முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்., தீவிரவாதிகளுடன் விரைவில் அடுத்த பேச்சுவார்த்தை

வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத்,மார்ச்.15 - பாகிஸ்தான் அரசுக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே விரைவில் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இதுகுறித்து தடை செய்யப் பட்ட ஷுரா கவுன்சில் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக பாகிஸ்தான் அரசின் ஹெலிகாப்டரில் பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் பேச்சு வார்த்தைக் குழுவினர் வடக்கு வசிரிஸ்தான் பகுதிக்கு  போய்ச் சேர்ந்தனர்.

மவுலானா யூசுப் ஷா, ஜமாத்-ஐ-இஸ்லாமி அமைப்பின் இப்ராஹிம் கான் மற்றும் மவுலானா அப்துல் ஹாய் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அரசின் தூதுக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான இடம் மற்றும் நேரம் குறித்து ஷுரா அமைப்பினருடன் பேசி முடிவு செய்வார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது.

இடம் முடிவு செய்யப்பட்ட பிறகு, அரசின் தூதுக்குழுவினர் வசிரிஸ்தான் பகுதிக்கு புறப்பட்டுச் செல்வார்கள். தீவிரவாத அமைப்பினருடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 4 உறுப்பினர்களைக் கொண்ட புதிய குழுவை பாகிஸ்தான் அரசு கடந்த புதன்கிழமை அமைத்தது.

இக்குழுவுக்கு துறைமுகம் மற்றும் ஷிப்பிங் துறை செயலாளர் ஹபிபுல்லா கட்டாக் தலைமை வகிப்பார். முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட குழுவில் இடம்பெற்றிருந்த ரஸ்தம் ஷா முகமது மீண்டும் இடம் பிடித்துள்ளார்.

இதுதவிர தன்னாட்சி பெற்ற பழங்குடியினப் பகுதி நிர்வாகத்தின் (எப்ஏடிஏ) கூடுதல் செயலாளர் அர்பப் ஆரிப் மற்றும் பிரதமரின் கூடுதல் செயலாளர் பவத் ஹசன் பவத் ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர். பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் பிரதமர் நவாஸ் ஷெரீபை  சந்தித்துப் பேசிய பின்னர் இந்தக் குழு அமைக்கப்பட்டது.

2-ம் கட்ட பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக அமையும் என தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் சமரச குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஷா தெரிவித்தார். பேச்சுவார்த்தை சுமுகமாக முடிய இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறும் பொது மக்களுக்கு ஷா வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானில் தீவிரவாத செயல்கள் அதிகரித்துள்ளன. இதை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக தீவிரவாத அமைப்புகளுடன் அந்நாட்டு அரசு சமரச முயற்சியில் ஈடுபட முடிவு செய்துள்ளது. இதன்படி முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி உள்ளது.

இதற்கிடையே இந்த நிகழ்வை உன்னிப்பாக கவனித்து வருவதாக ஆப்கனில் முகாமிட்டுள்ள அமெரிக்க மற்றும் நேட்டோ படை கமாண்டர் ஜெனரல் ஜோசப் டன்போர்டு அமெரிக்க எம்.பி.க் களிடம் தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தானின் ஒத்துழைப்பும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நல்லுறவும் ஏற்பட்டால்தான் ஆப்கனில் எதிர்காலத்தில் அமைதி யான சூழல் நிலவும் என்றும் டன்போர்டு கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்