முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறுதிக்கு சென்னை நேரடியாக தகுதிபெறுமா ஐ.பி.எல்.லில் இன்று பரபரப்பான ஆட்டம்

செவ்வாய்க்கிழமை, 24 மே 2011      விளையாட்டு
Image Unavailable

மும்பை, மே - 24- ஐ.பி.எல். தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்து முதல் நான்கு இடங்களைப் பெற்ற அணிகள் இறுதிக் கட்ட போட்டிகளுக்கு தயாராகிவிட்டன. இன்று நடைபெறும் முதலாவது ப்ளே ஆப் போட்டியில் பெங்களூர் ராயல் சேலன்ஜர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இந்த போட்டிகளில் மொத்தம் 10 அணிகள் கலந்துகொண்டன. லீக் போட்டிகளாக 70 போட்டிகள் நடைபெற்றன. இதையடுத்து புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பெற்ற அணிகளான பெங்களூர் ராயல் சேலன்ஜர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் போட்டிக்கு தகுதி பெற்றன. இந்த 4 வது ஐ.பி.எல். போட்டிகளில் வித்தியாசமாக இந்த பிளே ஆப் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் இரண்டு அணிகள் முதல் பிளே ஆப் போட்டியில் கலந்துகொள்ளும். இதில் வெற்றிபெறும் அணி நேரடியாக கிராண்ட் பைனலுக்கு தகுதி பெறும். அடுத்ததாக 3-வது மற்றும் 4-வது இடம்பிடித்த அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெற்ற அணியுடன் முதல் பிளே ஆப் போட்டியில் தோற்ற அணி இறுதி போட்டியில் பங்கேற்க மீண்டும் மோதும். இந்த போட்டியில் வெற்றிபெறும் அணியே கிராண்ட் இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.  
மும்பையில் இன்று நடைபெறும் முதல் பிளே ஆப் போட்டியில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த பெங்களூர் ராயல் சேலன்ஜர்ஸ் அணி, இரண்டாம் இடம் பிடித்த நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சந்திக்கிறது.  இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும். இதனால் இந்த போட்டி இரு அணிகளுக்கும் பெரும் சவாலான போட்டியாக இருக்கும். கடந்த 7 போட்டிகளில் அதிரடியாக விளையாடி ராயல் சேலன்ஜர்ஸ் அணியை புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு கொண்டுவந்தவர் கிறிஸ்கெயில். இவரது அதிரடி தொடரும்பட்சத்தில் அந்த அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் தலைவலியாக மாறும். ஏற்கனவே இறுதியாக பெங்களூரு அணியிடம் தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதற்கு பழிதீர்க்க இந்த போட்டியை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி போட்டி ராசி அதிகம் உள்ள மகேந்திரசிங் தோனிக்கு அவரது ராசி கைகொடுக்கும் பட்சத்தில் அந்த அணியும் வெற்றிக்கு தகுதியான அணியே.
இந்த போட்டியில் தோற்கும் அணிக்கும் ஐ.பி.எல்.லின் புதிய விதிகளின்படி இறுதி போட்டி வாய்ப்பு கிடைக்கும். அதாவது 3-வது, 4-வது இடம்பெற்ற அணிகளுக்கு இடையே நாளை (25.5.11) நடக்கும் போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் இன்று தோற்கும் அணி 27 ம் தேதி மோதும். அந்த போட்டியில் வெற்றிபெறும் அணியே ஐ.பி.எல். கோப்பைக்காக இறுதி போட்டியில் 28 ம் தேதி விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்று தோற்கும் அணிக்கும் மேலும் ஒரு வாய்ப்பு புதிய விதிகளின்படி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 3வது, 4 வது இடம்பெற்ற  அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் தோல்வி பெறும் அணி மட்டுமே உடனடியாக வெளியேற்றப்படும். மற்றபடி இறுதியாக 3 இடங்களை பெற்ற அணிகள் அடுத்து நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கும் தகுதி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்