முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராசாவுக்கு பினாமி பெயரில் 14 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்

வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, பிப்.25 - 2 ஜி.ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் கிடைத்த கோடிக் கணக்கான பணத்தைக்கொண்டு பினாமி பெயர்களில் ஆ.ராசா நடத்திய 14 ரியல் எஸ்டேட் நிறுவனங்கல் நடத்தியது குறித்த ஆதாரங்கள் சி.பி.ஐ.க்கு கிடைத்துள்ளன. ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது 2 ஜி. அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முதலில் வந்தவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்டதாக கூறி, தனக்கு வேண்டியவர்கள் ஆதாயம் அடையும் வகையில் ஒதுக்கீடு செய்தார் ராசா. இதற்காக விண்ணப்பம் அனுப்ப நிர்ணயிக்கப்பட்டிருந்த கால அவகாசத்தையும் மாற்றி மறு தேதியை நிர்ணயித்தார். இதனால் அவருக்கு வேண்டியவர்கள் மட்டுமே இந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்றனர். இதனால் அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது. இவ்வாறு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டதை மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியும் உறுதி செய்தார். இந்த இழப்பிற்கு ஆ.ராசாவே காரணமாவார் என்றும் கணக்கு தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு ஆ.ராசா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இப்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. சி.பி.ஐ.யும் அதிரடியாக விசாரணையை மேற்கொண்டுவருகிறது. இதன் அடிப்படையில் ஆ.ராசா கடந்த 2 ம் தேதி  கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அலைக்கற்றை ஊழல் வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிங்வியும், கங்குலியும் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட விதத்தை கடுமையாக கண்டித்துள்ளனர். இதன்மூலம் ஸ்வான், யூனிடெக் போன்ற நிறுவனங்கள் பல ஆயிரம் கோடிக்களை ஆதாயமாக அடைந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஆ.ராசா, சித்தார்த் பெகூரா, சந்தோலியா, ஷாகித் உஸ்மான் பல்வா ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ராசாவின் நெருங்கிய நண்பர்களும், அவரது அண்ணன் கலியபெருமாள் ஆகியோரும் சி.பி.ஐ.யின் கிடுக்கிப்பிடி விசாரணையில் உள்ளார்கள். இவர்களின் வீடுகள், அலுவலகங்கள் போன்றவைகளில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்பது ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக்பாட்சாவால் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் இக்வாஸ் எஸ்டேட்ஸ், கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர், சிவகாமம் டிரேடர்ஸ் என பல்வேறு பெயர்களில் இயங்கிவரும் 14  ரியல் எஸ்டேட் நிறுவனங்களை ஆ.ராசா பினாமி பெயரில் நடத்தி வந்துள்ளார் என்பது சி.பி.ஐ.க்கு கிடைத்த ஆதாரங்களில் தெரியவந்துள்ளது. கறுப்பு பணத்தை வெள்ளையாக்க ரியல் எஸ்டேட்தான் மிகச் சிறந்த வழி என்பதால் இந்த வழியை ராசா தேர்ந்தெடுத்துள்ளார். இங்கிலாந்து, துபாய், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் பணம் அனுப்பப்பட்டு பிறகு அங்கிருந்து ஹவாலா மூலம் இங்கு பணம் அனுப்பப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற தென் மாவட்டங்கள் மட்டுமல்லாமல் வட மாநிலங்களிலும் ராசாவின் பினாமி ரியல் எஸ்டேட்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வந்துள்ளன. ரியல் எஸ்டேட் தொழிலுக்கு டி.பி. ரியாலிட்டீஸ் நிர்வாக இயக்குனர் ஷாகித் உஸ்மான்பல்வா பல்வேறு வகையில் உதவி செய்துள்ளதும் சி.பி.ஐ. விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்