முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. காணாமலே போய்விட்டது - அமைச்சர் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      அரசியல்
Image Unavailable

மதுரை,மே.22 - நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தி.மு.க. தான் காணாமலேயே போய்விட்டது என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார். 

மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் மேற்குதொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே.ராஜூ,தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் நேற்று மதுரை வந்தார். அவருக்கு அ.தி.மு.க. வினர் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மதுரை நகரில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி ஒரு லட்சத்து 64 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றுள்ளது. மதுரை மக்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு இந்த அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளார்கள். எளிமையான தொண்டனான எனக்கு முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் பதவியை கொடுத்துள்ளார். முதல்வரின் ஆணையினை ஏற்று மதுரை நகர மக்களுக்காகவும் வளர்ச்சிக்காகவும் நான் பாடுபடுவேன். மதுரை மாநகர் இன்றைக்கு ஜெயலலிதாவின் கோட்டையாக மாறிவிட்டது என்பது இந்த தேர்தலில் மக்கள் நிரூபித்துக்காட்டியுள்ளார்கள். மதுரை எப்போதும் அ.தி.மு.க. கோட்டைதான் என்பதை மீண்டும் மக்கள் நிரூபித்து உள்ளனர். 2011-ம் ஆண்டில் அ.தி.மு.க. அழிந்துவிடும். ஒழித்துவிடுவோம் என்று சொன்னவர் குடியிருந்து வரும் வாக்குச்சாவடியில் மட்டும் 558 வாக்குகள் கூடுதலாத கிடைத்துள்ளது. அந்த வாக்குச்சாவடியில் தி.மு.க.வுக்கு 222 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதன் மூலம் மதுரை மக்களால் தி.மு.க. தூக்கி எறியப்பட்டுள்ளது. அ.தி.மு.க. தேர்தலுக்கு பின் காணாமல் போய்விடும் என்று கொக்கரித்தவர்கள் மத்தியில் இன்றைக்கு தி.மு.க.தான் காணாமலேயே போய்விட்டது என்பதை மக்கள் இந்த தேர்தல் மூலம் நிரூபித்துக்காட்டியுள்ளார்கள். 

தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றவுடன் ரவுடிகள், திருடர்கள், கொள்ளையர்கள் ஆகியோர் ஓடி ஒளிந்துவிட்டனர். தமிழகத்தை விட்டே ஓடி விட்டார்கள். மதுரையில் இனி ரவுடிகளின் ராஜ்யம் இருக்காது. கோயில் நகராக மதுரை திகழும். அதற்கான நடவடிக்கையை முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்து வருகிறார். எனது தொகுதி மக்களுக்கு நன்றியை சொல்வதற்காக முதலமைச்சர் என்னை அனுப்பிவைத்திருக்கிறார். அதன்படி நான் இன்று எனது தொகுதி மக்களை நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்தேன். இந்த தேர்தலில் பணம் பாதாளம் வரை பாயும் என்று சொன்னார்கள். அவற்றையெல்லாம் மக்கள் துச்சமென மதித்து தி.மு.க.வை தூக்கி எறிந்து அ.தி.மு.க. வை அமோக வெற்றிபெறச் செய்துள்ளார்கள். அப்படிப்பட்ட மதுரை மக்களுக்கு முதலமைச்சர் சார்பில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மேற்கு தொகுதிக்குட்பட்ட சோலை அழகுபுரம், ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகர் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று வாக்காளர்களுக்கு நன்றியினை தெரிவித்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள குறைகளை பொதுமக்களிடம் கேட்டறிந்தார். உடனடியாக அத்தியாவசிய பணிகள் அனைத்தும் நிறைவேற்றித்தரப்படும் என்று மக்களிடம் அவர் உறுதி அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்