முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மின்பற்றாக்குறை விரைவில் நீங்கும்

வியாழக்கிழமை, 2 ஜனவரி 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.3 _  வடமாநிலங்களில் இருந்து தென்மாநிலங்களுக்கு மின்சாரம் கொண்டு வர ரூ.815 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்பாதை திட்டம் நேற்று முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் மின்பற்றாக்குறை நீங்க வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் கூறினர். 

இதுகுறித்து பவர் கிரிட் கார்ப்பரேஷன் அதிகாரிகள் கூறியதாவது:_ 

வடமாநில மின்சாரம் தமிழ்நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின்பற்றாக்குறையை போக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலத்தில் உள்ள மின்நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர ஒடிசா மாநிலம் தாள்சர்_கர்நாடக மாநிலம் கோலார் இடையே உள்ள மின்கடத்தி மற்றும் ஒடிசா மாநிலம் ஜெய்ப்பூர்_ஆந்திர மாநிலம் காஜிவாகா இடையே உள்ள 2 மின்கடத்திகள் மூலம் வடமாநிலங்களிலிருந்து தென்மாநிலங்களுக்கு ஓரளவு மின்சாரம் கொண்டு வரப்படுகிறது.  

வடமாநிலங்களிலிருந்து தென்மாநிலங்களுக்கு மின்சாரத்தை கொண்டு வரும் வகையில் மின்கடத்திகளை பவர் கிரிட் கார்ப்பரேஷன் அமைத்து வருகிறது. குறிப்பாக கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர், மராட்டிய மாநிலம் சோலாப்பூர் இடையே 765 கிலோ வால்ட் திறன் கொண்ட 2 புதிய மின்கடத்திகளை ரூ.815 கோடி மதிப்பில் அமைத்து வந்தது. இந்தப்பணி நிறைவடைந்ததையொட்டி தற்போது வடமாநிலங்களிலிருந்து தென்மாநிலங்களுக்கு மின்சாரம் கொண்டுவரும் மின்கடத்திகள் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. 

திட்டமிட்ட காலகெடுவை விட 5 மாதத்திற்கு முன்பாக இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு மின்சாரத்தை கொண்டுவருவதற்கு இவை பெரிதும் உதவும். இதன் மூலம் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்பற்றாக்குறை குறைய வாய்ப்பு உள்ளது. 

தற்போது வடக்கு, கிழக்கு, மேற்கு பிராந்திய கட்டமைப்புகளை புதிதாக அமைக்கப்பட்டு உள்ள தெற்குபிராந்திய கட்டமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு அரசு வடமாநிலங்களிலிருந்து ஒப்பந்தம் செய்து வாங்க உள்ள 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தையும் எளிதாக கொண்டுவர வாய்ப்பு உள்ளது. 

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்