முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவ் அரித்துவார் கொண்டு செல்லப்பட்டார்

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ஜூன்.- 6 - ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் டெல்லியில் நேற்று முன்தினம் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். பல முறை மத்திய அரசு கேட்டுக் கொண்ட பிறகும் அவர் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து விட்டார். ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக டெல்லியில் உண்ணாவிரதம் இருந்த ராம்தேவை ஆதரித்து நாடெங்கும் பல லட்சக்கணக்கானோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். நேற்று ராம்தேவுடன் காந்தியவாதி அண்ணா ஹசாரேயும் உண்ணாவிரதத்தில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். இதனால் ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக மிகப் பெரும் எழுச்சி உண்டாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராம்தேவ் உண்ணாவிரதத்தை முறியடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ராம்தேவும் அவரது ஆதரவாளர்களும் உண்ணாவிரதம் இருந்த ராம்லீலா மைதானத்திற்கு கூடுதல் போலீஸ் படை வரவழைக்கப்பட்டது. மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளை சீல் வைத்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கைகளை பார்த்த அவரது சீடர்கள் ஏதோ நடக்கப் போகிறது என்பதை உணர்ந்து ராம்தேவை சுற்றி வளையம் அமைத்திருந்தனர். நள்ளிரவு ஒரு மணி அளவில் போலீஸ் உயரதிகாரிகள் ராம்தேவிடம் வந்து பேசினார்கள்.
யோகா பயிற்சி முகாம் நடத்துவதற்காகத்தான் இந்த மைதானம் உங்களுக்கு வாடகைக்கு தரப்பட்டது. ஆனால் உண்ணாவிரதம் இருப்பது சட்டவிரோத செயலாகும். எனவே அமைதியாக வெளியேறுங்கள் என்றனர். போலீசாரின் கோரிக்கையை ராம்தேவ் ஏற்கவில்லை. இதனைத் தொடர்ந்து ராம்தேவை நோக்கி அதிரடிப் படை போலீசார் விரைந்தனர். உடனே நூற்றுக்கணக்கானோர் ராம்தேவை சூழ்ந்து நின்று கொண்டனர். அப்போது மைதானத்தில் தூங்கிக் கொண்டிருந்த அனைவரும் பரபரப்பாக அங்குமிங்கும் ஓடினர். இரண்டரை மணியளவில் மேடையில் இருந்து கீழே குதித்த ராம்தேவ் இரண்டு சீடர்கள் தோள் மீது ஏறி இருந்தபடி பேசினார். யாரும் வன்முறைகளில் ஈடுபட கூடாது. அமைதியாக இருங்கள். யாரும் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டார்.
அப்போது போலீசாருக்கும், மைதானத்தில் திரண்டிருந்தவர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. உண்ணாவிரதம் இருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். அந்த சமயம் ராம்தேவை போலீசார் குண்டுகட்டாக தூக்கிக் கொண்டு வெளியில் சென்றனர். அவருடன் ஆச்சார்ய பாலகிருஷ்ணன், ஜெய்தீப் ஆர்யா ஆகியோரும் அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பிறகு ராம்தேவ் காரில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை என்று உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை கூறினார். டெல்லி போலீசாரும் ராம்தேவை கைது செய்யவில்லை என்றனர். டெல்லிக்கு வெளியே அழைத்து செல்லப்பட்டு விட்டதாக போலீசார் அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 4 மணிக்கு மைதானத்தில் இருந்தவர்களும் முழுமையாக வெளியேற்றப்பட்டனர். இதனால் ராம்தேவின் காலவரையற்ற உண்ணாவிரதம் அதிரடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. போலீசாரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட ராம்தேவ் எங்கே வைக்கப்பட்டுள்ளார் என்பது அதிக நேரம் மர்மமாக இருந்தது. நியு போலீஸ் லைனில் உள்ள ஆபீசர்ஸ் மெஸ்சில் அவரை போலீசார் சிறிது நேரம் வைத்திருந்தனர். அப்போது டெல்லியில் இருந்து வெளியேற ராம்தேவ் சம்மதித்தார். உடனே அவர் அரித்துவாருக்கு அழைத்து செல்லப்பட்டு விட்டதாக முதலில் தகவல் வெளியானது. பிறகு புறநகரில் இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் போலீசார் ராம்தேவை டேராடூனுக்கு கொண்டு செல்லப்பட்டது நேற்று காலை உறுதிப்படுத்தப்பட்டது.
நேற்று காலை சப்தர்ஜங் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் டேராடூன் வழியாக அரித்துவாரில் உள்ள அவரது முகாமுக்கு ராம்தேவ் அழைத்து செல்லப்படுவதாக மத்திய உள்துறை செயலாளர் பிள்ளை கூறினார். 11.45 மணியளவில் அரித்துவாரில் உள்ள அவரது ஆசிரமத்தை சென்றடைந்தார். ரகசிய இடத்தில் இருந்து பத்திரிக்கை நிருபர்களை தொடர்பு கொண்ட ராம்தேவ், அரசு மீது சரமாரியாக குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து நாடெங்கும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்