அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். இதற்கு ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி தலைமை கழகத்தில் ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.  

நாடாளுமன்றத் தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் மனுத்தாக்கல் செய்வது நேற்று முதல் தொடங்கியது. இம்மாதம் 27_ம் தேதி வரை மனுதாக்கல் செய்யலாம்.

நேற்று  காலை 10 மணிக்கு சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில் விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்கியது. ஆனால் காலை 8 மணிக்கே தமிழ்நாடு முழுவதும் இருந்து அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் வந்து தலைமைக் கழகத்தில் திரண்டு இருந்தனர்.

விண்ணப்பம் வழங்குவதற்காக 4 கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 

மனுக்கள் வாங்க கவுண்டர்கள் முன் நீண்டகியூவில் நின்றார்கள். அமைச்சர்களும், தலைமைக்கழக நிர்வாகிகளும் கியூவில் நின்று பணம் செலுத்தி மனுக்களை வாங்கினார்கள். மனுக்கள் வாங்கும் முன்னர் அவர்களுக்கு தனியாக ஒரு சிலீப் அளிக்கப்பட்டது. அதில் விண்ணப்பதாரர் பெயர் தற்போது கழகத்தில் வைக்கும் பொறுப்பு ஒன்றியம், நகரம், மாவட்டம், விண்ணப்பிக்கும் நாடாளுமன்ற தொகுதி, செல்போன் நம்பர் ஆகிய விபரங்கள் கேட்கப்பட்டிருந்தது. அந்த சிலிப்பை பூர்த்தி செய்து பணம் செலுத்தியதுடன் பணம் கட்டியதற்கான ரசீது கொடுக்கப்பட்டது. அ.தி.மு.க.வினர் விருப்ப மனு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதை அவைத் தலைவர் மதுசூதனனிடம் வழங்கினார்கள். முதலில் அமைச்சர்கள் விருப்பமனு கொடுத்தனர். தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் விருப்பமனு கொடுத்தனர். அனைவருமே முதல்_அமைச்சர் ஜெயலலிதா தங்கள் பகுதியில் உள்ள தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்தனர். சிலர் 4, 5 தொகுதிகளுக்கும் சேர்த்து மனு கொடுத்தனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக முதலில் அதிமுக பொருளாளரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்தார். அவர் தேனி தொகுதியில் முதல்வர் போட்டியிடவேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை அவர் அவைத்தலைவர் மதுசூதனனிடம் அளித்தார். அவரை தொடர்ந்து திண்டுக்கல் தொகுதிக்காக நத்தம் விசுவநாதன், கிருஷ்ணகிரி தொகுதிக்காக கே.பி.முனுசாமி, தஞ்சை தொகுதிக்காக வைத்திலிங்கம், தென்சென்னை மற்றும் மத்திய சென்னை தொகுதிகளுக்காக பா. வளர்மதி, விருதுநகர் தொகுதிக்காக கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் முதலமைச்சருக்காக மனு தாக்கல் செய்தனர். 

முதல்_அமைச்சர் ஜெயலலிதா போட்டியிடக் கோரி விருப்ப மனு கொடுத்தவர்கள் மற்றும் தொகுதி விவரம் வருமாறு:_

அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம் (தேனி), கே.பி. முனுசாமி (கிருஷ்ணகிரி), நத்தம் விஸ்வநாதன் (திண்டுக்கல்), வைத்திலிங்கம் (தஞ்சை), பா.வளர்மதி (மத்திய சென்னை, தென் சென்னை), பழனியப்பன் (தர்மபுரி), செல்லூர் ராஜூ (மதுரை), தங்கமணி (ஈரோடு, நாமக்கல்), எம்.சி.சம்பத் (கடலூர்), கே.சி.வீரமணி (வேலூர்), முக்கூர் சுப்பிரமணியன் (ஆரணி, திருவண்ணாமலை), பூனாச்சி (பெரம்பலூர்).

அமைச்சர்கள் விஜயபாஸ்கர் (சிவகங்கை, திருச்சி, கரூர், ராமநாதபுரம்), ஜெயபால்_(மயிலாடுதுறை), சண்முகநாதன் (தூத்துக்குடி), மோகன் (கள்ளக்குறிச்சி). கே.டிபச்சைமால் (கன்னியாகுமரி), 

அமைச்சர் பழனியப்பன், டி.ஆர்.அன்பழகன் இருவரும் சேர்ந்து முதல்_அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தர்மபுரி தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்தனர். அமைச்சர் பி.வி.ரமணா (தென்சென்னை) அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் (விருதுநகர்). அவைத்தலைவர் மதுசூதனன் வடசென்னையில் முதல்வர் ஜெயலலிதாவிற்காக மனு அளித்தார். தென்சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவிற்காக கோகிலஇந்திரா எம்.எல்.ஏ. மனுக்கொடுத்தார்.

அமைச்சர் சின்னையா, எம்.எல்.ஏ.க்கள் வாலாஜாபாத் கணேசன், சோமசுந்தரம், மொளச்சூர் பெருமாள் மற்றும் மாங்காடு கலைநேசன் ஆகியோர் சேர்ந்து ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு மனு கொடுத்தனர்.

மேயர் சைதை துரைசாமி முதல்_அமைச்சர் ஜெயலலிதாவுக்காக தென் சென்னை தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்தார். 

