முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவுக்கு நேட்டோ அமைப்பு கண்டனம்

வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,மார்ச்.22 - உக்ரைனின் கிரைமியாவில் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நேட்டோ படை எச்சரித்துள்ளது.

துப்பாக்கி முனையில் நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. அது சட்டவிரோதமானது என்று நேட்டோ அமைப்பு கூறியுள்ளது. இது தொடர்பாக நேட்டோ பொதுச் செயலாளர் ஆண்டர்ஸ் ஃபாக் ராஸ்முஸ்சன் கூறியதாவது:-

ரஷ்யாவின் நடவடிக்கைக்கு தகுந்த பதிலடி தரப்படும். ரஷ்யாவுடன் நேட்டோ செய்து கொண்ட ஒப்பந்தத்தின் ஷரத்துகளை ஆராய்ந்தேன். அனைத்து அடிப்படை விதிமுறைகளையும் ரஷ்யா மீறிவிட்டது. ரஷ்ய ராணுவத்தை எதிர்கொள்ளும் வகையில் நேட்டோ படைகளை ஸ்திரப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

பால்டிக் பகுதியில் வான் வழி கண்காணிப்பை தீவிரப் படுத்தியுள்ளோம். போலந்து, ருமேனியா உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பை பலப்படுத்த தொடங்கியுள்ளோம். நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகள், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.

துப்பாக்கி முனையில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. அது சட்டவிரோதமானது. அமைதியான முறையில் அரசியல் தீர்வை எட்டுவதை தடுக்கும் வகையில் ரஷ்யாவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. பனிப்போருக்கு பிந்தைய கால கட்டத்தில் ஐரோப்பிய கண்டத்தின் பாதுகாப்புக்கும், ஸ்திரத்தன்மைக்கும் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அச்சுறுத்தல் இதுவாகும்.

1994-ம் ஆண்டு உக்ரைனின் ஒருங்கிணைந்த பகுதியையும், இறையாண்மையையும் மதித்து நடப்போம் என்று ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஒப்புக் கொண்டன. இந்நிலையில், அந்த வாக்குறுதியிலிருந்து ரஷ்யா பின்வாங்கியுள்ளது. இதன் மூலம் அந்நாட்டின் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுந்துள்ளது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்