முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செப்டம்பர் 15-ம் தேதி முதல் மின்விசிறி-மிக்ஸி-கிரைண்டர்

வெள்ளிக்கிழமை, 3 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை,மே.4 - அண்ணாவின் பிறந்த நாளான வரும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி முதல் பெண்களுக்கு மின்விசிறி,மிக்ஸி, கிரைண்டர் ஆகியவை வழங்கப்படும் என்று தனது உரையில் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா தெரிவித்தார். அதேபோல் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்றும் கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று தமிழக சட்டப்பேரவையில் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா இதுகுறித்து பேசியதாவது:- 

இந்த அரசு, அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதியன்று மகளிருக்கு மின் விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்கும் திட்டத்தைத் தொடங்கும். 2011-2012-ம் ஆண்டு சுமார் 25 இலட்சம் குடும்பங்கள் இத்திட்டத்தில் பயன்பெறும். பொதுவிநியோகத் திட்டத்தில் அரிசி பெறத் தகுதியுடைய சுமார் 1.83 கோடி குடும்பங்களைச் சேர்ந்த மகளிர் இத்திட்டத்தினால் படிப்படியாகப் பயனடைவர். முதலமைச்சர் ஏற்கனவே உறுதி அளித்துள்ளபடி மீதமுள்ள அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் அடுத்த ஒன்றரை ஆண்டில் இந்த அரசால் நிறைவேற்றப்படும்.

கிராமப்புறங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை வசதி, 24 மணி நேர மருத்துவ வசதி, தரமான கல்வி, அனைத்து பருவ காலங்களிலும் பயன்படுத்தக்கூடிய சாலைகள் போன்ற வசதிகளை ஏற்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இந்த அரசு பாடுபடும். நகர்ப்புறங்களுக்கு இணையான வசதிகள் கிராமப் புறங்களில் ஏற்படுத்தப்படும். சோதனை அடிப்படையில் கிராமப் புறங்களில் சூரிய எரிசக்தியைப் பயன்படுத்தும் தெரு விளக்குகள் அமைக்க இந்த அரசு முயற்சி மேற்கொள்ளும், சூரிய எரிசக்தியைப் பயன்படுத்துவதில் ஆரம்பகட்ட மூலதனச் செலவு தற்பொழுது அதிகமாக இருந்தாலும் வருங்காலத்தில் தொழில்நுட்ப மேம்பாடு, பயன்பாட்டு அளவில் உயர்வு ஆகியவற்றால் ஒரு அலகுக்கான மூலதனச் செலவு குறைந்து தெரு விளக்குகள் மற்றும் பிற சமுதாய எரிசக்தி தேவைகளுக்கு இது ஒரு நிரந்தரமான மாற்று தீர்வாக அமையும் என இந்த அரசு கருதுகிறது.

தமிழ்நாட்டில் கலைநயமிக்க கட்டடங்கள், புராதனச் சின்னங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளதால் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்தை அடுத்த ஐந்தாண்டுகளில் 60 இலட்சம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளையும், 40 இலட்சம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கக்கூடிய வகையில் சர்வதேச சுற்றுலா மையமாக மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இந்த அரசு சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ளும் கிராமப் புறங்களையும், நகர்ப் புறங்களையும் தூய்மைப்படுத்த ஒரு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்கிப் போகாத ப்ளாஸ்டிக் பொருட்களை மக்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் பொருட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு சிறப்பு தகவல் கல்வித் திட்டம் தொடங்கப்படும். முதன் முறையாகவோ அல்லது மறு சுழற்சி மூலமோ தயாரிக்கப்படும் 60 மைக்ரான் மற்றும் 8ஞ்12 இஞ்ச் அளவுக்குக் குறைவான பாலிதின் பைகளுக்கு தடை விதிக்கப்படும். இந்திர தர நிர்ணயக் கழகத்தால் நிர்ணயிக்கப்பட்ட விதிகளுக்குட்பட்டு ப்ளாஸ்டிக் பொருட்களுக்கான மறுசுழற்சிமுறை கடுமையாக ஒழுங்கு முறைபடுத்தப்படும்.

 

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்

 

அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய தரமான மருத்துவச் சேவையை வழங்குவதே இந்த அரசின் நோக்கமாகும். தற்போதுள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மக்களின் தேவைகளை நிறைவு செய்யத்தக்க வகையில் முழுமையாக இல்லை என்பதால், இத்திட்டம் கைவிடப்படும். அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை வழங்கும் நோக்கத்தை எட்டக்கூடிய வகையில் ஒரு புதிய பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை இந்த அரசு அறிமுகப்படுத்தி அனைவரும் மருத்துவ வசதி பெறுவதை உறுதி செய்யும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த இந்த அரசு சிறப்பு கவனம் செலுத்தும், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏழை மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் 24 மணி நேரம் செயல்படும் மையங்களாக மாற்றியமைக்கப்படும். மருத்துவச் சுற்றுலாவை ஒரு பெரிய அளவில் ஊக்குவிக்க ஆராய்ச்சி வசதிகளுடன் கூடிய மருத்துவ நகரங்கள் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும். மருத்துவத் துறையில் தனியார் மூலதனத்தை அதிகரிக்கும் வகையில் தெளிவான வழிமுறைகளை இந்த அரசு வகுக்கும். இவ்வாறு அவர் தனது உரையில் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்