முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாயமான விமானத்தை தேடும் பணியில் இந்திய விமான படை

புதன்கிழமை, 12 மார்ச் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச்.13 - ஐந்து இந்தியர்கள் உள்பட 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தைத் தேடும் பணியில் இந்திய விமானப் படை ஈடுபடுகிறது. 

பல நாடுகள் இணைந்து தேடுதல் பணியை நடத்தி வரும் நிலையில், அந்தமான் கடல் பகுதியையும் உள்ளடக்கி தேடுதல் பணி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மாயமான விமானத்தை கண்டுபிடிக்க உதவும்படி இந்தியாவிடம் மலேசியா கேட்டுக்கொண்டுள்ளது. 

இதையடுத்து, இந்த விவகாரத்தை கையாளவும், உரிய தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லவும் உரிய நபர்கள் நியமிக்கப்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

இந்த நிலையில், மாயமான மலேசிய விமானத்தை தேடுவதற்காக விமானப் படையும் தயார் நிலையில் உள்ளதாக, இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது. 

உரிய உத்தரவு கிடைத்தவுடன், தேடுதல் பணியைத் தொடங்கிவிடுவோம் என்று இந்திய விமானப் படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

ஐந்து இந்தியர்கள் உள்ளிட்ட 239 பேருடன் சனிக்கிழமை நள்ளிரவு சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு புறப்பட்ட மலேசிய விமானம் அடுத்த ஒரு மணி நேரத்தில் காணாமல் போனது. 

கடலில் விழுந்திருக்கலாம் என்று கருதப்பட்டாலும், அந்த விமானத்தின் சிதறல்களோ உடைந்த பாகங்களோ இதுவரை கிடைக்கவில்லை. உரிய தடயங்கள் இன்னும் கிடைக்காதது பெரிய புதிராகவே தொடர்கிறது. 

நீண்ட பரப்பளவுக்கு தேடுதல் மற்றும் மீட்புப் பணி விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக மலேசிய விமானப்படை தலைவர் ரோட்ஸலி தாவுத் தெரிவித்தார். 

விமானத்தைத் தேடும் பணியில் 10 நாடுகளைச் சேர்ந்த குழுவினர் 40 கப்பல்கள் 34 விமானங்கள் ஈடுபடுகின்றன. 

அதேவேளையில், விமானம் மாயமான சம்பவத்தில் பயங்கரவாத தொடர்பு இருக்கலாம் என்பதை மறுக்க முடியாது என்று அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தெரிவித்திருக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்