முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மா திட்டம் திட்டத்தின் மூலம் புகார் மனுக்கள் மீது தீர்வு

வெள்ளிக்கிழமை, 20 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.21 -  'அம்மா திட்டம்' திட்டத்தின் மூலம் மாநிலம் முழுதும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில், 18.41 லட்சம் மனுக்கள் மீது தீர்வு  காணப்பட்டுள்ளது என்று வருவாய்த்துறை அமைச்சர்  பி.வி.ரமணா கூறியுள்ளார். 

மேலும், வருவாய்த் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களும், உரிய நேரத்தில், அது உரிய மக்களைச் சென்றடைந்திட அனைவரும் அர்ப்பணிப்போடு பணியாற்ற,வேண்டும் என்று வருவாய்த்துறை அமைச்சர்  பி.வி.ரமணாஅதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:_

அனைத்துத் துறைகளுக்கும் தாய்த் துறையாகவும், அரசாங்கத்தின் முதுகெலும்பாகவும், ஏழை எளிய மக்களின் துயர்களைக் களைந்து, அவர்களை ஏற்றிவிடும் ஏணியாகவும் விளங்கிடும் துறை வருவாய்த்துறையாகும்'.  முதலமைச்சர்  வருவாய்த்துறையைப் பற்றி மிகுந்த பெருமையோடு சட்டப்பேரவையில் குறிப்பிட்டுள்ளார்.

வருவாய்த்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களின் செயல் பாடுகள் குறித்து, வருவாய்த்துறையின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள வருவாய்த்துறை அமைச்சர். பி.வி.ரமணா  தலைமையில், வருவாய்த்துறையின் செயலர் மற்றும் துறைத்தலைவர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் தலைமைச்செயலகம் திட்டக்குழு கருத்தரங்க கூடத்தில்  நேற்று  (20.12.2013) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வருவாய்த்துறையின் செயலர்  ககன் தீப் சிங் பேடி,  வருவாய் நிருவாக ஆணையர் முனைவர் தி. ஸ்ரீ. ஸ்ரீதர்,நிலஅளவை . ரமேஷ் ராம் மிஷ்ரா, நில நிருவாக ஆணையர் முனைவர் திருமதி. கிரிஜா வைத்தியநாதன் ,நிலச் சீர்திருத்த ஆணையர் திருமதி ஜெயஸ்ரீ ரகுநந்தன் ., நகர்புற நிலவரி மற்றும் நகர்புற நிலவரித்திட்ட இயக்குநர் பி. அண்ணாமலை, பேரிடர் மேலாண்மை கூடுதல் ஆணையர் ஆஷிழ சாட்டர்ஜி, மற்றும் வருவாய் நிருவாக இணை ஆணையர் முனைவர் மு.ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் வருவாய்த்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களான, முதல்வரால் அறிமுகம் செய்யப்பட்டு பொது மக்களிடம் மிகுந்த நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ள 'அம்மா' திட்டம், புதிய வருவாய் வட்டங்கள் உருவாக்குதல், வருவாய்த்துறையின் வரலாற்றில் இதுவரையில் இல்லாத வகையில், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளான, தஞ்சாவூர், திருப்பூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கான ஒருங்கிணைந்த பெருந்திட்ட வளாகங்கள் (மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள்), வருவாய் கோட்ட, வட்டங்களுக்கான புதிய கட்டடங்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிருவாக அலுவலர்களுக்கான அலுவலகம் மற்றும் குடியிருப்புகள், பணிகளை விரைந்து மேற்கொள்ள புதிய வாகனங்கள், கணினி மற்றும் மடிக்கணினிகள், விரைவு பட்டா மாறுதல் திட்டம் மற்றும் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கிடும் திட்டம், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பல்வேறு ஓய்வூதிய திட்டங்கள், பள்ளி மாணவ மாணவியர்களுக்குத் தேவையான அனைத்து வகையான சான்றிதழ்களையும் தாம் பயிலும் பள்ளிகளிலேயே பெற்றிடும் உன்னதத் திட்டம், பெண்களை பெரிதும் கவர்ந்துள்ள விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கிடும் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், இந்தியாவிலேயே முதன்முறையாக, வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் நிவாரண உதவித் தொகை, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புத் திட்டம், வருவாய்த்துறை ஆவனங்களை கணினி மயமாக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து வருவாய்த்துறை அமைச்சர்  விரிவான ஆய்வினை மேற்கொண்டார்.

இறுதியாக அமைச்சர் அவர்கள் தமது உரையில்,   முதலமைச்சர் ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற்றிட வேண்டும் என்கிற உயரிய நோக்கமதைத் தனது தாரக மந்திரமாகக் கொண்டு, நல்ல பல திட்டங்களை நாளும் தந்த வண்ணமுள்ளார்கள். குறிப்பாக, வருவாய்த் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களும், உரிய நேரத்தில், அது உரிய மக்களைச் சென்றடைந்திட  நாம் அனைவரும் அர்ப்பணிப்போடு பணியாற்றி, நமது துறைக்கும், முதலமைச்சர் அவர்கட்கும் பெருமையினைத் தேடி தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் வருவாய்த்துறையின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு, மிகவும் குறுகிய காலத்தில் பொது மக்களிடம் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ள திட்டம் 'அம்மா திட்டம்' ஆகும். இத்திட்டத்தின் மூலம் நாளதுவரையில், மாநிலம் முழுதும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏறத்தாழ 12,666 முகாம்கள் நடத்தப்பட்டு, பெறப்பட்ட 33.13 இலட்சம் மனுக்களில்,18.41 இலட்சம் மனுக்கள் மீது தீர்வு  காணப்பட்டுள்ளது. 26,651 மனுக்கள் பிறதுறையின் நடவடிக்கைக்காக அனுப்பட்பட்டுள்ளது. வருவாய்த்துறையின் வரலாற்றில் இது ஒரு மகத்தான சாதனை என்றால் அது மிகையில்லை. அம்மா திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி, மாவட்ட வாரியாக புள்ளி விவரங்களை உள்ளடக்கிய கையேட்டினை வருவாய்த்துறை அமைச்சர்  பி.வி.ரமணா வெளியிட்டார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்