கே.பி.கந்தன் எம்.எல்.ஏ., திருச்சி, தென்சென்னை தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட விருப்ப மனு கொடுத்தார். முதல்_அமைச்சர் ஜெயலலிதாவுக்காக மேலும் விருப்ப மனு கொடுத்தவர்கள்:_

ரத்தினவேலு எம்.பி. (பெரம்பலூர்), அரசு கொறடா மனோகரன் (திருச்சி), நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ. (கன்னியாகுமரி), சுற்றுலா வாரியத் தலைவர் அருள்மொழிதேவன் (கடலூர்), தமிழ்மகன் உசேன் (திருச்சி, கன்னியாகுமரி, வேலூர், மத்திய சென்னை).

சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் லட்சுமி நாராயணன் (வடசென்னை), ஏ.ஏ.அர்ச்சுனன் (தென் சென்னை), ஆதிராஜாராம் (தென் சென்னை). முன்னாள் சபாநாயகர் டி.ஜெயக்குமார் (வடசென்னை).

மதுரை மேயர் ராஜன் செல்லப்பா, டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன் (மதுரை), எஸ்.கே.செல்வம் எம்.எல்.ஏ. (சேலம்), பால்வளத்தலைவர் அசோகன் (கன்னியாகுமரி), சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் வக்கீல் இன்பதுரை (நெல்லை).

மத்திய சென்னை, வட சென்னையில் ஜெயலலிதா போட்டியிட வடசென்னை மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ் பாபு மனு கொடுத்தார். தென் சென்னையில் ஜெயலலிதா போட்டியிட மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி மனு செய்தார்.

அண்ணா தொழிற்சங்க மாநில துணைத் தலைவர் பாண்டுரங்கன் (மத்திய சென்னை, தென்சென்னை), செம்பாக்கம் நகராட்சி தலைவர் சாந்தகுமார் (காஞ்சீபுரம், திருச்சி, ஸ்ரீபெரும்புதூர்), முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவாசன் (மத்திய சென்னை).

தமிழ்மகன் உசேன் தனக்காக கன்னியாகுமரி, வேலூர், திருச்சி, மத்திய சென்னைக்கும், ஆர்.எம். டி.ரவீந்திர ஜெயன் வட சென்னைக்கும் மனு கொடுத்துள்ளனர். மாவட்ட செயலாளர்கள் வி.பி.கலைராஜன் எம்.எல்.ஏ., விருகை வி.என்.ரவி (தென்சென்னை), வெங்கடேஷ்பாபு (வடசென்னை) ஆகியோர் முதல்வருக்காக மனுத்தாக்கல் செய்தனர். முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் விருநகருக்கும், கொறடா மனோகரன் திருச்சிக்கும், ஜே.சி.டி.பிரபாகரன் எம்.எல்.ஏ. மத்திய சென்னைக்கும், கே.குப்பன் எம்.எல்.ஏ. வடசென்னைக்கும், ஆகியோரும் மனுதாக்கல் செய்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள ரிசர்வ் தொகுதி தவிர்த்த அனைத்து பொது தொகுதிகளிலும் முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிட விருப்பம் தெரிவித்து தமிழக அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், எம்.பி., எம்எல்ஏக்கள், வாரியத் தலைவர்கள், முன்னாள்அமைச்சர்கள், மேயர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்  நேற்று மனு தாக்கல் செய்தனர். 

வேலூர் தொகுதிக்காக மேயர் கார்த்தியாயினி, திருவண்ணாமலை தொகுதிக்காக முன்னாள் அமைச்சர் எஸ். ராமச்சந்திரன், தென்சென்னை தொகுதிக்காக சைதை ஜி. செந்தமிழன் எம்எல்ஏ, மத்திய சென்னை தொகுதிக்காக ஆயிரம் விளக்கு தொகுதி செயலாளரும், 118_வது வார்டு கவுன்சிலருமான டி.சிவராஜ், சுகாதார நிலைக்குழுத் தலைவர் ஆ.பழனி, வடசென்னை தொகுதிக்காக வடசென்னை வடக்கு மாவட்ட அதிமுக அவைத்தலைவர் டி.கோவில்பிள்ளை,    உள்ளிட்ட பலரும் ஜெயலலிதாவுக்காக நேற்று  மனுதாக்கல் செய்தனர்.

அனைத்துலக எம்ஜிஆர் மன்ற தலைவரும், வக்ப் வாரியத் தலைவருமான தமிழ்மகன் உசேன் மத்திய சென்னை, திருச்சி உள்ளிட்ட 4 நாடாளுமன்ற தொகுதிகளில் முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிட விருப்பம் தெரிவித்தும் மனுதாக்கல் செய்தார். மேலும் மத்திய சென்னை, திருச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளில் தாம் போட்டியிடுவதற்கும் அவர் மனு தாக்கல் செய்தார். 

சென்னை பல்கலைக்கழக சட்டத்துறை உதவி பேராசிரியர் பி.வேணுகோபால் நீலகிரி (தனி) தொகுதியில் போட்டியிடவும், அதே கல்லூரியை சேர்ந்த எம்.எல். முதலாம் ஆண்டு மாணவி வனிதா (எ) சவிதா திருவள்ள?ர் தொகுதியில் போட்டியிடவும் விருப்பம் தெரிவித்து மனுதாக்கல் செய்தனர்.

நேற்று ஒரேநாளில் நூற்றுக்கணக்கான அதிமுக நிர்வாகிகளும், பிரமுகர்களும் போட்டிபோட்டுக் கொண்டு மனுக்களை வாங்கிச் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்