முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரைத்துறை நலவாரிய கூட்டம்: அமைச்சர் உதவி வழங்கினார்

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச. 26 - திரைப்படத் துறையினர் நலவாரியக் குழுவின் மூன்றாவது கூட்டம் மாண்புமிகு செய்தி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் .கே.டி.ராஜேந்திர பாலாஜி  தலைமையில் நேற்று  (26_12_2013) நடைபெற்றது. இக்கூட்டத்தில்,  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

திரைப்படத் துறையினர் நலவாரியக் குழுவின் மூன்றாவது கூட்டம் செய்தி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி  தலைமையில் நேற்று   (26_12_2013)   எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் முனைவர். மூ. இராசாராம், முன்னிலை  வகித்தார். செய்தித் துறை இயக்குநரும் திரைப்படத் துறையினர் நலவாரியத்தின் உறுப்பினர் செயலருமான ஜெ.குமரகுருபரன், வரவேற்புரையாற்றினார். 

இக்கூட்டத்தில், 302 பயனாளிகளுக்கு  ரூ.10.14 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:_

முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதலின்படி திரைப்படத் துறையினர் நலவாரியம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திரைப்படத் துறையினர் நலவாரியத்தில் முதற்கட்டமாக 38 பயனாளிகளுக்கு ரூ1,98,000_ மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இரண்டாவது கட்டமாக 426 பயனாளிகளுக்கு ரூ11,25,000_ மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முதலமைச்சர் தற்போது ரூ 11,49,500டி_ நலத்திட்ட உதவிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார். அதில் மூன்றாவது கட்டமாக இப்போது 302 பயனாளிகளுக்கு ரூ. 10.14 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.

திரைப்படத் துறையினர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள முதலமைச்சர் அவர்கள் திரைப்படத் துறையினர் நலவாரியத்திற்கு இது போன்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தது மட்டுமின்றி, எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிபயன்  பற்றிய புதிய பாடப்பிரிவை துவக்கி அதற்கு ரூ3.69 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டவும், திரைப்படக்கல்லுரியில் உள்ள முன்காண் திரையரங்கை ரூ.99 லட்சம் செலவில் நவீனப்படுத்தவும் ரூ.1 கோடியே 83 லட்சம் செலவில் செல்வந்தர் மாளிகை மற்றும் டப்பிங் திரையரங்கை படப்பிடிப்பு தளமாக மாற்றுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ. 2 கோடி செலவில் திரைப்படக் கல்லுரி மாணவர்களுக்கு புதிய தங்கும் விடுதி கட்டப்படவுள்ளது.

மேலும் ஒரு முத்தாய்ப்பாக முதலமைச்சர்அவர்கள் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ. 61 கோடி செலவில் கலையரங்கம் கட்டவும், ரூ.2 கோடி செலவில் மாநில செய்தி நிலையத்திற்கான கட்டிடம் கட்டவும் அடிக்கல் நாட்டியுள்ளார்கள்.

முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தமிழ் நாட்டில் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். முதலமைச்சர் அவர்கள் வளர்ந்து வரும் நவீனத்திற்கு ஏற்ப கலைத்துறையில் புதிய யுத்திகளை உருவாக்கி கலைத்துறையின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறார்கள் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். 

சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் திரைப்படத் துறையினர் நலவாரியத்தின் செயல்பாட்டினை மேலும் சிறப்பிக்கும் வகையில் உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அறிந்து அதற்கேற்ப தமிழக அரசு செயல்படும் என உறுதி அளிக்கிறேன். பல்வேறு அலுவல்களுக்கிடையே இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த குழு உறுப்பினர்களுக்கும், ஏனைய அரசுத்துறை அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில்  திரைப்படத் துறையினர் நலவாரிய உறுப்பினர்கள் ஆர்.வி.உதயகுமார், பி.வாசு, .லியாகத்அலிகான்இப்ராஹிம் ராவுத்தர், மோகன்காந்திராமன், ராமராஜன் (திரைப்படநடிகர்), டி.கே.கலா மற்றும் நிதித்துறை கூடுதல் செயலர் கு.அண்ணாத் துரை, தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையர் பி.கருப்பசாமி, உள்துறை துணைச் செயலாளர் (சினிமா) து.முத்துசாமி மற்றும்  பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்