முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

9ம் ஆண்டு சுனாமி நினைவு நாள்: மலர்களை தூவி அஞ்சலி

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.27 - தமிழகத்தை ஆழிப்பேரலை எனப்படும் சுனாமி தாக்கிய 9_வது ஆண்டு நினைவு நாளை யொட்டி நேற்று  கடற்கரையில் மலர்களை தூவி, பால் வார்த்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 9 ஆண்டுகளுக்கு முன்னர்.(2004_ டிசம்பர் 26) இதே நாளில்  இந்தோனேசியாவில் கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து ஆழிப்பேரலை இந்தியாவை தாக்கியது. இதில் தமிழகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்ஆழ்கடலில் இருந்து எழும்பிய அலை அரக்கன் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மனித உயிர்களை ருசி பார்த்தான். 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள்.

அமைதியே உருவான கடல் அன்னையின் இன்னொரு கோர முகத்தை அப்போது தான் உலகம் கண்டது. சென்னையில் இருந்து குமரி வரை கடலோர கிராமங்களில் கோரத்தாண்டவம் ஆடிய சுனாமி பேரலைகள் ஆயிரக் கணக்கானோரை கடலுக்குள் அடித்துச்சென்றது. இவர்களில் யாரும் உயிர் தப்பவில்லை. அன்றைய தினம் கடற்கரை கிராமங்கள் முழுவதும் மரண ஓலம் ஒலித்தது. தமிழகமே கண்ணீர் கடலில் மூழ்கியது.

நாகப்பட்டினம், கடலூர், வேளாங்கண்ணி, கன்னியாகுமரி என அனைத்து மீனவ கிராமங்களிலும் கொத்து கொத்தாக பிணங்கள் கரை ஒதுங்கின.

முதலில் சத்தமில்லாமல் வந்து விட்டு கடலுக்குள் சென்ற சுனாமி அலையை வேடிக்கை பார்க்க கடற்கரைக்கு ஓடிய சின்னஞ்சிறுசுகளின் சப்த நாடியும் சிறிது நேரத்திலேயே அடங்கிப்போனது.

இப்படி ஈவு இரக்கமின்றி வயது வித்தியாசமில்லாமல் அத்தனை பேரின் மூச்சுக் காற்றையும் ஒரே நொடியில் நிறுத்தி நிசப்தமாகி விட்டாள், கடல் அன்னை.

தமிழகத்தில் சுனாமி தாக்குதலில் அதிகமான உயிரிழப்புகளை சந்தித்தது நாகை மாவட்டம்தான். அங்கு 6 ஆயிரத்து 65 பேர் உயிரிழந்தனர். குமரி மாவட்டத்தில் ஆயிரம் பேரை சுனாமி காவு வாங்கியது. சென்னையில் 300க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

9 ஆண்டுகளாகி விட்ட நிலையிலும் சுனாமியின் சோக சுவடுகள் கடற்கரை கிராமங்களில் இன்னும மாறாத வடுவாகவே உள்ளது.

இதனை உணர்த்தும் வகையில் நேற்று   தமிழக கடலோரங்களில் 9_ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. ஆழிப்பேரலை தாக்கிய 9_வது ஆண்டு நினைவு நாளையொட்டி தமிழகம் முழுவதும்  உள்ள கடற்கரைகளில் மக்கள் மலர்களை தூவி, பால் வார்த்து தங்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தினார்கள். 

சென்னையில் மெரினா கடற்கரையில் பிஜேபி மீனவர் அணி சார்பில் தமிழிசை சவுந்திரராஜன் , மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜெய், நிர்வாகிகள் டால்பின் ஸ்ரீதர், மீனவர் அணி செயலாளர்   செம்மலர் சேகர் உள்ளிட்டோர் அவ்வையார் சிலையிலிருந்து ஊர்வலமாக சென்று கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். சென்னை அரசினர் கவின் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மெரினா கடற்கரையில் ஆழிப் பேரலையில் மடிந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மணற்சிற்பத்தை வடிவமைத்திருந்தனர். 

அங்கு ஏராளமான மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி தங்கள் இதய அஞ்சலி செலுத்தினார்கள். அதேபோல் வடசென்னை, காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் இந்திய மீனவர் சங்கம் சார்பில் அதன் தலைவர் தயாளன் தலைமையில் ஏராளமானோர் ஊர்வலமாக வந்து கடலில் பால் ஊற்றி மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர். 

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், ராயபுரம் எம்எல்ஏ டி.ஜெயக்குமார், வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ் பாபு, மற்றும் அதிமுக நிர்வாகிகள் காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர். 9_ம் ஆண்டு நினைவு நாளை யொட்டி காசிமேடு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. 

சென்னை பெசன்ட்நகரில் ஓடைமாநகர் மீனவர்கள் சார்பில் மலர்வளையத்தை கடலில் வைத்து அதன் மீது பாலை ஊற்றி இறந்தோருக்கு தங்கள் அஞ்சலி செலுத்தினர். மீனவ பெண்கள் கண்ணீர் வடித்து பிரிந்த சொந்தங்களுக்கு தங்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்