முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவையாறு இசைவிழா: நடிகர் கமல் தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 19 டிசம்பர் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை. டிச.20 - தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் லஷ்மன்ஸ்ருதி சார்பில் 9_வது ஆண்டாக சென்னையில் திருவையாறு இசைவிழா தொடங்கியது. விழாவை நடிகர் கமலஹாசன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் கமலஹாசன் பேசியதாவது:_

இசை அரசர்கள், நடன அரசர்கள் பங்கேற்றுள்ள சென்னையில் திருவையாறு நிகழ்ச்சிக்கு நான் ரசிகனாக வந்துள்ளதையே பெருமையாக கருதுகிறேன். லஷ்மன்ஸ்ருதிக்கும் என் மகள் ஸ்ருதிக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான். இருவருமே 26 வயதில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

என் மகள் ஸ்ருதியும், லஷ்மன் ஸ்ருதியும் கலைத்துறையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். 9 ஆண்டுகளாக சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியை நடத்தி லஷ்மன் ஸ்ருதி மாபெரும் கலைச்சேவையை செய்து வருகிறது. உலக இசை விழா வரலாற்றில் டிசம்பர் மாதம் உலகமெங்கும் நடைபெறும் இசைவிழாக்களில் சென்னையில் நடக்கும் இசை விழாக்கள் தான் அதிகம் என்று புள்ளி விவரம் கூறுகிறது. அதற்கு சென்னையில் திருவையாறு நிகழ்ச்சி வலு சேர்க்கிறது.

லஷ்மன் ஸ்ருதி நல்லிசையை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கிறது. லஷ்மன் ஸ்ருதி சகோதரர்களின் திறமை என்னை கவர்ந்துள்ளது. அவர்களின் அன்பும் என்னை கவர்ந்துள்ளது. திறமை நீடிக்கும், அன்பும் நீடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

லஷ்மன் ஸ்ருதி நிர்வாகி லஷ்மன் பேசுகையில், 'நாங்கள் மாணவ பருவத்தில் 200 நிகழ்ச்சிகளை நடத்தியபோது கமலஹாசன் வந்து வாழ்த்தினார். அப்போது 2 ஆயிரமாவது நிகழ்ச்சிக்கும் என்னை அழையுங்கள் என்றார். அதே போல் 2 ஆயிரமாவது நிகழ்ச்சிக்கும் வந்து வாழ்த்தினார். 5 ஆயிரமாவது நிகழ்ச்சிக்கு அவரால் வரமுடியவில்லை. தற்போது சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி.

வடபழனியில் லஷ்மன் ஸ்ருதி இசையகத்தை கமலஹாசன்தான் திறந்து வைத்தார். அடுத்த கிளை எப்போது என்று கேட்டுள்ளார். அடுத்த கிளையை விரைவில் தொடங்க உள்ளோம். அதை கமலஹாசன் திறக்க வேண்டும்' என்றார். சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துவதற்காக லஷ்மன்ஸ்ருதி மியூசிக்கல் பிரமோஷனல் டிரஸ்ட்டையும் கமலஹாசன் தொடங்கி வைத்தார். விழாவில் லஷ்மன்ஸ்ருதி நிர்வாகி ராமன், பி.எஸ்.நாராயணசாமி, பிர்ஜூ மகாராஜ், ஆர்.எஸ்.மணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்