முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர் நிறுத்தத்திற்கு கடாபி தயார் - தெ.ஆ அதிபர் தகவல்

புதன்கிழமை, 1 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

திரிபோலி, ஜூன் 1 - லிபியா அதிபர் கடாபி போர் நிறுத்ததிற்கு தயாராக இருக்கிறார் என்று தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா தெரிவித்துள்ளார்.லிபியாவில் அதிபர் மும்மர் கடாபிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சி வெடித்துள்ளது. நீண்டகாலமாக பதவியில் இருக்கும் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று லிபிய மக்கள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். ஆனால் தான் பதவி விலக முடியாது என்று லிபிய அதிபர் கடாபி அடம்பிடித்து வருகிறார். இந்த நிலையில் உள்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாகவும் கடாபியின் அரசு படைகளுக்கு எதிராகவும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் லிபியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் கடாபியின் மகன்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் பலியாகி இருக்கிறார்கள். தலைநகர் திரிபோலி மீதான தாக்குதலை நேட்டோ படைகள் தொடர்ந்து நடத்தி வருகின்றன. 

இந்த நிலையில் போர் நிறுத்தத்திற்கு கடாபி தயாராக இருப்பதாக தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா தெரிவித்தார். ஆப்பிரிக்க யூனியன் தலையீட்டின் பேரில் ஒரு போர் நிறுத்தத்தை கொண்டுவருவதற்கு கடாபி தயாராக இருப்பதாகவும் அதன் மூலம் அனைத்து தாக்குதல்களையும் நிறுத்துவதற்கு வழி ஏற்படும் என்றும் ஜேக்கப் ஜுமா தெரிவித்தார். நாட்டின் வருங்காலம் குறித்து தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க லிபிய மக்கள் அனைவருக்கும் சந்தர்ப்பம் வழங்கலாம் என்று கடாபி தெரிவித்துள்ளதாக ஜுமா கூறினார். 

ஆனால் கடாபி பதவி விலக தயாரில்லை என்றும் அவர் கூறினார். கடாபி பதவி விலக வேண்டும் என்பதுதான் நேட்டோ படைகளின் முக்கிய கோரிக்கை. ஆனால் அவர் பதவி விலகமாட்டார் என்றும், வேண்டுமானால் போர் நிறுத்தத்திற்கு அவர் தயாராக இருக்கிறார் என்றும் ஜுமா குறிப்பிட்டார். ஜேக்கப் ஜுமாவின் இந்த பேச்சு லிபிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்