முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்மாடிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சனிக்கிழமை, 21 மே 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, மே 21 - காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்த ஊழல் தொடர்பாக காமன்வெல்த் போட்டி அமைப்பு குழுவின் தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில்  காமன்வெல்த் போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இந்த போட்டிகளில் இந்திய அணி மிகச் சிறப்பான வெற்றியை பதிவு செய்து பதக்கப்பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தது. ஆனால் இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து இதுகுறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணை நடைபெறும் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இதையடுத்து இந்த ஊழல் தொடர்பான விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக காமன்வெல்த் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டார். இந்த ஊழலில் தொடர்புடைய மேலும் பல முக்கிய அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில் நேற்று டெல்லி சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சுரேஷ் கல்மாடிக்கு எதிராக முதல் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையில் காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்துள்ள ஊழல்களில்   சுரேஷ் கல்மாடியே முதல் குற்றவாளி என குறிப்பிடப்பட்டுள்ளது. காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளை செய்வதில் வழங்கப்பட்ட காண்ட்ராக்ட்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் இதற்கெல்லாம் மூலகாரணமாக செயல்பட்டுள்ளவர் சுரேஷ் கல்மாடிதான் என்றும் சி.பி.ஐ. தனது 50 பக்க குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது. மேலும் அந்த குற்றப்பத்திரிகையில் கல்மாடியே முக்கிய பதவியில் இருந்துள்ளார் என்றும், அனைத்து அதிகாரங்களும் அவரிடமே இருந்துள்ளது என்றும் எனவே அனைத்து காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்துள்ள ஊழல்கள் அனைத்திற்கும் அவரே பொறுப்பு  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை வருகிற 23 ந் தேதி நடைபெறும் என்று சிறப்பு சி.பி.ஐ. நீதிபதி தல்வந்த் சிங் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்