முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூன் 12-ம் தேதிக்குள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யவேண்டும்-பிரவீண்குமார்

திங்கட்கிழமை, 23 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.- 23 ​- ஜூன் 12-ம் தேதிக்குள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று வேட்பாளர்களுக்கு  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் உத்திரவிட்டுள்ளார். 2011-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 13-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு 78.12 சதவீத வாக்குகள் பதிவாகின.டிவுகள் கடந்த 13-ம் தேதி வெளியானது. அ.தி.மு.க. கூட்டணி 203 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.
முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையின் பணியும் வேகமாக நடக்கிறது. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களது செலவு கணக்கை ஜூன் 12-ம் தேதிக்குள் அந்தந்த தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியதாவது:​
இந்த தேர்தலில் 141 பெண் வேட்பாளர்கள் உள்பட 2 ஆயிரத்து 748 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஒவ்வொரு வேட்பாளரும் ரூ.16 லட்சம் வரை தேர்தல் செலவு செய்யலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி, வேட்பாளர்கள் செலவு செய்கிறார்களா என்பதைக் கண்காணிக்க 5 தொகுதிகளுக்கு ஒருவர் வீதம் செலவு பார்வையாளர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
அதே நேரத்தில் வேட்பாளரின் செலவு கணக்கை ஒப்பிட்டு பார்ப்பதற்காக தேர்தல் கமிஷனும் நிழல் கணக்கை பராமரித்தது. வேட்பாளர் சமர்ப்பிக்கும் செலவு கணக்குடன், நிழல் கணக்கு ஒப்பிட்டு பார்க்கப்படும். இந்த இரண்டு கணக்குகளுக்கு இடையே நிறைய வேறுபாடு இருந்தால், சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.
வேட்பாளர் அளிக்கும் விளக்கம் ஏற்கக்கூடியதாக இல்லாவிடில், அவரை 3 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை விதிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்தல் முடிவு வெளியான தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் அனைவரும் தங்களது தேர்தல் செலவு கணக்கை அந்தந்த தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை வேட்பாளர்கள் அனைவரும் ஜூன் 12-ம் தேதிக்குள் செலவு கணக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
வேட்பாளர்களின் செலவுக் கணக்கை ஒப்பிட்டு பார்ப்பதற்காக ஜூன் 12-ம் தேதிவாக்கில் 58 செலவு பார்வையாளர்கள் வருகின்றனர். இவ்வாறு பிரவீண்குமார் கூறினார். 2011-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் கட்சி வாரியாக பெற்ற வாக்குகள் சதவீதத்தை தேர்தல் கமிஷன் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஒரு அரசியல் கட்சி அங்கீகாரம் பெறுவதற்கு, தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளும், இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
இல்லாவிடில், மொத்த தொகுதிகளில் குறைந்தபட்சம் 3 சதவீதம் தொகுதிகளிலோ அல்லது 3 தொகுதிகளிலோ வெற்றி பெற்றிருக்க வேண்டும். இதில், எது அதிகமோ அதுதான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதன்படி பார்த்தால், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 3 சதவீதம் தொகுதி என்பது 7 தொகுதிகளைக் குறிக்கும். தமிழ்நாட்டில் 7 தொகுதிகள்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த கணக்குப்படி பார்க்கும்போது, நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகளில் 5.23 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ள மாநில அளவில் அங்கீகாரம் பெற்ற கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி தனது அரசியல் அங்கீகாரத்தை இழக்கிறது. அதேநேரத்தில் 7.88 சதவீத வாக்குகள் பெற்றுள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகம் அரசியல் கட்சி அங்கீகாரத்தை பெறுகிறது.
முரசு சின்னம், இந்த கட்சியின் அதிகாரப்nullர்வ சின்னம் ஆகும். மொத்தம் பதிவான வாக்குகளில் குறைவான வாக்குகள் பெற்றுள்ள கொங்குநாடு முன்னேற்ற கழகம் (1 சதவீதம்), மனிதநேய மக்கள் கட்சி (0.49 சதவீதம்), புதிய தமிழகம் (0.40 சதவீதம்), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (1.51 சதவீதம்) ஆகிய கட்சிகள் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகள்தான். இவற்றிற்கு இதுவரை அரசியல் அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்