முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷீலா தீட்சித்தை கைது செய்ய பா.ஜ.க. கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 31 மே 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மே31 - காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஏற்பாடு ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர்  ஷீலா தீட்சித்தை கைது செய்ய வேண்டும் என்று டெல்லி பா.ஜ.க. தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்ததில் ஏகப்பட்ட ஊழல்கள் நடந்துள்ளன.

இந்த ஊழல் தொடர்பாக ஏற்கனவே காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் அமைப்பாளர் சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3 முதல் 14 ம் தேதி வரை நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டி ஏற்பாடுகளில் நடந்த முறைகேடுகளில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் வரலாற்று சிறப்புமிக்க ஜந்தர் மந்தர் பகுதியில் பா.ஜ.க. சார்பில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்லி மாநில பா.ஜ.க.தலைவர் விஜேந்தர் குப்தா உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டனர்.

 வி.கே. சுங்குலு கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

காமன்வெல்த் விளையாட்டு ஊழலில் தொடர்புடைய  டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் உள்ளிட்ட பலரையும் கைது செய்து உடனடியாக  ஜெயிலுக்கு  அனுப்ப வேண்டும் என்று விஜேந்திர  குப்தா கேட்டுக்கொண்டார்.

காமன்வெல்த் விளையாட்டு ஊழலில் தொடர்புடைய குற்றவாளிகள் ஒவ்வொருவரும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார். ஆனால் அவர் சொன்னபடி நடக்கவில்லை.  சுங்குலு கமிட்டியை அமைத்ததே அவர்தான் .ஆனால் அந்த விஷயத்தில் மன்மோகன் சிங் அந்தர் பல்டி அடித்து விட்டார் என்றும் குப்தா குற்றம் சாட்டினார்.

டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீது வழக்கு தொடர மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் மறுத்து விட்டார்.

இந்த ஊழல் தொடர்பாக காமன் வெல்த் போட்டி அமைப்பாளர் சுரேஷ் கல்மாடி உள்ளிட்ட சில முக்கிய பிரமுகர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஷீலா தீட்சித் மீது வழக்கு தொடர மத்திய அரசு மறுப்பது ஏன்? என்றும் குப்தா கேள்வி எழுப்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்