முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிறிஸ்துமஸ்: வண்டலூர் பூங்காவுக்கு 25 ஆயிரம் பேர் வருகை

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.27 - கிறிஸ்துமஸ் விடுமுறை தினமான புதன்கிழமையன்று வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு 25 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தந்தனர்.

பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் ஒரே நாளில் உயிரியல் பூங்காவின் வருவாய் ரூ.7 லட்சத்து 30 ஆயிரத்தைத் தாண்டியது. தமிழகம் மட்டுமல்லாமல் ஏராளமான வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்தோடு வந்து ரசிக்கும் இடமாக வண்டலூர் உயிரியல் பூங்கா திகழ்கிறது.

சுமார் 602 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகளும், விலங்களுகளும் உள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகையான புதன்கிழமை அரசு விடுமுறை என்பதால் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த மக்கள் குடும்பத்தோடு வந்திருந்ததனர்.

இதுதவிர வெளி மாநில, மாவட்ட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிக அளவில் இருந்ததாக பூங்கா நிர்வாகிகள் தெரிவித்தனர். கொடிய வன விலங்குகளான சிங்கம், வெள்ளைப் புலி, வங்கப்புலி, சிறுத்தை மற்றும் கரடி ஆகியவற்றின் உலாவிடங்களில் பார்வையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

பறவைகள் பூங்காவுக்கு வரவேற்பு: வண்டலூர் உயிரியல் பூங்கா வளாகத்துக்குள் 1 ஹெக்டேர் பரப்பளவில் அண்மையில் அமைக்கப்பட்ட திறந்தவெளி பறவைகள் பூங்காவைப் காண்பதற்கு மக்கள் ஆர்வத்துடன் வந்தனர். இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:_ கடந்த மே மாதம் 5_ஆம் தேதியன்று அதிகபட்சமாக 30 ஆயிரத்துக்கும் மேலான பார்வையாளர்கள் பூங்காவுக்கு வருகை புரிந்தனர். அதன்பிறகு அதே மாதம் 19_ஆம் தேதியன்று 28 ஆயிரம் வந்தனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமை அரசு விடுமுறை என்பதால் 25 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வந்துள்ளனர். இதனால் பூங்காவின் வருவாய் உயர்ந்துள்ளது.

பார்வையாளர்களைக் கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை பூங்கா நிர்வாகம் அறிமுகப்படுத்தி வருகிறது. அடைப்பிடங்களில் வைக்கப்பட்டுள்ள பறவைகளைத் தவிர பூங்கா வளாகத்துக்குள் உள்ள மரங்கள், புல்வெளிகளில் அதிகளவிலான பறவைகள் வசிக்கின்றன. இந்தப் பறவைகளையும் பார்வையாளர்கள் ரசிக்க வழிவகை செய்யும் வகையில் திறந்தவெளி பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டது.

பறவைகள், ஆமைகளுக்கு உணவளிக்கலாம்: ஜனவரி முதல் புதிய திட்டம்

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பறவைகள் மற்றும் ஆமைகளின் இருப்பிடங்களுக்குள் சென்று அவற்றுக்கு உணவளிக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஜனவரி 1_ஆம் தேதி முதல் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. பறவைகள் அல்லது விலங்கினங்களின் உணவு மற்றும் பராமரிப்பு செலவை ஏற்றுக் கொள்ளும் உயிரியல் ஆர்வலர்கள், பார்வையாளர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 11 வெள்ளைப் புலிகள், 4 சிறுத்தைகள், 5 வங்கப்புலிகள், 18 சிங்கங்கள், 762 பறவையினங்கள் உள்பட சுமார் 1,400_க்கும் அதிகமான உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

அவற்றின் உணவு மற்றும் பராமரிப்புக்காக நாளொன்றுக்கு சுமார் ரூ.60 ஆயிரத்துக்கும் அதிகமாக செலவிடப்படுகிறது. பூங்காவில் உள்ள யானை, புலி, சிங்கம், சிம்பன்ஸி குரங்கு, காண்டாமிருகம், சிறுத்தை, ஒட்டகச்சிவிங்கி, மலைப்பாம்பு உள்ளிட்ட உயிரினங்களுக்கு உணவுக்காக அதிக தொகை ஒதுக்கப்படுகிறது.

பாலூட்டி விலங்குகளில் குறைந்தபட்சமாக முள்ளம்பன்றிக்கு ஒரு நாள் உணவுக்கான செலவு ரூ.7.42 ஆகும். அதிகபட்சமாக யானைக்கு ரூ.769 வரை செலவிடப்படுகிறது. பறவைகளில், அந்தந்த இனங்களுக்குத் தகுந்தவாறு ரூ.0.68 முதல் ரூ.64 வரை தனித்தனியே செலவிடப்படுகிறது. இதைத் தவிர பாம்பு, முதலை, ஆமை உள்ளிட்ட உயிரினங்களுக்கும் தனித்தனியே ரூ.1.50 முதல் ரூ.305 வரை உணவுக்காக நாளொன்றுக்கு செலவாகிறது.

அதன் அடிப்படையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயிரினங்களின் உணவு மற்றும் பராமரிப்பு செலவை ஏற்றுக் கொள்ளும் அய்ண்ம்ஹப் ஹக்ர்ல்ற் ல்ழ்ர்ஞ்ழ்ஹம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக உயிரியல் பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதில் பங்குபெறுவர்களுக்கு விதிமுறைகளின் அடிப்படையில் ஆமைகள் மற்றும் பறவைகளின் இருப்பிடங்களுக்குள் சென்று உணவளித்து அவற்றுடன் சில மணி நேரம் இருக்க அனுமதி தரப்பட உள்ளது.

இது குறித்து தலைமை வனக் காப்பாளரும் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநருமான ரெட்டி கூறியதாவது:

வண்டலூர் பூங்காவில் 700_க்கும் அதிகமான பறவையினங்கள் மற்றும் 30_க்கும் மேற்பட்ட ஆமை வகைகள் தனித்தனியே வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதன் இருப்பிடங்களுக்குள் சென்று அவற்றுடன் நேரம் ஒதுக்க வேண்டும்; அவற்றின் நடவடிக்கைகளை அருகில் இருந்து கவனிக்க வேண்டும்; அவற்றுக்கு உணவளிக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும்.

அத்தகைய ஆர்வலர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனை நடைமுறைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக ஆன்_லைன் மூலம் முன்பதிவு செய்யும் முறையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

பார்வையாளர்கள் மற்றும் உயிரின ஆர்வலர்கள் தங்கள் பொருளாதார சக்திக்கு தகுந்தவாறு உயிரினங்களின் உணவு மற்றும் பராமரிப்பு செலவை ஏற்றுக் கொள்ளலாம். குறிப்பிட்ட தொகைதான் தரவேண்டும் என்ற வரையறை கிடையாது என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்