முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலவச அரிசியை மாதம் முழுவதும் வாங்கிக்கொள்ளலாம் அமைச்சர் செல்லூர் ராஜு அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.- 29 - ரேஷன் கடைகளில் வழங்கப்படவுள்ள 20 கிலோ இலவச அரிசியை மாதம் முழுவதும் (30 நாட்களில்) வாங்கிக்கொள்ளலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜு அறிவித்துள்ளார். கூட்டுறவுத்துறையின் உயர் அலுவலர்கள் கூட்டம், அமைச்சர் செல்லூர் கா.ராஜு தலைமையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது.  கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:-
முதல்​அமைச்சர் ஜெயலலிதா கடந்த 16.5.2011 அன்று பதவியேற்ற உடனே அரிசி பெற தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவச அரிசி வழங்கப்படும் என ஆணையிட்டார். இதன்படி இலவச அரிசி அனைத்து ரேஷன் கடைகளிலும் ஜூன் 1​ந்தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இலவச அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு எந்தவித பிரச்சினைகளும் இன்றி வழங்கப்பட வேண்டும்.
அவ்வாறு வழங்கப்படும் அரிசி தரமானதாகவும், எடை குறைவின்றியும் இருக்க அலுவலர்கள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தவறுகள் ஏற்படாத வகையில் அந்தந்த மண்டல இணைப்பதிவாளர்கள் தகுந்த முன்நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலவச அரிசியை குடும்ப அட்டைதாரர்கள் அவர்களின் வசதிக்கு ஏற்ப மாதத்தின் அனைத்து வேலைநாட்களிலும் ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், அனைத்து ரேஷன் கடைகளும் நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்படுகின்றனவா? என்று அலுவலர்கள் காலையிலேயே நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்வதுடன், ரேஷன் கடைப் பணியாளர்கள், கடையின் பெயர் பலகையில் இருப்பு விவரப்பட்டியலை நாள்தோறும் பொதுமக்கள் அறியும்வண்ணம் எழுதி வைக்கின்றனரா? என கண்காணிக்க வேண்டும். கடைப்பணியாளர்களும் தவறுகளுக்கு இடமளிக்காமல் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றிட வேண்டும்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் பெறுபவர்கள் அந்த கடனை வேறு தொழிலுக்கு பயன்படுத்தாமல் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். மேலும், கூட்டுறவு சிறப்பங்காடிகளில் விற்பனை செய்யும் பொருட்களின் விலையானது, வெளிச்சந்தையில் விற்பனை செய்யும் விலையைவிட குறைவாக உள்ளதால் பொதுமக்கள் கூட்டுறவு சிறப்பங்காடிகளில் பொருட்களை வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்டவாறு அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.
இந்த கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யத்தீந்திர நாத் ஸ்வேன், கூடுதல் பதிவாளர்கள் வே.அமுதவல்லி, அசோகன், பன்னீர்செல்வன், தமிழரசன், ரா.ராஜேந்திரன், சங்கரலிங்கம், எம்.தர்மலிங்கம், ரா.ஜெயராம், ஆர்.கார்த்திகேயன், எம்.பி.சிவனருள் மற்றும் மண்டல இணைப்பதிவாளர்கள், மத்திய கூட்டுறவு வங்கிகளின் தனி அலுவலர்கள், மொத்த விற்பனை பண்டக சாலைகளின் தனி அலுவலர்கள், பொதுவிநியோகத்திட்ட துணைப்பதிவாளர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்